எனக்கும் என் தெய்வத்துக்குமிடையேயான வழக்கு

எனக்கும் என் தெய்வத்துக்குமிடையேயான வழக்கு

http://solvanam.com/?p=10075

நெருக்கமான நண்பர்களிடம் இருந்தும் கூட சிலசமயம் தொலைபேசி அழைப்புகள் வரும்.

“ப, பா, பி, பீ, பு, பூ, பெ, பே, பை, பொ, பொ, பெள லே ஆரம்பிக்கப்பட்ட நல்ல பேராச் சொல்லுங்க!”

“ஆம்பிளைப் பிள்ளையா? பொம்பளைப் பிள்ளையா?”

“பொம்பளைப் பிள்ளைதான்” அதில் ஒரு அலட்சியத் தொனியும் அங்கலாய்ப்பும்.

“உங்களுக்கு ஆரு?”

“தம்பிக்க மக… சோசியரு இங்கிலீசு பி-யிலே தொடங்கப்பட்ட பேரா வய்க்கச் சொல்லுதாரு!”

“ ‘பி’ண்ணா பூனாவா, பாம்பேயா?”

“பி ஃபார் பொட்டேட்டோ”

“ஓ அது சரி. பிள்ளை என்ன நச்சத்திரம்?”

“அது தெரியாதுல்லா!”

“அதும் அப்பிடியா? நீங்கோ பிள்ளைக்கு அப்பனைப் பெத்த ஆத்தா பேரு, அம்மையைப் பெத்த ஆத்தா பேர் வய்க்க மாட்டேளா?”

“அது வளக்கமில்லே பாத்த்துக்கிடுங்க”

“எத்தனை எளுத்திலே வேணும்?”

“ரெண்டு அல்லது மூணு எளுத்து. கூடிப்போனா நாலு எளுத்து”

“ஒரு எளுத்து ஆகாது?”

“அது வேண்டாம்” ஒரு வேளை “பூ” என்று வைத்துவிடுவேனோ என்று அஞ்சியிருக்கலாம்.

“ம்… சரி… விஜயா பதிப்பகத்திலே கேட்டா, ஆண்-பெண், இந்து – இஸ்லாம் – கிறிஸ்துவம், முற்போக்கு, தனித்தமிழ் பெயரு வைக்க நல்லா தடிப் பொஸ்தகமா தருவாங்க…”

“அதெல்லாம் வேண்டாம்… நீரே சொன்னாப் போரும்”

நெருங்கிய இலக்கிய நண்பராக இருப்பார். பகைத்துக்கொள்ள இயலாது. நான் பாட்டுக்குத் திண்டுக்கு முண்டு ஏதும் சொன்னால் வெள்ளாளத் திமிர் எனக் கட்டுரை எழுதவும் ஆகும்.

“சரி கொஞ்சம் சமயம் கொடுங்க… யோசிச்சுச் சொல்லுகேன்”

“சரி அண்ணாச்சி, காலம்பற கூப்பிடுகேன்”

இந்த உரையாடல் நடக்கும்போது இரவு பத்தரை மணியாக இருக்கும். இனி விடிவதற்குள் ‘P’யில் தொடங்கும் பெண்பாற் பெயர், 2 முதல் 4 எழுத்துக்குள் யோசிக்க வேண்டும். அதுவும் நண்பர் பகுத்தறிவு, முற்போக்கு, தனித்தமிழ்ப் பாசறை எனில் சாமிப்பெயர், மரபுப்பெயர் ஆகாது. பரமேஸ்வரி, பகவதி, பச்சை நாயகி என யோசிக்க இயலாது. உச்சரிப்பில் Bயும் வரலாகாது. நாமே விஜயா பதிப்பகத்துச் சிதம்பரத்துக்கு ஃபோன் செய்யலாம் எனில் கடை சாத்தி இருப்பார்கள். இனி காலை ஒன்பது மணிதான். வேலாயுத அண்ணாச்சி ஊரில் இருந்தால் ஒரு புத்தகமே ஆனாலும் காலை ஏழுமணிக்குத் திறந்து எடுத்துத் தருவார். சிதம்பரத்திடம் அதுவும் நடக்காது. ஒரு எழுத்தாளனாக இருப்பதில் எத்தனை துன்பம் பார்த்தீர்களா? பிறந்து, வளர்ந்து, உண்டு, படித்து, வேலைபார்த்து, தாம்பத்யம் நடத்தி, சீரியல் – சினிமா பார்த்து கொடுங்கூற்றுக்கு இரையெனப்பின் மாயும் ஓர் அற்ப மானுட சீவனுக்கு – விபத்தில் மாண்டால் இரண்டு இலட்ச ரூபாய் நஷ்ட ஈட்டுக்குத் தகுதியானவருக்கு – பெயர் வைக்க, எய்ட்ஸுக்கு மருந்து காணும் முயற்சி போல் தம்பதியர் உழைக்கும்போது, பல நூறு ஆண்டுகள் சீவித்திருக்கப் போகிற – சீவித்திருக்குமா என்பதோர் உப கேள்வி – புத்தகத்துப் பெயரிட எத்தனை சிரமப்பட வேண்டும்?

