தேர்தல், அரசியல்,பணம். தீதும் நன்றும்-26

ரு காலத்தில் கல்வி, மருத்துவம் போல் அரசியலும் மக்கள் சேவையாக இருந்தது. ஒரு காலம் என்பது 100 ஆண்டுகள்கூட இல்லை. தேசத்துக்காக சொத்து சுகம் துறந்தவர், மனைவி மக்கள் துறந்த வர் என நெடியதோர் பட்டியல் உண்டு நமது வரலாற்றில். ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்பது மக்கள் தலைவர் கொள்கையாகி நின்றது அன்று!
இன்று, ஒரு தொழில் எனும் நோக்கில் அவை கிளை விரித்துப் பரந்துவிட்டன. கல்வித் துறை எனில் பெரும் முதலீடும் அரசியல் செல்வாக்கும் வேண்டும். மருத்துவம் எனிலோ, பெரும் படிப்பு. அவர் தனியாகத் தொழில் நடத்துவது சிறுதொழில் முனைவது எனில், நவீன மருத்துவமனைகள் என்பவை பன்னாட்டு நிறுவனங்கள் போல. சாதாரண மனிதனுக்கு மேலுக்கு ஒரு மாதிரி இருக்கிறது என்றால், சுக்குக் காபி போட்டுக் குடித்துப் போர்த்திக்கொண்டு படுத்துக்கொள்வான். மறுநாள் சரியாகிப் போகும். பணம் படைத்தவ ரும் உயிருக்குப் பயந்தவரும் அதேகாரணத்துக்காக நவீன மருத்துவமனைக்குப் போனால், 2 நாட்கள் வைத்திருந்து சகல சோதனைகளும் செய்து ஒன்றும்இல்லை என்று சொல்லி, 40 ஆயிரம் ரூபாய்க்கு பில் தந்து அனுப்புவார்கள்.
மாதம் 3 ஆயிரம் வருமானம்கொண்ட உழைப்பாளி, ஆண்டுக்கு 72 ஆயிரம் கட்டணம் கட்டி தொழிற்கல்வி பயில இயலுமா? அதனால்தான், அரசுகள் பொழுதுபோக்க இலவச டி.வி-க்கள் தரு கின்றன. அரசியல் முன்பெல்லாம் சேவைத் தளத்தில் இயங்கியதால், தியாகம் அதன் மூலதனமாக இருந்தது. இன்று சேவை செய்ய பெரும் மூலதனம் வேண்டும். ஏனெனில், அது ஒரு பெருந்தொழில். அரசியலுக்கான மூலதனங்கள் என்பவை சாதி பலம், பண பலம், அடியாள் பலம், சினிமா பலம் எல்லாம். அடிதடி, ஆள் கடத்தல், கொலை முயற்சி, மிரட்டல் எல்லாம் உப பலங்கள்.
அரசியல் கட்சிகள் லாப நட்டக் கணக்குக் காட்டி, தணிக்கைக்கு அனுப்பி, வருமான வரி அல்லது சேவை வரி கட்டி, பங்குதாரர்களுக்கு லாபத்தில் பங்கு கொடுப்பது இல்லை. என்ன வந்தாலும் நேரடிப் பங்குதான். பொதுக்குளத் தில் திறமை போல மீன் பிடித்துக்கொள்ள வேண்டியதுதான். பிற கட்சிக்காரன் குளத்தில்இறங் காமல் பார்த்துக்கொள்ள வேண் டும், அவ்வளவே. பிறகு, அவர் எப்போது மீன் பிடிப்பது? அவர் முறைக்குக் காத்திருக்க வேண் டும். வேறென்ன?
அரசு பொதுமருத்துவமனை வராந்தாவில் கேட்பாரற்று வெறுந் தரையில் கிடந்த முன்னாள் காவல் துறை அமைச்சரை நாம் என்ன பெயரிட்டு அழைப்போம் இன்று? பைத்தியம், ஏமாளி, அறிவிலி என்றா? முதலமைச்சர் காணப் போனபோது கிழியாத வேட்டியைத் துவைத்து உலர்த்திக்கொண்டு இருந்த பொதுவுடைமைச் சிங்கத்துக்கு இன்றைய பெயர் என்ன? சிரித்துக்கொண்டே தூக்குக் கயிற்றை மாலையாகச் சூடியவன் தேசபக்திக்குப்பொருள் என்ன?
