தமிழரும், தாவரமும்

தமிழரும், தாவரமும்

தொடர்ந்து எழுதாவிட்டாலும் வாசித்துக்கொண்டு இருக்கும் காரணத்தால், அவ்வப்போது என்னை ஈர்த்த சில புத்தகங்கள் பற்றி அறிமுகக் கட்டுரை எழுதும் திட்டம் உண்டு எனக்கு. நிச்சயமாக ஆய்வுக்கட்டுரையாக அவை அமையாது. நான் உழைத்து ஈட்டிய பணம் கொடுத்து வாங்கிய புத்தகங்களாக அவை இருக்கும். எனவே எழுதுவது என் சுதந்திரம். யாரும் மதிப்புரை எழுதும் முனைப்பில் இருக்கிறேன் என்றெண்ணி, நூல்களை அனுப்பி என் சங்கை நெரிக்க வேண்டாம் என்பது என் கோரிக்கை.

 ‘தமிழரும், தாவரமும்’ என்றொரு புத்தகம் வாசிக்கக் கிடைத்தது. கண்ணில் பட்ட இடம் பொது நூலகம், தற்செயலாக. நூலகர் என் வாசகர், உறவினர், நண்பர். எனவே அவர் பெயரில் பதிவு செய்து எடுத்துக்கொண்டு வந்தேன். அந்தப் படியின் முதல் வாசகன் நான். பெரும்பாலும் இதுபோன்ற நூல்கள், கிராம நூலகங்களில் ஒரு வாசகனால் கூட எடுத்துப் புரட்டிப் பார்க்கப்படும் யோகமற்ற சோகத்தில் வெறிதே உறங்கிக் கிடக்கின்றன. இன்னொரு வாசகரால் படிக்கப்படாமலே போய்விடும் சாத்தியமே அதிகம். எத்தனையோ அபூர்வமான, அற்புதமான நூல்கள் நூலக அடுக்குகளில் தூசி படிந்து கிடக்கின்றன, கோரிக்கை அற்று.

நூலகக் கட்டிடடம் கட்டி, மேஜை நாற்காலிகள் போட்டு, மின்விளக்குகள் காற்றாடிகள் அமைத்து, புத்தகங்களை விலைக்கு வாங்கி, அட்டவணைப்படுத்தி, அடுக்கி வைத்து, மனிதக்கரம் படாமலேயே மட்கும் அவலம் சங்கடப்படுத்துகிறது. இதற்கு மேல் எந்த அரசும் என்ன செய்ய இயலும்? மக்களுக்கு வாசிக்கும், தெரிந்து கொள்ளும் அக்கறை இல்லையே?

இப்படியே நமது வாசிக்கும் பழக்கம் பெருவழியிற் போனால், ஒரு ரூபாய்க் கூழ்த்தாள் தினசரிகளையும், சாலையோரச் சுவரொட்டிகளையும், ப்ளக்ஸ் தட்டிகளையும் மட்டுமே வாசிக்கும் அற்ப மாந்தராய் நாம் போய்விடுவோம் என்று கவலையாக இருக்கிறது. செம்மொழி என்பதன் பொருள் செத்துக்கொண்டிருக்கும் மொழி என்பதல்ல.

தீவிர வாசிப்பு என்பதும் எக்காரணம் கொண்டும் கவிதை, சிறுகதை, நாவல், பத்தி எழுத்துகளில் மட்டுமே சென்று தஞ்சம் அடைந்து விடலாகாது. கூப்பாடுகளையும், வண்ணச் சரவிளக்குகளையும், காற்றிலாடும் கட்சிக் கொடிகளையும், கைவீசி நடப்பது போன்ற போஸ்டர்களையும், தலைவர் என்று தம்மை அழைத்துக் கொள்பவர்களின் பேராசைகளையும் தாண்டி, மொழிக்குள் எத்தனையோ நடந்து கொண்டிருக்கிறது.

ஆனால் சில ஆய்வு மாணவர்களைத் தாண்டி எவராலும் வாசிக்கப்படாத பல பயனுள்ள நூல்களை எண்ண வருத்தமாய் இருக்கிறது. ஆயுதக் கிடங்கில் நின்றாலும் எதையும் பயன்படுத்தத் தெரியாத ஒரு கோழையான சமூகத்துக்கு அந்த ஆயுதங்களால் என்ன பயன்?