நீளமாக இருந்தாலும் மலையாளத்தில் அற்புதமாய்த் தலைப்பு வைப்பார்கள், சிறுகதை, நாவல், நாடகத்துக்கு. பி.கெ.பாலகிருஷ்ண பிள்ளை எழுதிய ‘இனி ஞான் உறங்கட்டெ?’ எனும் நாவலை சாகித்ய அகாதமிக்காகத் தமிழாக்கம் செய்த, தமிழின் அற்புதமான சிறுகதை ஆசிரியர்களில் ஒருவரான ஆ.மாதவன் பட்டபாடு எனக்குத் தெரியும். பாரதப்போர் முடிந்த பிறகு, வெஞ்சினம் ஈடேறி வெற்றிக் கனிக்குப் பிந்தைய விரக்தி, உபபாண்டவர் மரணம் ஈந்த சோகம், அலுப்பு, களைப்பு, சோர்வு யாவும் தொனிக்க திரெளபதி கேட்பதானது அந்தத் தலைப்பு. கெஞ்சல் தொனியுடனும் விடுபட முயன்றும், ‘இனி ஞான் உறங்கட்டெ?’. திரெளபதியின் உறக்கம் எனத் தொடங்கி, தொடர்ந்து பல தலைப்புகள் பரிசீலித்து, ‘இனி ஞான் உறங்கட்டும்’ என்று நிலைத்தார் ஆ.மாதவன். எனக்கும் அதில் கொஞ்சம் பங்குண்டு. ஆனால் இருவருக்குமே நிறைவில்லாத தலைப்பு. யோசித்து, மேலும் பொருத்தமாக ஒரு தலைப்புச் சொல்லுங்கள், ஒரு சவால் எனக்கொண்டு.

உலகத்து நாடகங்களில் பல, கருத்தாழம் மிக்க தலைப்புகள் கொண்டவை. உங்களுக்கு நினைவிருக்கும் மலையாளத்து தோப்பில் பாசி நாடகத் தலைப்பு ‘நிங்ஙள் என்ன கம்மூனிஸ்ட் ஆக்கி’. வேறொரு மலையாள நாடகத் தலைப்பு ‘கிறிஸ்துவின்ட ஆறாம் திருமுறிவு’. கிறிஸ்துவை சிலுவையில் அறையும்போது ஆணியடித்து ஆழமான காயங்கள் ஏற்படுத்திய இடங்கள் ஐந்து. அந்த நாடகம் ஆறாவது ஆணி பற்றிக் குறிப்புணர்த்துவது. முறிவு எனில் காயம், திரு என்பது சிறப்பு அடைமொழி.

பரபரப்பாக அந்தக் காலத்தில் பேசப்பட்ட பஞ்சாபி நாடகங்களின் தலைப்புகளே நகைச்சுவையுடன் இருந்தன. ‘சடீ புட்டேனு ஜவானி’ எனும் நாடகத் தலைப்பின் தமிழ்ப் பெயர்ப்பு என்றால் ‘கிழவனுக்கு வாலிபம் ஏறிவிட்டது’ எனலாம். இன்னொரு தலைப்பு, ‘ஸாலி ஆதே கர்வாலி’. தமிழில், ‘மைத்துனி பாதி வீட்டுகாரி’ எனலாம். எங்கள் ஊரில் ஒரு சொலவம் உண்டு. ‘அண்ணன் பொண்டாட்டி அரைப் பொண்டாட்டி, தம்பி பொண்டாட்டி தன் பொண்டாட்டி’ என்று. அதுபோல.

