நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை
சம்பளம் தருகிறார்கள். பத்தாயிரம் ரூபாய் மாத சம்பளம்
வாங்கும் உயர்நிலை பள்ளி ஆசிரியன் அந்தத் தொகையை
ஊதியமாக பெற 300 ஆண்டுகள் பணி செய்ய வேண்டும்.
முன்னூறு நெடிய ஆண்டுகள், முப்பது பெரிய தலைமுறைகள்.
கூலிக்காரன் என்றால் ஆயிரம் ஆண்டுகள்
அழுகை வரவில்லையா உங்களுக்கு?
எனக்கு வருகிறது.
நடிகனைத் தொட்டு பார்க்க விரும்பியவர் நாம்,
நடிகையைக் கோயில் கட்டிக் கும்பிட்டவர் நாம்,
கவர்ச்சி நடிகை குடித்து மிச்சம் வைத்த எச்சில் சோடாவை
அண்டாவில் விட்டு நீர் சேர்த்து கலக்கி அரைகிளாஸ்
பத்து ரூபாய் எனப் பிரசாதம் வினியோகித்தவர் நாம்,
பச்சை குத்திக்கொள்ளவும் தீக்குளிக்கவும் செய்பவர் நாம்,
நடிகைக்கு தீண்டல் தாண்டிப்போனால்
பிரார்த்தனைக் கூட்டங்கள் நடத்துபவர் நாம்,
மன்றங்கள் நடத்தி மாற்று மன்றத்தின்
பட்டினிக் குடலைக் கிழித்து மாலை போடுபவர் நாம்,
நம்மை நாம் என்ன பெயர் சொல்லி அழைப்பது?
ஏமாளி என்றா? மூடன் என்றா? மூர்க்கன் என்றா?
கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே
வாலுடன் பிறந்த வாயப்பன் என்பதா?
நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை இத்தலைப்பே கட்டியம் கூறும்
இக்கட்டுரைத் தொகுப்பின் சாரத்தை. நான் மதிக்கும் எழுத்தாளர்களில்
முதன்மை இடம் தரும் நாஞ்சில் நாடனின் பல்வேறு தலைப்பிலான
கட்டுரைகளின் தொகுப்புதான் இந்நூல். இதை நான் எழுதும்போது எனக்கும்
குற்றவுணர்ச்சியே மேலொங்கி நிற்கிறது. சத்தியமாக இந்நூலின் அறிமுக
பதிவாகவே படிப்பவர்கள் உணர வேண்டும் என்ற முனைப்பிலேதான்
ஒவ்வொரு எழுத்தையும் யோசித்து எழுத வைக்கிறது என்னை. அத்தனை
வீரியமுள்ள வீச்சு நாஞ்சில் நாடனுக்கு. ஆகவே இதை சிறுவனின்
மழைக்கால குதூகலத்தை போலவே எண்ணி வாசிக்கலாம் என்றுமே
இப்பதிவு இந்நூலின் விமர்சனமாக அமைந்து விடாது என்பதை உணர்வேன்.
இத்தனை நாள் வாழ்ந்தும் இதுவரை வாய்க்கப்பெற்ற அனுபவங்களும்
எனக்கு கற்றுத் தந்தவை யாவும் பொய்யென உணர்த்தி பயங்கொள்ள வைக்கும்
கட்டுரைகள். இக்கட்டுரை வணிக ரீதியிலான பத்திரிக்கையிலும் வரும் காலம்
இதுவாக இருந்தால் கண்டிப்பாக நம் சமூகத்தின் நிலை இன்று வேறாகயிருக்கும்.
மக்களை போகத்தில் ஆழ்த்தி மூழ்கடிக்கும் வணிக பருவ இதழ்களுக்கு மத்தியில் வாசிப்பனுபவம் உள்ளவன் இதை படிக்கும்போது மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாவான். அதைப்போலதான் நானும். ஒவ்வொருமுறை புத்தகத்தை பிரிக்கும்போதும்
குற்றம் செய்தவன் போலவே முனை மடித்து உறங்குகிறேன்.
கண்மணி குணசேகரனின் சிறுகதைகளை படித்தபோது திகைத்து போனேன்.
நம்மக்கள் சிறுகதை என்ற வடிவத்தை பேப்பர்களில் ஒருபக்க, அரை, முக்கால்,
ஒன்றரை பக்கங்களால எச்சில் படுத்தி வாசகர்களின் மீது எறிகிறார்கள்
என்று தோன்றியது.
மேற்கோல் காட்டப்பட்ட வரிகள் எனக்குள் ஏற்படுத்திய அதிர்வுகள் நிறைய.
வெந்ததை தின்று விதி வந்தால் சாவது என்ற கொள்கை மத்தியில் வாழும் மக்கள்
கூட்டத்தில் யார் வேண்டுமானாலும் தலைமை ஏறி மிதித்து வாழலாம். அப்படிப்பட்ட
சமூகத்தில்தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். மாற்று சிந்தனைகளுக்கும்
முயற்சிகளுக்கும் மதிப்பளிக்கும் காலம் வரும்போது எல்லாக்கதவுகளும் திறக்கும்.
படைப்பாளியின் பெயரைக் கொண்டே மொத்த படைப்பையும் எடைபோடும்
மனிதர்கள் இங்கு அனேகம். புறந்தள்ளுவதற்கும், உதாசீனப்படுத்தவும் நிறைய
காரணங்களை மடி மீதே வைத்து அலைகிறோம். தமிழில் ஏராளமான
இலக்கியவாதிகள் போலவே சர்ச்சைகளும் ஏராளம்.
