தாஜ் ஹோட்டல்
வேலை தேடி சென்னை – தாதர் எக்ஸ்பிரஸில் போய் இறங்கிய மறுநாள், 1972-ம் ஆண்டு நவம்பர் 17-ம் தேதி, முதல் முறையாக தாஜ்மகால் பேலஸ் ஹோட்ட லைப் பார்த்தேன். மும்பையின் கொலாபா கடற்கரை ஓரம், அரபிக் கடல் வழியாக இங்கிலாந்து மன்னர், பேரரசர் 5-ம் ஜார்ஜும் ராணிமேரியும், 1911-ல் வந்து இறங்கிய போதும் அந்த ஹோட்டல் அங்கு இருந்தது. ஒரு குறிப்பிடத்தக்க வேறுபாடு, இங்கிலாந்து அரச பரம்பரையினர் வந்து இறங்கியதன் ஞாபகார்த்தமாக, 1924-ல் ‘கேட்வே ஆஃப் இந்தியா’ என்று ஓர் அற்புதமான வளைவு கட்டினார்கள்.
கேட்வே ஆஃப் இந்தியாவுக்கும் மூத்தது தாஜ் ஹோட்டல். 1903-ல் நவம்பர் 16-ம் தேதி திறக்கப்பட்டது. சரியாக 105 ஆண்டுகள் ஆகின்றன. மௌனமாக அரபிக் கடற்பரப்பை மேற்பார்வை செய்துகொண்டு, அந்த ஹோட்டல் எத்தனை வரலாற்று நிகழ்வுகளைப் பார்த்திருக்கும்!
ஆங்கிலேயர், கொலாபா கடற்கரையில் நில மீட்பு செய்துகொண்டு இருந்தபோது, 1898-ல் நவம்பர் 1-ம் தேதி, இரண்டரை ஏக்கர் நிலத்தை 99 ஆண்டு கால குத்தகைக்கு வாங்கினார் பம்பாயின் பார்சி இனத்துப் புகழ்பெற்ற ஜாம்செட்ஜி நுசர்வான்ஜி டாடா எனும் தொழிலதிபர். அன்று அப்பலோ ஹோட்டல் என ஒன்று இருந்ததாகவும், ஜரோப்பியர் அல்லாத அவரை ஹோட்டல் நிர்வாகம் அவமதித்து வெளியேற்றிய காரணத்தினால், இந்த தாஜ் ஹோட்டலைக் கட்டினார் என்றும் செவி வழிச் செய்தி உண்டு. அப்பலோ ஹோட்டல், வரலாற்றில் மாய்ந்து போய்விட்டது. ஆனால், ஜாம்செட்ஜி நுசர்வான்ஜி டாடாவுக்கு மும்பை ஃபோர்ட் பகுதியில் அற்புதமான சிலை ஒன்று உண்டு.
முதல் உலக மகா யுத்தத்தின்போது, இந்த ஹோட்டல் 600 படுக்கை கள்கொண்ட மருத்துவமனையாக மாற்றப்பட்டு பணி புரிந்திருக்கிறது. இந்திய மண்ணின் மீது காதலும் அபிமானமும் கொண்டவர்கள் பார்சி இனத்தவர் என்பதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உண்டு. மத்திய ஐரோப்பாவில் இருந்து ஆயிரம் ஆண்டுகள் முன்பு அவர்கள் புலம் பெயர்ந்தபோது கொணர்ந்த தீ, இன்றும் அவர்களது கோயிலில் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டு இருக்கிறது.
இந்திய முறைப்படி தேங்காய் உடைத்து, பார்சிகளின் திவா எனப்படும் எண்ணெய் விளக்கேற்றி தாஜ் ஹோட்டலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு இருக்கிறது. ஹோட்டலில் தங்குபவர்கள் பிக்னிக் போய் வர, உரன் தீவின் அருகில் இருந்த பாஞ்ஜீ, டோங்ரி எனும் பெயருள்ள இரண்டு சிறு தீவுகளை விலைக்கு வாங்கினார்களாம்.