ஆங்கில நாடகத் தலைப்பு, ‘Waiting for Godart’ஐ மறந்திருக்க மாட்டீர்கள். பாதல் சர்க்கார் எனும் வங்காள நாடகத் தலைப்பு ‘ஜுலுஸ்’. எனில் ‘ஊர்வலம்’. பரீக்‌ஷா ஞாநி, அதிலிருந்துதான் தனது நாடகத் தலைப்பான ‘பலூன் ஊர்வலம்’ பெற்றிருப்பார். சுரேஷ்வர்மாவின் இந்தி நாடகம் ‘சூரஜ் கா அந்திம் கிரண் சே சூரஜ் கா பஃஹ்லே கிரண் தக்’ என்பது தமிழில் மொழிபெயர்ப்பாகி வந்தது ‘சூரியனின் கடைசிக் கிரணத்தில் இருந்து சூரியனின் முதல் கிரணம் வரை’. நாடகத்தைப் பார்த்தவன், வாசித்தவன் எனும் ரீதியில் எனக்கு அந்தத் தலைப்பு என்றுமோர் மயக்கம். ‘சாந்த்ததா, கோர்ட் சாலு ஆஹே’ என்பது மராத்திய நாடகத் தலைப்பு. ‘அமைதி காக்க. நீதிமன்றம் நடக்கிறது’ என்று உத்தேசமாகச் சொல்லலாம். இன்னொரு மராத்தி நாடகம், ‘மோகன் ஜோஷி ஹாஸிர் ஹோ?’ பொருள், ‘மோகன் ஜோஷி ஆஜராகி இருக்கிறீரா?’

முன்பு அமோல் பாலேகர், அவர் மனைவி சித்ரா பாலேகர் கிராமத்து நிலப்பிரபுத்துவக் கணவன் – மனைவியாகவும் ஸ்மிதா பாட்டில் குழந்தைப் பேறில்லாத வைப்பாட்டியாகவும் நடித்த மராத்தி சினிமா ஒன்று வந்தது. முப்பது ஆண்டுகள் இருக்கும். மும்பாயில் ஞான.ராஜசேகரனுடன் சேர்ந்து பார்த்த அபூர்வமான படங்களில் ஒன்று. மக்கட்பேறு வேண்டி கிராமத்து உக்கிர தேவதைக்கு பத்து வயதுச் சிறுமியைப் பலி கொடுக்கும் படம். புணே பக்கத்துக் கிராமம் ஒன்றில் நடந்த சம்பவத்தை ஆதாரமாகக் கொண்டது. பலி செய்து கிண்ணத்தில் ஏந்திய சிறுமியின் ரத்தத்தைப் பெண் தெய்வத்துக்கு தெளிக்கும் காட்சியில் வாந்தியைக் கட்டுப்படுத்தப் பிராயாசைப்பட வேண்டியிருந்தது. பின்னொரு நாளில், வொர்லி NFDC அலுவலகத்தில், தமிழ்ச் சிறுகதை, நாவல்களில் முக்கியமானவரான பூமணியின் சினிமாத் தயாரிப்புக்கான உதவித் தொகை பற்றி விசாரிக்க NFDC தலைவராக இருந்த அமோல் பாலேகரைச் சந்தித்து உரையாடியபோது, அந்த மராத்தி சினிமா பற்றி பாராட்டிச் சொன்னேன். படத்தின் தலைப்பு ‘அக்ரீத்’. எனக்குத் தெரிந்த தமிழில் அதை ஒற்றைச் சொல்லில் பெயர்க்க இயலாது. வேண்டுமானால் ‘எது நடந்திருக்கக் கூடாதோ அது நடந்து விட்டது’ எனலாம்.

பால்சக்கரியாவின் சிறுகதை ஒன்றின் தலைப்பு, தமிழில் ‘ஏசுபுரம் பப்ளிக் லைப்ரரியைப் பற்றியதோர் குற்றச்சாட்டு’. காக்கநாடனின் சிறுகதை என்று நினைவு, தலைப்பு ‘சொர்க்கத்துக்கு ஒரு அடியீடு மட்டும்’. இந்த சந்தர்ப்பத்தில் சா.கந்தசாமியின் சிறுகதைத் தலைப்பை என்னால் நினைக்காமல் இருக்க இயலாது. ‘தக்கையின் மீது நான்கு கண்கள்’. பின்னர் அஃதோர் குறும்படமாக வந்தது.