தொழில் நிறுவனம் எனில், தயாரிப்பு அல்லது விற்பனைக்கு இலக்கு உண்டு. லாபம் முக்கியம். எனினும் நேரடியாகவோ மறைமுகமாகவோ அவர்கள் நாட்டின் வளர்ச்சியில் பங்கேற்கிறார்கள். அரசியல் என்பதும் இன்று ஒரு தொழில் அல்லது வர்த்தகம். இலக்கு, ஆட்சி அதிகாரம். பிறகென்ன அள்ள அள்ளப் பணம். உள்ளூர்ப் பொறுக்கி ஆனாலும் வெளிநாட்டில் எம்.பி.ஏ., படித்தவனானாலும் நோக்கம் அது ஒன்றே. எனவே, எவ்வழியும் செவ்வழிதான் அவர்களுக்கு!
எல்லா இந்திய அரசியல் கட்சிகளிடத்தும் தொகுதிவாரியான சாதிகளின் புள்ளிவிவரம் உண்டு. எல்லாம் சேகரிக்கப்பட்டு, தொகுக்கப்பட்டு, கணிப் பொறியில் திணிக்கப்பட்டு, விரல் அசைப்பில் சேமிதம். குறிப்பான சில பெருநகரத்துத் தொகுதிகள் தவிர்த்து வேற்றுச் சாதியினர் எவரும் வென்றுவிட முடியாது. தமிழகத்தின், இந்தியாவின் தென்கோடி சட்டமன்றத் தொகுதியான கன்னியாகுமரியில் 1948 முதல் 2006 வரை நடந்துள்ள பதினாறு தேர்தல்களில் வேளாள வேட்பாளர் மாத்திரமேவென் றுள்ளார். அவர் காங்கிரஸா, சோஷ லிஸ்ட்டா, தி.மு.க-வா, அ.இ.அ.தி. மு.க-வா என்பது முக்கியம் இல்லை. ஆனால், வேளாளர் என்பது முக்கியம்.
பத்தாண்டுகள் முன்பு நாடாளு மன்றத் தேர்தலில் கோவையில் இடதுசாரி வேட்பாளராகத் தோழர் நல்லகண்ணு போட்டியிட்டார். தியாகி, சுதந்திரப் போராட்ட வீரர், மக்கள் போராளி, மூத்த அரசியல் தலைவர் என்றெல்லாம் சொல் லத் தேவையில்லை. வழக்கமாக இடதுசாரி வேட்பாளர் வெல்லும் தொகுதிதான் அது. வேட்பாளரின் தகுதி கருதி வாய்மொழியாகப் பலரிடம் நான் சொன்னதுண்டு. தேர்தல் முடிந்த அன்று முன்னிரவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு அண்ணாச்சி நெல்லை கண்ணனுடன் போயிருந்தேன். கட்சி அலுவலகத்தில் தோழர் நல்லகண்ணுவுடன் சி.மகேந்திரனும் இருந்தார்.
உரையாடலின்போது நான் சொன்னது, ‘ஐயா! நீங்கள் வெற்றி பெற நான் விரும்புகிறேன். உங்களுக்காகச் சில நூறு வாக்குகளாவது நான் சேகரித்திருப்பேன். ஆனால், நீங்கள் குறைந்தது 60, 70 ஆயிரம் வாக்குகளில் தோற்கும் வாய்ப்பே அதிகம்!’
நான் பெரியவர் முகத்தில் கண்டது ஒரு புன்முறுவல். நான் அரசியல் கணிப்பாளன் அல்ல. சொன்னது நடந்தது என்றும் சொல்ல வரவில்லை. ஆனால், பெரும்பான்மை வாக்காளர்கள் நினைத்தது நடந்தது. அடிப்படைக் காரணங்கள் இரண்டு. பெரிய வர் வெளி ஆள் என்பதும், தொகுதியின் பெரும்பான்மைச் சாதி எதனையும் சார்ந் தவர் அல்ல என்பதும். மூன்றாவதுமுக்கிய மான காரணம், பணம்.
தியாக வரலாறும், மானுட நேயமும், போராட்டக் குணமும், தொண்டுள்ளமும்கொண்ட ஒரு தலைவரை சாதியும் பண மும் தன்னாள், வேற்றாள் மனோபாவமும் தோற்கடிக்கக்கூடும் எனில், அரசியல் என்பது இன்று பெரும் முதலாளிகளின், சாதிகளின் பண்ணை என்ற உறுதிக்கு வரலாம்.