எம்.எஸ்ஸி., (கணிதம்) பயின்று, உள்ளூரில் ‘விலை’ கொடுக்க முடியாமல் வேலை தேடி மும்பை சென்று, அலைந்து நடந்த ஆரம்ப நாட்கள் அவை. 10 நாட்கள் எங்களூர் சங்கர அண்ணனும் தொடர்ந்து வேலூர் பக்கம் உள்ள சேகனூர் மார்க்கபந்து லட்சுமண முதலியாரும் எனக்கு அடைக்கலம் தந்தனர், கொலாபாவின் நுனியில் அமைந்திருந்த நேவி நகரில். Tata Institute of Fundamental Research TIFR எனும் நிறுவனக் கட்டடம் கம்பீரமாக எழுந்து நிற்கும் பகுதி. அடுத்து அங்கும் கடல்.
தற்காலிகமாக உணவும் தங்குமிடமும் எனக்குக் கருணையினால் வழங்கப்பட்டு இருந்தது. காலையில் எழுந்து வேலை காலி விளம் பரங்கள் பார்ப்பது, விண்ணப்பங்கள் எழுதி, டைம்ஸ் ஆஃப் இந்தியா பெட்டியில் கொண்டுபோடுவது, முன் மாலையில் புரவலர் வீடு திரும்பும் வரை சுற்றிக் கறங்கி நடப்பது எனது 2 மாத வேலையாக இருந்தது. விக்டோரியா டெர்மினஸ், முனிசிபல் கார்ப்பரேஷன், ஜி.பி.ஓ, சர்ச் கேட் ரயில் நிலையம், இறுதியாக தாஜ் ஹோட்டல் என்பது எனது தினசரி சுற்றுப்பயணத் திட்டம். சில நாட்கள் சௌபாத்தி, மரைன் டிரைவ் காலாகோடா, ஜஹாங்கீர் ஆர்ட் கேலரி, மியூஸியம், நாரிமன் பாயின்ட் என்று அலைந்தாலும் மீதி நாட்கள் தாஜ் ஹோட்டல் முன்புதான் முன் மாலைத் தாவளம்.
நேவி நகரில் இருந்து விக்டோரியா டெர்மினஸ் 3 கி.மீ. இரண்டு வேளையும் தளர் நடை. பிற்பகல் திரும்புகையில், உத்தாத்ம சௌக், நேவல் டாக்யார்ட், சத்ரபதி சிவாஜியின் கடற்படைத் தளபதியாக இருந்த கனோஜி ஆங்கரே பெயரில் நிறுவப்பட்ட ஐ.என்.எஸ். ஆங்கரே, சுற்றிக்கொண்டு தாஜ் ஹோட்டல் வருவேன். கடல் காப்புச் சுவரில் அமரும்போது மாலை 4 மணி ஆகிவிடும். இளம் மஞ்சள் வெயில் அடிக்கும். கொள்ளையாகக் கடற்காற்று வீசும், கேட்வே ஆஃப் இந்தியா முன்பும், சத்ரபதி சிவாஜி சிலை நிற்கும் சதுக்கத்திலும், தாஜ் ஹோட்டல் முன்பும் கூட்டம் கூட்ட மாக, ஆயிரக்கணக்கில் மாடப் புறாக் கள் குமுறும். மக்கள், குறிப்பாகஜெயின் கள், யூதர்கள், பார்சிகள் தானியங்கள் வாங்கி வந்து புறாக்களுக்கு கை கையாக வாரி விசிறுவார்கள்.
தாஜ் ஹோட்டலை, கேட் வே ஆஃப் இந்தியாவை, அரபிக் கடலின் உயர அலைகளைப் பார்த்துக்கொண்டு விரும்பும் வரை உட்கார்ந்து இருக்கலாம். காசு இருந்தால் கொறிக்கக் கடலை வாங்கலாம். கழுத்தில் கோத்துத் தொங்கிய கூடையில் நிலக்கடலை, பட்டாணிக்கடலை, உப்புக்கடலை குவித்து, அதன் மேல் தீக்கங்கு நிறைந்த மண் குடுவை மாற்றி மாற்றி வைத்து, ‘ஷேய்ங், ஷேய்ங் தானா, ஷேய்ங்வாலா’ என்று பகல் பூரா கூவித் திரியும் உ.பி. பையாக்கள், கடலை விற்றும் குடும்பம் போற்றினார்கள்.
