வாசனை – நாஞ்சில் நாடன்
தீராநதி (அக்டோபர் 2009 இதழ்)
நாற்றம் என்பது ஜென்ம வாசனை
இந்தப் பிறப்பின் சொந்த வாசனை
கருப்பூரம் நாறிய கமலப்பூ நாறிய
மருப்பொசித்த மாதவன் வாய்ச்சுவை
ஆண்டாள் வேட்ட காதல் வாசனை
ஆதி சிவனின் அந்தரங்கப் பெயர்
நாறும்பூ நாதன்
பட்டினத்தாருக்கு பெண்குழி யாவும்
நாற்றக் குழியே
அவரவர் நாற்றம்
அவர்தம் தலைச்சுமை
சோறு கொதிக்கும் வாசனை
யொன்றே
சின்ன வயதில் ஈர்த்தது எம்மை
அறியாப் பருவம் தகப்பன் தோளில்
அமர்ந்து கேட்டது இசையின்
வாசனை
சமைந்த தோழிகள் சூடி நடந்த
பிச்சிப்பூவோ பேரின்ப வாசனை
பள்ளிப் பருவம் தொற்றிப் படர்ந்தது
தமிழ் முலைப் பாலெனும் உயிரின் வாசனை
மண்ணின் வாசனை மயக்கிக் கொண்டிருப்பது
பணவாசனை மருட்டிய தில்லை
கள்ளின் வாசனை காம வாசனை
குத்திக் கிழித்த முள்ளின் வாசனை
ஈழப் பண்டிதன் சச்சிதானந்தம்
யாசித்து நின்ற வாசனை யொன்று
‘சாவில் தமிழ் படித்துச் சாகவேண்டும்
என் சாம்பல் தமிழ் மணந்து வேக வேண்டும்
ஓடையிலே என் சாம்பல் கரையும்போது
ஒண் தமிழே நீ சலசலத்து ஓட வேண்டும்’
ஈழத் தமிழனின் இரத்த வாசனை
உலகம் எங்கும் உரத்துக் கேட்டது
மூத்த தாய் மண்ணின் முத்தமிழ் வாசனை
நெஞ்சறிந்த கள்ள வாசனை
ஈண முக்கவும் கன்றை நக்கவும்
ஏலாத கிழட்டுப் பசுவின்
தீனவாசனை
தீந்தமிழ் வாசனை.
– நாஞ்சில் நாடன் –
***