தமிழ் வார்த்தைகளுக்கு அரசியல் பார்வை கொண்டு ஒதுக்கப்பட்டவையாக சில
வார்த்தைகளை கூறலாம். வழக்கொழிந்து போய்விட்ட காரணத்தினாலேயே அவை
கெட்ட வார்த்தைகளாக கற்பித்துக் கொண்டிருக்கிறோம். வெறும் அதிர்வுகளை
ஏற்படுத்த வேண்டி சேர்ப்பது அல்ல. வலியை பதிவிக்க சொந்த மொழியில்
உள்ள வார்த்தைகளை பயன்படுத்தவே இயலாத சூழல் நம் தமிழ்ச்சூழல் மட்டுமே.
அவ்வகையில் மங்கலம் குழூஉக்குறி இடக்கரடக்கல் என்ற கட்டுரையினை
தமிழ்மண சூழலில் உள்ள புனிதர்கள் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று.
“மாங்கா மாங்கா ரெண்டு மாங்கா மார்க்கட்டு போகாத குண்டு மாங்கா”
என்றெழுதும் கவிச்சிற்றரசு, பேரரசு, இணையரசு, துணையரசு ஆகியோரின்
வம்சாவழியினர் எல்லாம் மாலதி மைத்ரிக்கும், குட்டி ரேவதிக்கும், சல்மாவுக்கும்,
கனிமொழிக்கும் உமா மகேஸ்வரிக்கும், க்ருஷாங்கினிக்கும், இளம்பிறைக்கும்
கவிதை எழுத பாடம் நடத்துகிறார்கள்.
கட்டுரைத் தொகுப்பு முழுவதும் எள்ளல் கலந்த கோப எழுத்துக்கள் நிறைந்து
காணப்படுகிறது ஒன்றையும் விடாது வாசிக்க வேண்டியவை. இலக்கிய அறிமுக
கொண்டவர், இல்லாதார் எவர் படைப்பையும் மிக நேர்மையாகவும் நேர்த்தியுடனும்
விமர்சித்திருக்கிறது. எல்லா இலக்கிய சர்ச்சைகளிலும் பங்கு கொண்டவராயினும்
எதிலும் நடுநிலையாக நின்று எவர்க்கும் பகையாளி என்றில்லாமல் இருக்கும்
ஒரே எழுத்தாளர்.
நாடு இவர்களுக்கு என்ன செய்யப்போகிறது என்ற கட்டுரையில் இடஒதுக்கீடு
பற்றியும் நம் கல்வி முறை பற்றியும் மிகச்சிறப்பான முறையில் எழுதியிருக்கிறார்.
“காலில் செருப்பின்றி நடப்பவன் குதிரை மீதேறி பறப்பவனுடன் போட்டியிட்டு
வெல்ல வேண்டியுள்ளது. ஸ்பார்டகஸ் போல. எத்தனை நியாயமற்றததொரு போர்?
வெறும் வார்த்தைகளை கொண்டு எழுதப்படாமல் பிரச்சினையின் ஆழம் தொடும்
அற்புதமான எழுத்து.
வாசச்சமையலும் ஊசக்கறியும் என்ற கட்டுரையில் நாஞ்சில் நாட்டு சமையல்
பற்றி மிக விரிவானதோர் கட்டுரை. வாசிக்கும்போதே பசியெடுக்கும் விதம்
அனுபவித்து எழுதியது. பசியுணர்ந்தவனுக்கு மட்டுமே ருசியின் அருமை தெரியும்
என்பது போல. தொலைக்காட்சியிலோ, முப்பது நாள் முப்பது கறி போன்ற
புத்தகங்களில் உள்ளது போல அல்ல.
நாவலாசிரியனுக்கு கட்டுரை, விமர்சன கட்டுரை என்பது தேவையில்லாத வேலை
என்கிறார்கள். பிறக்கும்போதே நாவலாசிரியனாக பிறக்கவில்லை. நாஞ்சில்
நாடனை பொருத்தவரை கட்டுரை வாசிப்பு என்பது சிறுகதை வாசிப்புக்கு
இணையான சுகத்தை தரவேண்டும். விஷயஞானம் உள்ள எவரும் எதையும்
எழுதலாம் என்கிறார். இவர் வைக்கும் வாதங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தாமல்
இல்லை மாறாக முனை மடிக்காமல் வாசிக்க தூண்டுகிறது. இலக்கிய நண்பர்களுடன்
அமர்வுகள் குறித்த கட்டுரை சுவாரசியமாக இருந்தாலும் பிற எழுத்தாளர்கள்
பற்றிய தெரிவு இல்லாததால் சலிக்க வைக்கிறது. தீவிர வாசிப்பு அனுபவம்
உள்ளவர்கள் எளிதாக புரிந்துகொள்ளலாம்.
கட்டுரை புத்தகங்கள் படிப்பதிலே இதுவரை சுணக்கம் இருந்தது. மாற்றிக்
கொள்ள வேண்டிய கருத்து இது.
எந்த வகையிலும் இப்பதிவு புத்தகத்தின் விமர்சனமாக ஆகாது. தொகுப்பின்
மொத்த சுவையையும் ஒரே பதிவில் கொண்டுவரமுடியாமைக்கு வருந்துகிறேன்.