எனக்குப் பிடித்த சில மொழிபெயர்ப்பு நாவல்களின் தலைப்புகள், ‘நீலகண்டப் பறவையைத் தேடி’, ‘கங்கைப் பருந்தின் சிறகுகள்’ போன்றவை. நேஷனல் புக் டிரஸ்ட் மொழிபெயர்த்து வெளியிட்டவை.

ஒரு புத்தகத்தின் முகம் தலைப்பு. புத்தகத்தின் பாடுபொருளைத் தலைப்பு நேரடியாகவோ, மறைமுகமாகவோ, பூடகமாகவோ கோடி காட்ட வேண்டும். வாசக மனத்தைக் கவர்வதாக, யோசிக்க வைப்பதாக, கற்பனைக்கு இடமளிப்பதாக, கவித்துவத்துடன் இருக்க வேண்டும். நேரடியான தலைப்புகள் கவர்ச்சி அற்றன, வாசக வரவேற்பைப் பெறாமற் போயின எனக் கூறவரவில்லை ஈண்டு.

‘Old Man And The Sea’ எனும் எளிமையான தலைப்பைத் தனது நாவலுக்குச் சூட்டுமுன் எர்னஸ்ட் ஹெமிங்வே நூற்றுக்கும் மேற்பட்ட தலைப்புகளை யோசித்ததாகச் சொல்வார்கள்.

ச.து.சு.யோகியார் அதைத் தமிழில் பெயர்த்தபோது ‘கடலும், கிழவனும்’ எனப் பெயர் சூட்டினார். சமீபத்தில் காலச்சுவடு வெளியீடாக வந்த எம்.எஸ் மொழிபெயர்ப்பு ‘கிழவனும் கடலும்’ எனத் தலைப்பிட்டது. இரண்டுக்கும் உள்ள நுட்பமான தொனி வேறுபாட்டை நாம் கருத்தில் கொள்ளலாம்.

சா.கந்தசாமியின் நாவல் தலைப்புகளில் சிறப்பானது ‘அவன் ஆனது’. இந்தத் தலைப்பை ஆங்கிலத்தில் பெயர்க்க யோசித்தால் சுவாரசியமாக இருக்கும். இந்தத் தலைப்பைச் சூட்டியவர் ஞானக்கூத்தன் என்று எனக்கு யாரோ சொன்னார்கள். அசோகமித்திரனின் ‘பதினெட்டாவது அட்சக்கோடு’, நகுலனின் ‘நினைவுப் பாதை’, எஸ்.செந்தில்குமாரின் ‘முறி மருந்து’ எனும் தலைப்புகள் என்னை வசீகரித்தவை.

கவிதைத் தொகுப்புகள் சிலவற்றின் தலைப்புகள் சில பிரமிக்க வைப்பவை. எனது முதல் மதிப்பெண் யூமா வாசுகியின் ‘அமுத பருவம் வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு’. தலைப்பே ஒரு கவிதை.

பிரான்சிஸ் கிருபாவின் ‘நிழலன்றி ஏதுமற்றவன்’, தமிழ்நதியின் ‘சூரியன் தனித்தலையும் பகல்’, சமயவேலின் ‘காற்றின் பாடல்’, சக்தி ஜோதியின் ‘நிழல் புகும் சொற்கள்’, தாணு பிச்சையாவின் ‘உறைமெழுகின் மஞ்சாடிப்பொன்’ உடனடியாக நினைவுக்கு வரும் சில.

ஜெயமோகனின் சிறுகதைத் தலைப்பு ‘திசைகளின் நடுவே’, பா.திருச்செந்தாழையின் ‘ஆண்கள் விடுதி: அறை எண் 12’, அழகிய பெரியவனின் ‘திசையெல்லாம் அவர்கள் கொண்ட கிராமம்’, ஜே.பி.சாணக்கியாவின் ‘உடைந்த புல்லாங்குழல்’ வேறுபட்ட தலைப்புகள்.

