தீதும் நன்றும் 23.கலைச் செல்வங்கள்

கலைச் செல்வங்கள்

கிராமத்தில் குரூரமான சொலவம் ஒன்று உண்டு: ‘மலடி, அடுத்த வீட்டுக் குழந்தையின் அணவடைத் துணியை மோந்து பார்த்தது போல!’ என்று. பாரம்பரியப் புகழ்மிக்க நினைவுச் சின்னங்கள் ஏதுமற்ற பல நாட்டினரும் தமது சின்னச் சின்ன வரலாற்றுச் சின்னங்களைக்கூடப் போற்றிப் பாதுகாத்து வெளிநாட்டுப் பயணிகளுக்குக் காட்டிக் காட்டி மகிழ்கின்றனர். தொல் வரலாறு உடைய பிற நாட்டினர், ஆயிரக்கணக்கான ஆண்டுப் பழமையுடைய தமது இடிபாடுகளைப் பொன்னே போல், கண்ணே போல் காத்துப் பராமரிக்கின்றனர்.

இந்திய நாடு சிற்ப, ஓவிய, கட்டடக் கலைச் செல்வங்கள் உடையது. ஆனால், நமது குடிமக்கள் பலருக்கும் அதன் விலைமதிப்பற்ற தன்மை பற்றி போதுமான அறிவு இருக்கிறதா என்ற ஐயம் எழுகிறது. முன்னால் கிடக்கும் கொற்கை நல் முத்துக்களை ஏதோ வெண்ணிற மல்லாட்டைப் பயிறு என்று எண்ணி, இரண்டிரண்டாக உடைத்து உடைத்துத் துப்பும் பன்றிகள் போல், நமது கலைச் செல்வங்களை உடைத்தும், உரித்தும், சுரண்டியும், தட்டியும் பார்த்து, பொறுப்பற்று அழித்துக்கொண்டு இருக்கிறோம்.

சொந்த வீடு கட்டி 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், புதிதாக ஒரு ஆணிகூட அடித்ததில்லை என்றும், சுவருக்கு வண்ணம் பூசி 7 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் நேற்று அடித்தது போல் புதுக் கருக்குடன் வைத்திருக்கிறோம் என்றும் பெருமை பேசுபவர் உண்டு நம்மிடம். ஞாயிற்றுக்கிழமையானால், சொந்த வாகனங்களைக் கர்ம சிரத்தையுடன் துடைத்துத் துடைத்து மாளவில்லை. தனது பொருளைச் சேதமுறாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்கிற அக்கறை நமக்குப் புரிகிறது, பாராட்டவும் செய்வோம்.

ஆனால் வரலாற்றுச் சிறப்புகள், தேசிய முக்கியத்துவம் உள்ள, கலை நேர்த்திகொண்ட, புராதனச் சின்னங்கள் பற்றி போதுமான பொறுப்பு அற்றவராக இருக்கிறோம். பயணங்களில் பயன்படுத்துகிற 600 ரூபாய் பெட்டிக்கு உறை தைத்துப் போட நாம் மறப்பதில்லை. வாகனங்களில் இருக்கைகளுக்கு உறை. தெர்மாஸ்ஃப்ளாஸ்க்குக்கு உறை, லஞ்ச் பாக்ஸூக்கு உறை, தண்ணீர் போத்தலுக்கு உறை, கண்ணாடிக்கு உறை, செல்போனுக்கு உறை, பாத அணிகளுக்கு மட்டுமே நாம் உறை போடுவதில்லை. நமது பொருள் எனில் எவ்வளவு அக்கறை, பாதுகாப்பு, கவனம்? ஆனால், ஊரான் பொருள்கூட இல்லை, நமது சொந்தக் கலைச் செல்வங்கள் பற்றி எத்தனை அலட்சியம்?