தாஜ் ஹோட்டலுக்கு முதுகு காட்டி அமர்ந்தால் வலக்கோடியில் ச சூன் டாக் எனப்படும் மீன் பிடித் துறையின் மீன் பிடிப் படகுகள். இடது கோடியில் Stream -ல் நிற்கும் இந்தியக் கடற்படைக் கப்பல்கள். ஐ.என்.எஸ்.விக்ராந்த், ஐ.என்.எஸ். டெல்லி, ஐ.என்.எஸ். மைசூர் எனும் விமானம் தாங்கிய, தாங்காத போர்க் கப்பல்கள், வெளிநாட்டு வணிகக் கப்பல்கள்.
மாலை கவியும்போது, கடல் அலைகளின் துளிகள், துமிகள் காற்றில் பரந்து வீசும். நேவி நகரில் எங்களுடன் குடியிருப்பைப் பகிர்ந்துகொண்டது ஒரு வங்காளிக் குடும்பம். ஞாயிற்றுக்கிழமை அல்லாத விடுமுறை நாட்களில் காலையில் விப்பின் தாஸ் ச சூன் டாக்குக்கு மீன் வாங்கப் போவார். ஸ்கூட்டரில் தொற்றிக்கொண்டு நானும் போனது உண்டு. மொத்தமாக வாங்கி வந்த மீனைக் கழுவி, நறுக்கி முள் இல்லாத துண்டங்களாக ஊறுகாய் போட்டு முடிக்கும்போது மாலை ஆகிவிடும். பிறகென்ன? அன்றைய முன்னிரவில் மிலிட்டரி ரம்முக்கு டச்சர், மீன் ஊறுகாய் எனும் பெருமை படைத்து இவ்வுலகு.
கூர்ந்து, ஆழ்ந்து, கவனித்துக் கேட்டால், தாஜ் நேரடியாகத் தன் அனுபவங்களைச் சொல்லும். இங்கிலாந்து அரசி இரண்டாவது எலிசபெத், எகிப்திய அதிபர் கமால் அப்துல் நாசர், நாவலாசிரியர் சாமர் செட் மாம், மவுன்ட்பேட்டன் பிரபு, பில் கிளின்டன் முதலியோர் வந்து தங்கியிருந்த கதை. 46 சூட்டுகள் அடங்கிய தனது 565 அறைகள், Sea lounge, Banquet Hall, Princes Room, Turkish Bath என….
7 ரூபாய் தினக் கூலிக்கு முதன் முதலில் மும்பை கலெக்டர் ஆபீஸில் வேலைக்குச் சேர்ந்த ஒருவன், எங்ஙனம் தாஜ் ஹோட்டலில் நுழைந்து பார்ப்பது சாத்தியம்? அன்றும், இன்றும், என்றும் சாத்தியமில்லை. 100 கோடியைக் கடந்த இந்தியரில், சில ஆயிரம் தவிர்த்த மீதி இந்தியரில் எவருக்கும் சாத்தியமில்லை. இஃதோர் நகை முரண். என்றாலும் தொடர்ந்து 35 ஆண்டுகளாக, சமயம் வாய்க்கும்போதெல்லாம் அந்தக் கட்டடத்தின் அழகைப் பருக, யார் தயவும், சம்மதமும், உத்தரவும் வேண்டி இருக்கவில்லை. சாதாரண இந்தியன் கண்டு அனுபவிக்கலாம், கொண்டு அனுபவிக்க முடியாது.