நின்று நிதானமாக யோசிக்க வைத்து, கற்பனையின் வெளியை விரித்து, நல்ல கவிதை ஒன்றினை வாசித்த அனுபவத்தை ஒரு தலைப்பே தந்துவிடுவதுண்டு.

கோவையைச் சேர்ந்த இளம் படைப்பாளி கனகலட்சுமி, கால்செண்டர் ஒன்றில் வேலை பார்ப்பவர். மேடைப் பேச்சாளர், அவ்வப்போது எழுதுகிறவர். கிராமத்துச் சூழலில் பிறந்து வளர்ந்து, கால் செண்டர்களில் வேலை பார்க்கும் இளம்பெண்களின் தொழில் ஒவ்வாமை பற்றி எழுதிய நாவல் விரைவில் வெளியாக உள்ளது. என்னிடம் சில தலைப்புகள் சொன்னார். அவற்றுள் ஒன்று ‘பேச்சரவம் கேட்டிலையோ?’. அந்தத் தலைப்பில் தமிழச்சி தங்கப்பாண்டியனின் நூலொன்று உண்டு என்றேன். ‘நடுநிசி’ என்றார். சுந்தர ராமசாமியின் கவிதைத் தலைப்பொன்று ‘நடுநிசி நாய்கள்’ என்றேன்.

‘காசும் பிறப்பும்’ என்றொரு தலைப்பு ஓடியது என் மனதில். ஆனால் அதற்கொரு தெளிவுரை எழுத வேண்டும் கையோடு.

‘என்பிலதனை வெயில் காயும்’ என்று என் இரண்டாவது நாவலுக்குத் தலைப்பு வைத்தபோது வண்ணதாசன் எனக்கு எழுதினார் – ‘இந்தத் தமிழ் மீது யாருக்கும் கோபமில்லை. எளிமையாக வெயில் என்றே வைத்திருக்கலாம்’ என. அந்த நாவல் மூன்றாம் பதிப்பு வந்தபோது, அட்டை வடிவமைத்தபோது, பிழையாகத் தலைப்பு ‘என்பிதலனை வெயில் காயும்’ என மாறிவிட்டது. என் மனைவிதான் கண்டு சொன்னாள். வேறு எவருமே கவனிக்கவில்லை என்பதோர் வாழ்நாள் சோகம். வண்ணதாசனின் முதல் சிறுகதைத் தொகுப்புக்கு அவர் வைத்த பெயர் ‘கலைக்க முடியாத ஒப்பனைகள்’. அந்தப் புத்தகத்தின் தலைப்பும், பரந்தாமனின் தயாரிப்பும் என்றும் நினைவில் நிற்பவை.

எனது ஆறாவது நாவலின் தலைப்பு ‘எட்டுத்திக்கும் மதயானை’. சமீபத்தில் ‘Against All Odds’ ஆங்கிலத்தில் பெயர்க்கப்பட்டு வந்தது, கிழக்குப் பதிப்பகம் வெளியீடு. அந்தத் தலைப்பை நான் இந்தியத் தொன்மங்களில் இருந்து எடுத்துக் கொண்டேன். திசையானைகள் எட்டும் பூமியைத் தாங்குகின்றன என்பது தொன்மம். ‘திசையானை மருப்பொசித்துச் செருச் செய்து’ என்றொரு பாடல்வரி உண்டு. ஆண்டாள், ‘மருப்பொசித்த மாதவன்தன் வாய்ச்சுவையும் நாற்றமும் விருப்புற்றுக்’ கேட்டவள் ஆழி வெண் சங்கிடம். திசையானைகள் எட்டும் ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புட்ப தந்தம், சார்வ பெளமம், சுப்ர தீபம் எனும் நாமங்கொண்ட களிறுகள். அவற்றின் பிடி யானைகளுக்கு அப்பிரமை, கபிலை, பிங்களை, அனுபை, தாம்ரபரணி, சுப தந்தி, அங்கனை, அஞ்சனாவதி என்பன நாமங்கள்.