//  

நாகர்கோவில் நகரின் மத்தியில் நாகராஜா கோயில். ஆயிரம் ஆண்டுகள் தொன்மையானது. சுற்றுப் பிராகாரம், மண்டபங்கள், கற்சிற்பங்கள் என ஏராளம் இருந்தாலும் அதன் கருவறை ஓலைக் கூரை வேயப்பட்டது. பிரசாதம் ஈரமான புற்று மண். தப்பு செய்துவிட்டு, என்ன அதட்டினாலும் வாய் திறக்காமல் இருப்பவனைப் பற்றி சொல்வார்கள், ”அவன் வாயிலே நாகராஜா கோயில் பிரசாதம்லா கெடக்கு” என்று. கருவறையின் பின்புறம் மூலிகைச் செடிகள் நிறைந்த சிறிய நந்தவனம். சில ஆண்டுகளுக்கு முன்பு பொறுப்பேற்ற கோயில் நிர்வாக அதிகாரி, எவர் சொல்லியும் கேளாமல், மூலிகைச் செடிகொடிகளை வெற்றுப் புதர் என்றெண்ணி எல்லாவற்றையும் மண்வெட்டியால் கரம்பித் தள்ளிவிட்டார். பிறகு எத்தனை முயன்றும் மூலிகைகளை அங்கு பயிர் செய்ய முடியவில்லை.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், உத்திரமேரூர் பக்கத்திலுள்ள திருப்புலிவனம் எனும் சிற்றூரில் வியாக்ரபுரீஸ்வரர் கோயில். இந்து அறநிலையத் துறை, கோயில் பிராகாரச் சுவர்களையும் சிற்பங்கள் நிறைந்த பிராகாரத் தூண்களையும் சுத்தப்படுத்த Sand Blasting செய்து 1,200 ஆண்டுகள் தொன்மையுள்ள பல்லவர் காலத்துச் சிற்பங்களையும் 975 ஆண்டுகள் தொன்மையுள்ள சோழர் கால ஓவியங்களையும் சேதப்படுத்திவிட்டதாக, ஆங்கில நாளேடு ஒன்று எழுதியது. ‘குரங்கு கைப் பூமாலை’ எனும் பழமொழி நினைவுக்கு வருகிறது.

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் உயர்ந்த கோபுரத்தின் உள்ளே இருக்கும் ஓவியங்கள் அழகானவை, தொன்மையானவை, பாதுகாக்கப்பட வேண்டியவை. கோபுரம் ஏறிப் பார்க்கச் செல்லும் உல்லாசப் பயணிகள் மிக விநோதமான வேலைப்பாடுகளைத் தமது மனோலயங்களைப் பொறுத்து, அந்த ஓவியங்களில் செய்து வைத்திருக்கின்றனர். கோபுரம் ஏறும் ஒவ்வொரு உல்லாசப் பயணி பின்னாலும் ஒரு guard அனுப்புவது நிர்வாகத்துக்குச் சாத்தியம் இல்லை. பயணிகளுக்கோ கலைச் செல்வங்களின் மரியாதையும் கௌரவமும் தெரிவதில்லை. ராணி சேது லட்சுமி பாய் ஓவியங்களில் மிக அழகாக இருப்பார். அந்தக் கால வழக்கப்படி, திறந்த, கம்பீரமான, வடிவான முலைகளுடன். யாத்ரீகர், அந்த முலைகளின் மீது தமது கையெழுத்தைப் போட்டுவிட்டுப் போயிருக்கிறார். தர்மராஜா என்றழைக்கப்பட்ட மார்த்தாண்ட வர்மா ஓவியத்தின் மீது யாத்ரீகரின் பெயர், முகவரி, பின்கோடு எண் எல்லாம் காணலாம்.

நாட்டார் வழக்காற்றில் ஆய்வாளரும் ‘தென் குமரியின் கதை’ எனும் அபூர்வமான வரலாற்று நூல் எழுதியவரும் பேராசிரியருமான முனைவர். அ.கா.பெருமாள் தனது அனுபவத்தை வேதனையுடன் சொன்னார். சமீபத்தில் கன்னியாகுமரிக் கடலில், விவேகானந்தர் பாறைக்குப் பக்கத்துப் பாறை மீது, கம்பீரமாக, 133 அடி உயரத்தில் நிற்கும் ஐயன் திருவள்ளுவரின் பீடத்தில் கரிக்கட்டையால் கெட்ட வார்த்தைகளும் ஆண் – பெண் உறுப்புக்களின் படங்களும் எழுதப்பட்டிருந்தன என்றும், கடல் நீரில் கைக்குட்டை நனைத்துத் துடைத்து அழித்துவிட்டு வந்ததாகவும், சிலை பார்க்க வந்த இரண்டு கிறிஸ்துவ கன்னியாஸ்திரீகள் தனக்கு உதவியதாகவும் சொன்னார். மொழி மீது, திருவள்ளுவர் மீது, கலைச் செல்வங்களின் மீது, அந்தரங்கத்தில் நமக்கு என்ன மரியாதை இருக்கிறது எனும் கேள்வி எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.