இரண்டாண்டுகளுக்கு முன்பு உயிர்மை பதிப்பகப் புத்தக வெளியீட்டு விழா. இதை எழுதுகிற நான் கலை இலக்கியப் பெருமன்ற உறுப்பினனோ, பொதுவுடைமைக் கட்சிக்காரனோ அல்ல என்பதையும் நீங்கள் கருத்தில்கொள்ள வேண்டும்.
மாநகரத் தொகுதிகள் தவிர்த்த மற்ற எல்லாத் தொகுதிகளிலும், பொதுவுடைமைக் கட்சியினர் நீங்கலாக, அனைத்துக் கட்சிகளும் சாதி பலத்தின் அடிப்படையிலேயே வேட்பாளர் பட்டியலைத் தயாரிக்கின்றன. ஒரு கட்சி அங்ஙனம் ஷார்ட்- லிஸ்ட் செய்தவர் களை நேர்காணல் செய்யும்போது கேட்கும் முதல் கேள்வி, தியாகத் தழும்பு அல்ல, சிறை சென்ற அனுபவம் அல்ல, சமூகப் பார்வையோ, பொருளா தாரச் சிந்தனையோ அல்ல. ‘எவ்வளவு பணம் செலவு செய்வீர்கள்?’
அடுத்தது ஒரு வாக்குறுதி… தலைவருக்கு திருமுருகாற்றுப்படை நக்கீரர் பாணியில்,
உன்னை ஒழிய ஒருவரை நம்புகிலேன்
பின்னை ஒருவரையான் பின் செல்லேன் – பன்னிருகைக்
கோலப்பா வானோர் கொடியவினை தீர்த்தருளும்
வேலப்பா செந்தி வாழ்வே! என்று தர வேண்டும்.
தலைவருக்கும் உடனே தோன்றும் பன்னிரண்டு கைகள் இருந்தால் லஞ்சம் வாங்க எவ்வளவு நன்றாக இருக்கும் என.
எல்லாத் தொழிலிலும், முதலீட்டுக்கும் லாபத்துக்கும் ஒரு தொடர்பு உண்டு. சினிமா, ஜேப்படி, வழிப்பறி திருட்டு, கொள்ளை என்பன விதிவிலக்குகள். ஆனால், அரசியல் என்பது ஒரு மாபெரும் விதிவிலக்கு. கிட்டத்தட்ட மூன்று சீட்டு விளையாட்டு அல்லது மங்காத்தா அல்லது கேரளத்தில் சொல்வது போல் குலுக்கிக் குத்து. கொய்தால் கோடிகள், போனால் தலைமுடி!
மதுரையில் நடந்ததோர் இடைத்தேர்தலுக்குச் சில நாட்கள் முன்பு அந்தத் தொகுதியில் குடியிருக்கும் நண்பர் வீட்டுக்கு மதிய உணவுக்குச் சென்றிருந்தேன். திடும் எனச் சிலர் வந்தார்கள். தேர்தல் நோட்டீஸூம் ஒட்டப்பட்ட காக்கி நிற நீளக் கவர் ஒன்றும் கொடுத்தார்கள். போய்விட்டார்கள். என் நண்பருடைய மனைவியின் கை பாம்பைக் கையில் பிடித்தது போல் நடுங்கியது.
பணத்தை வாங்கிக்கொள்வது பாவத்தில் பங்குதான். வேண்டாம் என்று சொன்னால் மாற்றுக் கட்சி என்று நினைத்தாலும் நினைக்கலாம். ஆனால், பணத்தை வைத்துக்கொள்ளவும் அறம் அனுமதிக்கவில்லை. என்ன செய்வார் வாக்காளர்?
உறையைப் பிரித்துப் பார்த்தால், இரண்டு புதிய மொடமொடக்கும் அச்சக வாசனையுள்ள ஆயிரம் ரூபாய்த் தாள்கள். என்ன செய்வது இந்தப் பணத்தை?
