வருணனைகள்- உவமைகள்: நாஞ்சில்நாடன்

வருணனைகள்- உவமைகள்: நாஞ்சில்நாடன்

வே.சபாநாயகம்.

http://ninaivu.blogspot.com/2004/11/31.html

வருணனைகள்- உவமைகள்
நாஞ்சில்நாடன் படைப்புகளிலிருந்து:

1. நிதானமாகப் பறந்து கொண்டிருந்தது நிலவு. பச்சைக்கும் பழுப்புக்குமான இடைநிறத்தில் சாய்ந்து கிடந்தன நெற்புதர்கள்.காற்றில் பழுக்கும் நெல்லின் பரவிய மணம். நிலவு கரைந்த காற்று சலசலக்கச் சஞ்சலப்பட்டது.

– ‘பாலம்’ கதையில்.

2. கொம்புச் சீப்பை எடுத்துப் ‘பறட் பறட்’ டென்று தலை வாரினான். கோவிலுக்குப் போவதால் திருநீறு பூசினால் நல்லதோ என்று அவனுக்குத் தோன்றியது. சந்தேகத்தின் பலனைச் சாமிக்கு அளித்து மூலையில் தொங்கிய தேங்காய்ச் சிரட்டைக் கப்பரையிலிருந்து திருநீற்றை அள்ளிப் பூசினான்.

– ‘ஆசையெனும் நாய்கள்’.

3. ஏனோ தெரியவில்லை., சமீப காலமாய்த் தமிழ் சினிமா தியேட்டருக்குள் நுழைவது என்பது ஏதோ தகாத காரியம் செய்வது போன்ற கூச்சத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. காமிராக்கள் கிராமத்தின் அழகைக் காட்டிக் கொண்டே இருக்கையில் ஒலிபெருக்கிகள் நரகலை உமிழ்ந்து கொண்டிருந்தன.

– ‘ஒரு வழிப் பயணம்’.

4. தெரு முற்றங்களில் தெளிபடுகிற சாணித் தண்ணீரின் சளசளப்பு, உழப் போகிற மாட்டுக்குத் தண்ணீர் வைக்கின்றதால் எழும்பும் உலோக வாளிகளின் கிணுக்காரம், ‘கடக் கடக்’ என்று வட்டக் கொம்புகளைப் பிணைத்துக் கொண்டு செல்லச் சண்டை போடும் எருமைக் கடாக்கள், கழுநீர்ப் தொட்டிக்குள் முகத்தை முக்கிமூச்சு விட்டுக் ‘கட கட’வெனச் சத்த மெழுப்பும் எருமைக் கன்று, சம்பாத் தவிட்டின்
ரேகைகள் கண் மட்டத்துக்கு வட்டம் போட நாடி மயிர்களிலிருந்து தண்ணீர் சொட்ட மேலுதட்டை உயர்த்தி£ இள்¢த்து ‘ங்றீங்ங்….’என்று குரலெழுப்பும் தாய் எருமையின் பின் புறத்தை முகர்ந்து பார்த்து நக்குகின்ற இரண்டு பல் கிடாக் கன்று, “சவத்துப் பய சாதிக்கு ஒரு
வகுதரவு கெடையாது!” என்று கிடாக்கன்றின் புட்டியில் அழிசன் கம்பால் சாத்துகிற செல்லையா-

இதையெல்லாம் மௌனமாய்க் கவனித்துக் கொண்டு கட்டிலில் கிடந்து புரண்டான் சிதம்பரம்.

– ‘தேடல்’.

5. பெட்டியினுள் ஏறி இருக்கையில் அமர்ந்தான். ரயில் புறப்பட இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தன. ஒரு சின்னப் படையெடுப்பு நடத்துவது போல அந்தக் குடும்பம் ஏறியது.

– ‘சிறு வீடு’.

6. வேறு குத்தகையில் தான் என்ன வருமானம்? தென்னை, பனைகளுக்குக் கிளைகள் இல்லை என்பதால் பெரிய லாபமில்லை. மாப்பிள்ளை பிடித்த காசு பிள்ளைஅழிக்க ஆச்சு என்பது போல், தென்னை மரங்கள் உச்சிக் கொண்டையில் நாகமணி போல் சேமித்து வைத்திருக்கும் காய்களைப் பறித்தால் ஏற்றுக் கூலிக்குத் தான் சரியாக இருக்கும்.

– ‘புளி மூடு’.

7. வைத்தியனாருக்குப் பிள்ளைகள் கிடையாது. ஒரு புராண கதா பாத்திரம் போல இருந்தார். காதில் வெள்ளைக் கடுக்கன், முன்தலை சிரைத்த குடுமி, வெள்ளை உடம்பெல்லாம் வெள்ளை ரோமம், சிறிய தொந்திக்கு மேல் கட்டிய அகலக்கரை வேட்டி,தோளில் துவர்த்து, மூக்குப் பொடி வாசம் வீசும் மீசையற்ற முகம், கைத்தடி, மருந்துப் பெட்டி….கொண்டு போன ஆறவுன்சு குப்பியில் ‘முள்ளெலித் தைலம்’ என்று ஒரு சொந்தத் தயாரிப்பை நாலு அவுன்சு ஊற்றிக் கொடுத்தார்.

– ‘முள்ளெலித்தைலம்.’

8. அறையினுள் இருள் சேமித்து வைத்திருந்தார்கள் போலும்.

– ‘பேய்க்கொட்டு’.

9. சுப்பையாப் பிள்ளைக்கு ஒரே புழுக்கமாய் இருந்தது. காற்று நிறைமாத கர்ப்பிணி போல அசைந்தது.

– ‘சைவமும் சாரைப்பாம்பும்’.

10. அது 1951ல் கட்டப்பட்ட கட்டிடம். மாடிப்படிகள், கைப்பிடிச் சுவர்கள் எல்லாம் மூளிபட்டுக் கிடந்தது. சொசைட்டிக் காரர்கள் எல்லா நிலைகளிலும் பதிமூன்று வாட் பல்பு போட்டிருந்தார்கள். வெளிச்சுவர்கள் சுண்ணாம்பு கண்டு பதினேழு ஆண்டுகள் ஆகியிருந்தபடியால் மின் விளக்கின் ஒளியில் முக்கால் பாகத்தைச் சுவர்கள் உண்டு ஜீவித்திருந்தன. எலியன்று மூன்றாம் மாடியிலிருந்து யாரையோ சந்தித்து விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தது அவசரமாக.

– ‘சதுரங்கக் குதிரை’ நாவலில்.

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் and tagged , , , , , . Bookmark the permalink.

1 Response to வருணனைகள்- உவமைகள்: நாஞ்சில்நாடன்

  1. alagamperumal சொல்கிறார்:

    ஆயுதக் கிடங்கில் நின்றாலும் எதையும் பயன்படுத்தத் தெரியாத ஒரு கோழையான சமூகத்துக்கு அந்த ஆயுதங்களால் என்ன பயன்?…Nanchil in solvanam

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s