ஒன்றரை ஆண்டுகள் முன்பு தமிழினி வசந்தகுமார், ஜெயமோகன், மதுரை சண்முகசுந்தரம் ஆகியோருடன் ஒரு பயணம் போனேன். போக வர 4,000 கி.மீ. காரில் சென்னை, மதனப்பள்ளி, கதிரி, அனந்தப்பூர், ஹம்பி, பட்டக்கல், வாதாபி, பிஜாப்பூர், பண்டர்பூர், புனே, மும்பை என ஏற்றம். இறக்கம், கில்லா ராய்காட், கில்லா ரத்னகிரி, முருட் ஜன்கிரா, மால்வன், கோவா, உடுப்பி, கார்வார், மங்களூர், கண்ணூர், கள்ளிக்கோட்டை, கோயம்புத்தூர்.

எங்களது நோக்கம், கிருஷ்ண தேவராயர் அமைத்த சிதைந்து போன விஜய நகரம், புலிகேசியின் வாதாபி கோட்டைகள், சத்ரபதி சிவாஜி முடி சூடிய கோட்டை, அவரது கடற் படைத் தளபதி கணோஜி ஆங்கரேயின் வெல்லப்படாத கடற் கோட்டைகள், கோவாவின் தேவாலயங்கள், கடற்கரைகள், மலைகள்…

எங்கும் நாங்கள் கண்ணுற்றது, Archeological survey of india, பழம்பெரும் வரலாற்றுச் சின்னங்களை, கலைச் செல்வங்களைப் பராமரிக்கும், சீரமைக்கும், பாதுகாக்கும் நேர்த்தி. இன்னும் தொடர்ந்துகொண்டு இருப்பது அவர்களின் அகழ்வாராய்ச்சி. கோவாவில் ஒரு தேவாலயத்தை அவர்கள் மறு நிர்மாணம் செய்வதை நாங்கள் கண்டோம். என்ன பொறுப்பு, எவ்வளவு கரிசனம்? ஆனால், அவர்கள் பணியாற்றும் திசைக்கு எதிர்த் திசையில் நாம் பயணம் செய்வது எவ்வளவு கேவலமானது?

கற் சிலைகளின் கொங்கைகளின் மீது, பிறப்புறுப்புக்கள் மீது ஏன் இத்தனை காழ்ப்பு என்பது புரிவதில்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் சிதறால் மலையில் அற்புதமான கலைச் சிற்பங்கள் உண்டு. அதிகமாக யாரும் அறிந்திராத பிரதேசம் அது. அது சுற்றுலாத் தலமாக அறிவிக்கப்பட்ட பிறகு, நல்ல சிற்பங்களின் முலைகள் உடைத்துப் பெயர்க்கப்பட்டுள்ளன. இதுவரை பல இடங்களில் பல்வேறு சிலைகளின் முலைகள், மூக்குகள், கரங்கள், வீரர்களின் வாள்கள், யாளிகளின் துதிக்கைகள், யானைகளின் தந்தங்கள், கால்கள், தலைகள் என கண்டபடி உடைக்கப்பட்டாயிற்று. படையெடுத்து வந்த மொகலாயர், ஆங்கிலேயர் உடைத்த மிச்சத்தை நாம் நமது அறியாமை, பொறுப்பின்மை, உள்மன வக்கிரம் காரணமாக மேற்கொண்டும் சேதப்படுத்தி வருகிறோம்.