ஜுன் முதல் செப்டம்பர் வரை மும்பையின் பருவ மழைக் காலம். மழை என்றால் பெரு மழை, அடை மழை, தொடர் மழை. அந்த மழையை, காற்றை கடலலையைச் சொல்லில் பெயர்க்க இயலாது. கேட் வேயில் ஒதுங்கி நின்று பார்த்தால் சீறும் கடலலை சாலையில் மோத, பொழிவில் புதைந்து நிற்கும் தாஜ் ஹோட்டல், அமைதியாகவும் ஆடம்பரமாகவும்.
மும்பைவாசிகளுக்கு அது ஒரு கலைச் சின்னம்மட்டு மல்ல, கௌரவச் சின்னம். எம் மாநிலத்தவர் மும்பை வந்தாலும் தாஜ் ஹோட்டல் காணாமல் திரும்பியது இல்லை. சொந்த தேசத்து சாதாரணர்களை விலக்கி நிறுத்தும் ஹோட்டல்தான். ஒரு நாள் வாடகை 25 ஆயிரம் என்றாலும், அது தேசியக் கலைச் சொத்து.
இந்த ஆண்டில் நவம்பர் இறுதி நாட்களில், தாஜ் ஹோட்டல் மீது நடந்த தீவிரவாதத் தாக்குதல், கோடிக்கணக்கான இந்தியரின் உறக்கம் கெடுத்தது. பலர் மனநல மருத்துவரை அணுகினர். எனக்குத் தொடர்ந்து பதற்றம் இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானில் ஓர் ஹோட்டல் தரை மட்டம் ஆனதைப் போல இதுவும் ஆகிவிடக் கூடாதே என்று. நான்காவது நாள் காலை பெருமூச்சொன்று கிளர்ந்தது. நல்லவேளையாக தாஜ் தப்பியது. ராமனைக் கருதி குகன் சொல்வதாகக் கம்பனில் ஒரு வரி, ‘ஒரு பகல் பழகினார் உயிரை ஈவரால்’ என்று அது போல.
முன்பு இந்தியாவில் பல்வேறு இடங்களில் குண்டு வெடித்துத் தொகை தொகையாக ஏழை மக்கள் மடிந்தபோது, நட்சத்திர விடுதிகளின் மதுச் சாலைகளில் பேசு பொருள் ஆகும் தகுதி மட்டுமே அந்தக் குண்டு வெடிப்புகளுக்கு இருந்தது. தாஜ் ஹோட்டல் மீது நடந்த இந்தத் தாக்குதல், எவரும் இங்கு, இனிமேல் பாதுகாப்பாக இல்லை என்ற பீதியைப் பெரும் பணக் காரரிடம், அரசியல் தலைவரிடம், உயர் அதிகாரி களிடம், நடிகர்களிடம் மூட்டியுள்ளது.
இந்தப் பயங்கரவாதத் தாக்குதல்களால் 200 பேர் மரணம், 500 பேர் காயம் எனும் பின்புலத்தில், இந்திய இளைஞர் கூட்டம் இன்று அரசியல் அதிகார வர்க்கத்தை ‘ச்சீ’ எனக் காறித் துப்புகிறது. ஒரு தேசத்து மக்கள் தம்மை ஆளுகின்றவர் மீது சொல்லொணா அவமரியாதையும், நம்பிக்கை இழப்பும், ஏளனமும், கோபமும், எரிச்சலும்கொண்டு இருக்கிறார்கள். எனினும், உறைத்ததாகத் தெரியவில்லை.
இரண்டு நாட்கள் முன்பு எனக்கொரு எஸ்.எம்.எஸ். வந்தது. ‘போட்டில் வந்தவர்களை நமது வீரர்கள் போராடி வென்றனர். வோட்டில் வந்தவர்களை என்ன செய்வது?’ – இன்று இந்திய மக்கள் மனதில் இது முக்கியமான கேள்வி.
இந்தக் கேள்வி பரந்து பெருகி வளர்வது நாட்டுக்கு நல்லது!