இங்கு நான் பரிந்துரைக்கும் நூலை எழுதியவர் முனைவர் கு.வி.கிருஷ்ணமூர்த்தி. பாரதிதாசன் பல்கலைக் கழகத்துத் தாவர அறிவியல்துறை பேராசிரியராக, துறைத்தலைவராக இருந்து ஓய்வு பெற்றார். அவரை நான் சந்தித்ததில்லை. தொலைபேசியில் உரையாடியதில்லை. இந்தப்புத்தகம் பார்க்கும்வரை அவரது இருப்பையும் அறிந்திலேன். எங்கு வசிக்கிறார் என்றும் அறிந்திலேன். எனது இருப்பையும், அது போல், அவர் அறிந்திருக்க வாய்ப்பேயில்லை.

பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி, 2007-இல் வெளியிட்ட இந்தப் புத்தகம் டெமி அளவில் 406 பக்கங்கள். விலை ரூ.200-00.

எனது நோக்கம் தீவிரத் தமிழ் வாசகனுக்கும், படைப்பாளிக்கும் இந்த நூலை அறிமுகம் செய்வதுதான்.

இந்த நூலின் முன்னுரையில் ஆசிரியர் கூறுவது: ‘எல்லா உயிரினங்களிலேயும் மிகச்சிறப்பானவை தாவரங்கள். ஆதவனின் ஒளிச்சக்தியை வேதிய ஆற்றலுடைய உணவுப்பொருட்களாக மாற்றும் தன்மை தாவரங்களுக்குத்தான் உண்டு. மனித இனமும், மற்ற விலங்குகளும் இந்த வேதிய ஆற்றலைப் பெறுவதற்காக நேரடியாகவோ, மறைமுகமாகவோ தாவரங்களைச் சார்ந்துள்ளன’ என்று.

அதற்குத் தாவரங்களைப் பற்றிய அடிப்படைத் தகவல்களையாவது அறிந்து கொள்வது தீவிரத் தேடலுள்ள வாசகரன்றியும் சாதாரண மக்களுக்கும் முக்கியமானதுதான். நம்மைச் சுற்றியுள்ள பறவைகள், விலங்குகள், தாவரங்கள், மீன்களைப் பற்றிக் கூட அறிந்து கொள்ளாமல் என்ன வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நாம்?

பறவை என்பது புறநானூற்றுச் சொல். ‘பழுமரம் உன்னிய பறவை போல’ என்பது பாடல் வரி. இரண்டாயிரம் ஆண்டுகள் தாண்டி இன்னும் வாழும் சொல். அதுபோல் எத்தனையோ வகையான தாவரங்கள் நம்முடன் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அன்று தமிழன் சூட்டிய பெயருடனோ அல்லது வேறு பெயருடனோ அல்லது பெயர் ஏதும் அற்றோ!

தமிழரின் தாவரங்கள் பற்றிய தெளிவானதோர் பார்வையைத் தருகின்றது இந்த நூல். தமிழகத்தின் இயற்கைச் சூழல், தமிழரின் தாவர அறிவியல் புலமை, தமிழகத்தின் இயல் தாவரங்களும், அயல் தாவரங்களும் தமிழரின் ஆன்மவியலும், வேளாண் மற்றும் தோட்டத்தாவரங்களும் தமிழரும், தாவரங்களும், தமிழர் உணவும், தாவரங்களும், தமிழர் மருந்தும், தமிழகத்தில் தாவரப் பயன்பாடும் தாவரம் சார் தொழில்களும், தமிழகத் தாவரப் பொருட்களின் வணிகம் எனப் பலவகைத் தலைப்புகளில் ஆய்வுக்கட்டுரைகள் இந்த நூலில்.

தாவரங்களை தொல்காப்பியத் தாவரங்கள், சங்ககாலத் தாவரங்கள், சங்கம் மருவிய காலத் தாவரங்கள், பக்தி காலம் கி.பி 600 முதல் கி.பி 1750 வரை, நாயக்கர்காலம் எனக் குறிப்பிடப்பட்டுள்ள தாவரங்கள் என விரிவான வியப்பளிக்கும் அட்டவணையையும் கொண்டது.