திசையானைகளைப் போரிட்டு, அவற்றின் தந்தங்கள் மார்பிலே பாய்ந்து முறிந்ததைப் பிடுங்கி வீசாமல், அவற்றில் நவமணிகள் பதித்து ஆபரணம் போலக் கொண்டு நடந்தான் இராவணன் என்றொரு தொன்மம் உண்டு. கம்பன் இராவணனை, ‘வாரணம் பொருத மார்பும் வரையினை எடுத்த தோளும் நாரத முனிவர்க்கு ஏற்ப நயம்பட உரைத்த நாவும்’ என்பான். வாரணம் எனில் யானை, வரை எனில் மலை, ஈண்டு கைலாயம்.

பூமி உருண்டையைத் திசை எட்டில் நின்று சுமக்கும் அட்ட திக்கயங்களுக்கும் மதம் பிடித்தால் எனும் கற்பனையே நாவலின் தலைப்பு ‘எட்டுத் திக்கும் மதயானை’.

சமீபத்தில் கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுத் திசையில் நான் தலைவைத்துப் படுக்கவில்லை. ‘அழையாத வீட்டில் நாய் நுழைந்தாற்போல’ எனும் பழமொழிதான் காரணம்.

ஆனால் தினமும் தொலைக்காட்சிச் சேனல்களில் கொண்டாட்டங்கள், கவியரங்குகள், கருத்தரங்குகள், பட்டிமன்றங்கள் எனப் பார்த்தேன். செம்மொழி செல்லும் திசையறிய வேண்டாமா?

பார்க்கும்போது, பக்கத்தில், சின்னத் தட்டத்தில் நறுக்கிய எலுமிச்சம்பழத்தின் பாதியும், உப்பும் வைத்திருந்தேன். வாந்தி வரும் சமயம் நாக்கில் தடவிக்கொள்ள.

செம்மொழி மாநாடு முடிந்த பிறகு தினமும் புத்தகக் கண்காட்சி போனேன். அங்கு நான் வாங்கிய பல நூல்களில் ஒன்று கவிஞர் விக்ரமாதித்யனின் ‘எனக்கும் என் தெய்வத்துக்குமிடையேயான வழக்கு’.

கவிதைகள் குறித்த, தன் வரலாற்றுக் கட்டுரைகளும் நேர்காணல்களும். சந்தியா பதிப்பகம் நேர்த்தியாகத் தயாரித்தது. இருநூறு பக்கங்கள், தொண்ணூறு ரூபாய் விலை. இந்தத் தரத்தில், அளவில் தயாரிக்கப்படும் புத்தகங்கள் 200 பக்கம் என்றால் நூற்றெண்பது ரூபாய் விலை வைப்பதையும் நாம் பார்க்கிறோம். கவிஞர்கள் உரைநடை எழுத வரும்போது, அதற்கெனத் தனியான வாசனை உண்டு. விக்ரமாதித்யன், தேவதேவன் சிறுகதைகள், ராஜசுந்தர ராஜன் கட்டுரைகள் சில எடுத்துக்காட்டுகள். மொழியைக் கூர்மையாகக் கையாளத் தெரியாதவன் கவி எழுதுவதற்கு தகுதியற்றவன். கவிஞர்களின் உரைநடைக்கு என மொழி வசீகரம் உண்டு.

கவிஞர்கள் சிறப்பாகச் சிறுகதை எழுதுகிறார்கள் என்று சொல்வது அவர்தம் கவிதை பற்றிய திறனாய்வு அல்ல.

இந்தத் தொகுப்பில் விக்ரமாதித்யன் தனது வாழ்க்கைச் சூழல், கவிதைகள் பிறந்த சூழல், தனது கவிதைகள் பற்றிய மதிப்பீடுகள் எனப் பலவற்றையும் பாசாங்கு இல்லாமல் பதிவு செய்கிறார். தனது கவிதைகளையே விலகி நின்று அவதானிக்கும் அவரது பார்வை நேர்மையானது. தனது கவிதைகளில் குறைந்தது முப்பதாவது சிறந்த கவிதைகளாக நிற்கும் என்பது அவரது கோரிக்கையல்ல, எதிர்பார்ப்பல்ல, ஏக்கமும் அல்ல, அவதானிப்பு.

நான் எழுதும் இந்தக் கட்டுரை, இந்தப் புத்தகத்தை அறிமுகம் செய்ய அல்ல. அதன் தலைப்பை அறிமுகம் செய்ய. என்ன நுட்பமான தலைப்பு பாருங்கள். ‘எனக்கும் என் தெய்வத்துக்குமிடையேயான வழக்கு’.