மும்பையின் மீதான உங்களின் தீராக்காதல் எனை எப்போதும் கவர்ந்த ஒரு அம்சம்.எனக்கு தெரிந்து உங்களின் படைப்புக்களில் மும்பையைக் குறித்து நீங்கள் பதிவு செய்தது போல் அம் மண்ணின்[ மராட்டிய] எழுத்தாளர்கள் கூட எழுதியிருப்பார்களா என சந்தேகம்தான்.இன்றைய மும்பை குறித்த உங்கள் பார்வையைப் பதிவு செய்யுங்கள்.
[நீங்கள் இங்கு வந்துசெல்வீர்கள் என எண்ணிக்கொண்டு இதை எழுதியுள்ளேன்]
நாஞ்சில் ஸார்,
சென்ற முறை நம் கோவை நண்பர் அரங்கநாயகம் மும்பை வந்திருந்த போது நீங்கள் ஏன் வலைத் தளம் வைத்துக் கொள்ளவில்லை என்று பேசிக் கொண்டிருந்தோம்.. அதற்குள் வந்து விட்டீர்கள்.. மிக்க நன்றி.. வாழ்க நீ எம்மான்..
உங்கள் தீதும் நன்றும்க்கு எதிர்ப்பாட்டாக எத்தனை கோடி இன்பம் வைத்தாய் என்று 2-3 கட்டுரைகள் எழுதினேன்.. http://www.balasubramaniam.wordpress.com இல்..
அன்புடன்
பாலா
மும்பை
நண்பரே,
இது நாஞ்சில்நாடனின் எழுத்துக்களுக்காக நான் உருவாக்கிய வலைப்பதிவு.
இந்த வலைப்பதிவை தினமும் நாஞ்சில் பார்வையிடுகிறாரா என்பதுகூட சந்தேகமே?
நான் அறிந்தவரை இன்னும் நாஞ்சிலுக்கு இணையத்தை குறித்து ஒவ்வாமை இருப்பதாகவே தோன்றுகிறது.
நன்றியுடன்
ஏர்வாடி சுல்தான்
1971 முதல் 1974 வரை நான் பம்பாயில்தான் வசித்தேன். அலுவலகம் நியூ மரைன் லைன்ஸில்.
வாசம் மாதுங்காவில். சாப்பாடு மாதுங்கா கன்சர்ன்சில். பம்பாய்வாழ் தமிழர்கள் அத்தனை பேரும் அங்கு ஏதாவது ஒரு நாளாவது வந்திருப்பார்கள். நீங்கள் வந்திருக்கிறீர்களா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
நண்பரே,
இது நாஞ்சில்நாடனின் எழுத்துக்களுக்காக நான் உருவாக்கிய வலைப்பதிவு.
இந்த வலைப்பதிவை தினமும் நாஞ்சில் பார்வையிடுகிறாரா என்பதுகூட சந்தேகமே?
நீங்கள் குறிப்பிட்ட இடத்திற்க்கு நான் வந்ததில்லை, ஆனால் தாஜ் ஹோட்டலில் சம்பவத்திற்க்கு சரியாக ஒரு வருடம் முன் தங்கியிருக்கிறேன்,
அழகான வாசிப்பு அனுபவம். பகிர்வுக்கு நன்றி.
இந்த வருடம் நானும் என் முதலாளியும் எங்களது தீபாவளி விடுமுறையை மும்பாய் தாஜ் ஹோட்டலில் கொண்டாட முடிவு செய்திருந்தோம், மும்பேக்கு டிக்கட் எல்லாம் போட்டாச்சு, ஆனால் தாஜ்ஹோட்டலில் அறை இல்லை, மஹா பெரியண்ணன் வருவதால் ஒருவாரத்துக்கு மற்றவர்களுக்கு அனுமதி இல்லையாம், சரி, அதற்கடுத்த ஓபராயில் கொண்டாடலாம்ண்ணா அது பெரியண்ணனின் அடிபொடிகளுக்காக, அதுவும் ஒருவாரத்துக்கு நமக்கு கிடையாதாம். என்ன செய்ய? பழையபடி கோவளம்தான்.