‘எவர் தோட்டம் துரவு விற்ற பணமல்ல. எவர் தகப்பனாரும் சேர்த்துவைத்த செல்வமும் அல்ல. நாம் அறிந்தே, நம்மைக் கொள்ளை அடித்த பணம். உண்மையில் நம் பணம். கூசாமல் வைத்துக்கொள்ளலாம். கோயில் உண்டியலில் போட்டால், மற்றொரு கொள்ளைக்கு ஆட்பட்டும் போகும். எனவே, தெருவில் இருக்கும் தொழிலாளியின் குழந்தைகளுக்கு உடை வாங்கிக் கொடுங்கள்!’ என்று சொன்னேன். சமீபத்தில் தேசியக் கட்சி ஒன்றின் பொதுச் செயலாளர்களில் ஒருவர் சொன்னார், ‘வேட்பாளர் சீட்டுகள் விற்பனைக்கு வந்துவிட்டன’ என்று. எது இங்கு இன்னும் விற்பனைக்கு வரவில்லை? விவிலியத்தில் ஒரு வாசகம் உண்டு, ‘எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள், அதற்கான விலையைக் கொடுத்துவிடு’ என. அது எதிர்மறையான பொருள் தருகிறது அரசியலில். இதில் வருத்தம் தரும் விஷயம், விற்பனைக்கு வரும் வேட்பாளர் சீட்டுகளைப் பற்றிப் பேசுகிறவர் தன் மகனுக்கு அது மறுக்கப்படும்போதுதான் வீரவசனம் பேசுகிறார் என்பது.
தேர்தலில் போட்டியிடுபவர்களில் கொலைக் குற்றம், கற்பழிப்புக் குற்றம், கொள்ளைக் குற்றம், ஆள் கடத்தல் குற்றம், நிலக்கரி கடத்தல் குற்றம், மணல் கொள்ளைக் குற்றம், தாயின் கோயிலில் திருடிய குற்றம், சாதிக் கலவரம் தூண்டிய குற்றம், ஊழல் குற்றம், கலப்படக் குற்றம், தேசத் துரோகக் குற்றம், குன்றுகளைக் களவாடிய குற்றம் என குற்றப் பட்டியல் தெரிந்தால் நாம் மூச்சடைத்துப் போவோம்.
இது பெரும்பாலான அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும். குற்றம் நிரூபிக்கப்படாத வரை அவர்கள் நிரபராதிகள் என்கிறது சட்டம். எவ்வளவு சௌகரியமான சட்டம் பாருங்கள். குற்றம் நிரூபிக்கப்பட்டாலோ, கிளியாந்தட்டு விளையாட்டுப் போல மனைவியை, மகனை, மகளை, மைத்துனியை, தம்பியைக் கூட்டாளியாகத் தொட்டு, அவர்கள் ஆட, இவர்கள் ஒதுங்கிக்கொள்கிறார்கள். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இதற்கு நம்மிடம் எடுத்துக்காட்டுகள் உண்டு.
இவை யாவும் கொடுமை, அநீதி, துரோகம் எனத் தெரிந்தும் நமது எதிர்வினை என்ன? 100 வாக்காளர்களில் 48 பேர் வாக்குச்சாவடிக்கே போக மாட்டோம். அன்று விடுமுறையே ஆனாலும். அன்று சேனல்களில் புதுப் படங்கள் காட்டப்படும். வாக்களித்த 52 பேரில் 21 வாக்குகள் வாங்கியவன் அரசாளுவான். மகன், பேரன் என்று அரச வம்சம் போல, அது சென்றுகொண்டு இருக்கும். ஒன்றும் செய்ய மார்க்கம் இன்றி, வரிகளாலும், விலைவாசிகளாலும், வஞ்சிக்கப்பட்ட வசதிகளாலும் வெங்கொடுமைகளுடன் புழு பூச்சிகள்போல உழன்றுகொண்டு இருப்போம். பின்னர், இருக்கவே செய்கிறது பெட்டைப் புலம்பல்.
ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை வாக்குச்சாவடிக்குப் போக முக்கவும் முனகவும் செய்கிற நமக்கு, குறை சொல்ல என்ன யோக்கியதை உண்டு?
சில சமயம் கிழட்டுப் பசு மாடுகள் சினையாகிவிடும். அதனால் கன்று ஈன முக்கவும் இயலாது. முக்கிப் பெற்றுப் போட்ட கன்றை நக்கவும் இயலாது. இந்திய வாக்காளனை நாம் வேறென்ன சொல்வது?

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in “தீதும் நன்றும்” and tagged , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s