கவிஞனின் மொத்த வாழ்க்கையை, கவிதைகளின் மொத்தப் போக்கை இந்தத் தலைப்பு குன்றேறி நின்று கூவுகிறது. அந்த வரியே ஒரு முழுக்கவிதை. ஒரு கவிஞனால் மட்டுமே இவ்விதமானதோர் தலைப்பை சிந்திக்க முடியும்.

கவனியுங்கள் – எனக்கும் தெய்வத்துக்கும் இடையேயான வழக்கு அல்ல. எனக்கு என் தெய்வத்துக்கும் இடையேயான வழக்கு. இங்கு என் எனும் சொல் விரிக்கும் பொருள் அனந்தம்.

தெய்வத்தை diswon செய்வதல்ல. முன்னிறுத்தி சட்டையைப் பிடித்து உலுக்கி கேள்வி கேட்பது. இதில் வாதி கவிஞன், பிரதி தெய்வம். தீர்ப்பெழுதும் நீதிபதி யார்? அதுவும் பிரதியான தெய்வம்தான். பிரதியும், நீதிபதியும், சாட்சியும் ஆன தெய்வம்.

இன்றைய அரசியல் சூழலுக்கு இதைச் சற்று மாற்றுப் போட்டு யோசித்தால் சுவாரசியமாக இருக்கும். வாதி மக்கள். பிரதியும், சாட்சியும், தீர்ப்பு எழுதுகிறவனும் ஆள்கிற வர்க்கம். இது சமகாலத் தேய்வு. அவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் வழக்கைப் பேசுகிறார் கவிஞர்.

மொத்த வழக்கின் போக்கே, என் தெய்வம் எனும் பிரயோகத்தில் இருக்கிறது. என் தெய்வம் எனும்போது, அந்தத் தெய்வம் கலாப்ரியாவின் தெய்வம் இல்லை, தேவதேவனின் தெய்வம் இல்லை, சுகுமாரனின் தெய்வம் இல்லை, மனுஷ்யபுத்திரனின் தெய்வம் இல்லை, கல்யாண்ஜியின் தெய்வம் இல்லை, யவனிகா ஸ்ரீராம் தெய்வம் இல்லை, விக்ரமாதித்யனின் தெய்வம்.

அதெப்படி, ஆளுக்கொரு தெய்வமா என்று கேட்பீர்கள். ஆமென்பேன் நான். தெய்வம் தேவைக்கு, சூழலுக்கு, முறையீட்டுக்குத் தகுந்தாற் போன்றது. ஆதிமலைவாசியின் தெய்வமும், தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் பொது மேலாளர் தெய்வமும் ஒன்றல்ல. சிவனை, திருமாலை, விநாயகனை, முருகனைப் பொருட்படுத்தாத கிராமத்தான் காடனையும் மாடனையும் துணைக்கு அழைத்துப் பேசுகிறான்.

விக்ரமாதித்யன் கட்டுரைகளிலேயே நெறிப்படுத்தப்பட்ட பெருந்தெய்வங்கள் பற்றியும் சுடலைக்கார மாடனைப் பொன்ற தெய்வங்கள் பற்றியும் குறிப்புகள் உண்டு.

மற்றெந்தக் கலைஞனை விடவும் ஒரு கவிஞன்தான் இந்த வழக்கைப் பேச முடியும். எம்.டி.வாசுதேவன் நாயரின் ‘நிர்மால்யம்’ சினிமாவின் வெளிச்சப்பாடு போல. ஒரு வகையில் கவிஞன் என்பவன் உபாசகன். வெளிச்சப்பாடு. உபாசனா தெய்வத்தின் அருட்கனம் தாங்காமல் துவண்டு உழல்பவன்.

விக்ரமாதித்யன் எனும் கவிஞனின் வாழ்நாள் சாதனைக்குத் தலைப்பாக வாய்த்த இந்தக் கவிதை வரி ஒன்றே போதுமானது என்றெனக்குத் தோன்றுகிறது.

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in "பனுவல் போற்றுதும்", நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் and tagged , , , , , , . Bookmark the permalink.