திருவனந்தபுரத்துப் பத்மநாபசுவாமி கோயிலிலும் திருவட்டாற்று ஆதிகேசவன் கோயிலிலும் அம்மணமான ஆண் -பெண் சிற்பங்கள், உடலுறவுச் சிற்பங்கள் உண்டு. அவை யாவற்றையும் தூண்களில் இருந்து உளியால் கொத்தி எறிய வேண்டும் என்ற கோரிக்கையும் இருந்தது, ஒரு காலத்தில். ஒவ்வொரு கோயிலும் புதிதாகக் கும்பாபிஷேகமோ சம்ப்ரோக்ஷணமோ செய்யப்படும்போது பல சிலைகள் கவனக் குறைவினாலும் பொறுப்பற்றுப் போனதாலும் உடைகின்றன என்கின்றனர் ஆய்வாளர்கள்.

கேரளக் கோயில்களின் கருவறைகளின் வெளிச் சுவர்களில் அற்புதமான mural paintings இன்றும் நீங்கள் காணலாம். 500 ஆண்டுகள் தொன்மையானவை. நல்ல முறையில் பாதுகாக்கவும் பராமரிக்கவும் செய்கிறார்கள். பந்தளம் ஐயப்பன் கோயில், திருச்சூர் வடக்குநாதன் கோயில், திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் என சில எடுத்துக்காட்டுகள். ‘ஓவியத்து எழுத ஒண்ணா உருவத்தான்’ என்பான் கம்பன்.

குற்றாலம் போவீர்களேயானால், ஐந்தருவி போகும் திருப்பத்தில், வலக்கைப் பக்கம், பெரியதும் ஆழமானதுமான தெப்பக் குளமும், கிழக்குப் பார்த்து ‘சித்திர சபை’ ஒன்றும் காணலாம் இன்றும். பொற்சபை, தாமிர சபை, சிற்சபை போல, இது சித்திர சபை. இறைவனை சித்திரங்களாக எழுதி வழிபடும் இடம். சித்திர சபை சுவர் எங்கும் அற்புதமான ஓவியங்கள். காணக் கண் கோடி வேண்டும். சமீப காலம் வரை, நமது உயிரினும் மேலான தமிழ் இளைஞர்கள், தமது காதலை, காதலிக்கு அறிவிக்கும் இடமாகச் சித்திரங்களைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.

ஆமதாபாத்தில், நகரின் திக்குக்களில், ஆடும் தூண்கள் என உயரமான பெருந்தூண்கள் இன்றும் உண்டு. அந்தத் தூண்களில் சில உடைத்துப் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

இயற்கை எழில் சூழ்ந்த அழகிய குன்றுகளின் உச்சிப் பாறைகளில் மதச் சின்னங்கள் வரைந்து வைக்கிறார்கள். எங்கு போய் நாம் முறையிடுவது?

வரலாற்றில் நமது கலைச் செல்வங்கள் மீது மதங்கள் நடத்திய அழிவு ஒரு புறம் எனில், கற்ற இளைஞர் செய்யும் சேதங்கள் மறுபுறம். தமது சொந்த வீட்டில், தாயின் படத்தின் மீது கீழான சொற்களை எவராலும் எழுத இயலுமா?

நமது பள்ளிகளில், கல்லூரிகளில், கலைச் செல்வங்களைப் பாதுகாப்பது பற்றியும் சேதப்படுத்தாமல் இருப்பது பற்றியும் ஆசிரியர்கள் சொல்லித்தர வேண்டும். அப்பா உபயோகித்த கைக்கடிகாரம், பேனா, சைக்கிள் எனப் பெருமை பேசும் மனிதன், ஆயிரம் ஆண்டுகள் முன்பு நமது மூதாதையர் விட்டுச் சென்ற பொக்கிஷங்களைப் பாதுகாக்க வேண்டாமா? கடவுள் மறுப்பு என்றாலும்கூட, கலைச் செல்வங்களைச் சேதம் செய்தல் தகுமா? எல்லாம் அரசாங்கமே செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பது சரியா?

புறநானூற்றில் பொன்முடியார் பாடல் ஒன்று…

ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே!

ஆம், களிறு எறிந்து பெயர்தல், யானையை வேல் எறிந்து திரும்புதல் வீரனுக்குக் கடமை. கல் எறிந்து பெயர்தல் அல்ல!

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in “தீதும் நன்றும்” and tagged , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s