3 Responses to எனக்கும் என் தெய்வத்துக்குமிடையேயான வழக்கு

 1. பொன்.முத்துக்குமார் சொல்கிறார்:

  துள்ளலும் நக்கலுமாக (துவக்க வரி, தேடிச்சோறு-வின் remake, எலுமிச்சையும் உப்பும் ….) அற்புத நடை. பின்னிரவு நெருங்க, பீறிட்ட சிரிப்பை அடக்க இயலவில்லை.

  தலைப்புக்கள் குறித்த பார்வை மிக அழகு. அதுவும் உடனே படிக்கத்தூண்டும் அண்ணாச்சியின் நூல் தலைப்பு. ஏனோ அவரது தொழில்வயிற் பிரிவு கவிதை நினைவுக்கு வந்தது.

  அன்புடன்
  முத்து

 2. Vela சொல்கிறார்:

  ஐயாவின் தமிழுக்கு என்றுமே தனிச்சுவை உண்டு.. இது எதற்கும் குறைவில்லை.. தலைப்பை பற்றி ஒரு கட்டுரை.. அதுவும் ஆழமான, தெளிவான, விரிவான கட்டுரை.. சிங்கத் தமிழனின் அறிவு, சீரிய அறிவு..

  மிகவும் அருமையான தொகுப்பு சுல்தான்.. வாழ்த்துக்கள்

 3. m.murali சொல்கிறார்:

  அன்புள்ள நாஞ்சில் நாடன், அவர்களுக்கு

  ஜெயமோகன் குறிப்பிலிருந்து தொடர்ந்து, தடவி, உங்கள் ‘எனக்கும் என்… ‘ குறிப்பிற்கு வந்தேன்.

  குழந்தைக்கு பெயர் வைப்பதில் இருந்து, கவிதை, நாடகம் வேற்று மொழி உரையாடல்கள் என தளம் விரிந்தது ஆச்சர்யமாகவும், மெல்லிய புன்னககையையும் வர வழித்தது.

  வேறு சில தலைப்புகள் – உரையாட – மகிழ

  ‘ஆல்பெர்ட் பின்டோ கோ குஸ்ஸா க்யு ஆத்தா ஹை’ – ஆல்பர்ட் பிண்டோக்கு ஏன் கோபம் வந்தது
  ‘லேகவிண்டே மரணம்: ஒரு பிளாஷ் பேக்’ –
  ‘ஏழாவது மனிதன்’

  சில ரஷ்ய புத்தகங்கள் படித்து வளர்ந்தவன் நான் – ஒரு சில அழகிய தலைப்புகள்
  பொழுது போக்கு பௌதீகம் – காலக்ஷேபதிற்கான பௌதீகம் எனலாமோ?
  பொழுது போக்கு வானவியல் – சிறுவயதில் இதை பற்றி அதிகமாக பேசி, ‘வான சாஸ்த்ரி’ என்கிற கேலிக்கு ஆளானேன்.
  இயற்கை வின்ஜானியின் கதைகள்
  107 வேதியல் கதைகள் – (இராசயனம் என்பது சரியா? அல்லது வேதியல் சரியா?)

  வேறு சில
  ‘மான் ஹூ நியூ டூ மச்’ – அதிகம் தெரிந்தவன் – என்று படம் பார்த்தால் – நகைச்சுவையாக இருக்கும்
  ‘௩௯(39) படிகள்’
  ‘நோ கண்ட்ரீ பார் ஓல்ட் மான்’
  ‘மான் ஹூ வாஸ் நாட் தேர்’
  ‘பல்ப் பிக்க்ஷன்’ – கதை கூழ் ? பரப்பியல் இலக்கியம் (ஜெயமோஹனை நினைவு கூர்ந்து) 🙂

  எனக்கு தோன்றிய சில
  தாழ் திறவாய் – ஏற்கனவே இந்த தலைப்பு இருந்திருக்கலாம் – பக்தி இலக்கிய கரு என தோன்றும் – அலி பாபாவின் ‘திறந்திடு சீசே’ மாதிரி 🙂
  கூடிடு கூடலே
  சிறு விரல்கள் தடவி பரிமாற..
  கையினிற் சிறு தூதையோடு..
  ஈசன் இயல்பும் இமையவர் ஈட்டமும்..
  மடங்கி மடங்கிடு..

  அன்புடன்
  முரளி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s