உண்மையில் எங்கும் எவரும் சொல்லி நான் கேட்டதில்லை, தொல்காப்பியத்தில் 52 தாவரங்களும், சங்க இலக்கியங்களில் 207 தாவரங்களும், சங்கம் மருவிய காலத்தில் 185 தாவரங்களும், பக்தி இலக்கிய காலத்தில் 238 தாவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன என்று. இவற்றுள் ஏற்கனவே பகுக்கப்பட்டுள்ள காலகட்டங்களில் சுட்டப்பட்ட தாவரங்களும் அடங்கும்.

சில ஆய்வுகள் மிகுந்த சுவாரசியம் தருவதாக அமைந்துள்ளன. ஏற்கனவே புளி எனும் தாவரம் பற்றி வேறோர் கட்டுரையில் நான் குறிப்பிட்டது இந்த நூலை ஆதாரம் காட்டியே! தொல்காப்பியம் குறிப்பிடும் ‘எகின்’ எனும் மரம் புளியைக் குறிக்கும் எனப் பிற ஆய்வாளர் கருதுவதை இந்நூலாசிரியர் மறுத்துப் பேசுவதையும் குறிப்பிட்டுள்ளேன்.

பேராசிரியர் கு.வி.கிருஷ்ணமூர்த்தி, தொல்காப்பியம், சங்ககாலம், சங்கம் மருவிய காலம், பக்தி இலக்கிய காலம் இவற்றுள் ஆளப்பட்ட தாவரங்கள் குறித்து ஏராளமான மேற்கோள்கள் தருகிறார். ‘வஞ்சிக் கோட்டு உறங்கு நாரை’ என்ற புறநானூற்ற வரிபோல. வஞ்சிமரத்தின் கிளையில் உறங்கும் நாரை என்பது பொருள். இதில் வஞ்சி என்பது பூவரச மரமாக இருக்க வேண்டும் என்கிறார். பூவரச மர வைரத்தில் செதுக்கிய கோடிக் கலப்பைக் குத்தியின் நேர்த்தியும் பயன்பாடும் பற்றி எனக்கு அனுபவம் உண்டு. ஆனால் பூவரசுதான் வஞ்சி என்பதோர் ஆச்சரியம். இங்கு பூவரச மரம் என்று சொல்லும்போது அது புரசமரம் அல்ல என்பதையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும். இன்றும் தமிழகமெங்கும் பரவலாகக் காணப்படும் மரம் இது.

ஆலமரம் தொல்காப்பிய காலத்துக்கு முன்பே தமிழகத்தை அடைந்துவிட்ட அயல் தாவரம் என்பதை நாமறிவோமா? தென்னை, தெங்கு எனும் பெயரில் அறியப்பட்டது என்றும் முதன்முதலில் தென்னை எனும் சொல் நாலடியாரில் காணப்படுகிறது எனும் தகவலும் ரசமாக இருக்கின்றன.

பத்தொம்பதாம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் மன்னர் விசாகம் திருநாள் அவர்களால் தென்னமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்ட தாவரம்தான் மரவள்ளி எனும் கிழங்கு தரும் செடி எனும் தகவல் எமக்குத் தெரியும். ஏழிலைக் கிழங்கு, மரச்சீனிக் கிழங்கு, குச்சிக்கிழங்கு எனும் பெயரில் பஞ்சகாலத்தில் கேரள, தென் தமிழ்நாட்டு மக்களுக்கு அந்தக் கிழங்கு பசியாற்றி இருக்கிறது. பல நாட்கள், சிறு பிராயத்தில் நானும் அந்தக் கிழங்கை கண்டம் வெட்டி, உப்புப் போட்டு அவித்து, தண்ணீரை வடித்துப் பசியாற்றியவன். ஆனால் அந்தக் கிழங்கில் எட்டு வகைகள் இருக்கின்றன எனக் குறிப்பிடுகிறார் நூலாசிரியர். ‘ஆன மறவன், கரியல பொரியன், சுந்தரி வெள்ள, கோயிலு வெள்ள, கையால சாடி, கறுத்த கலியன், நூறு முட்டன், அடுக்கு முட்டன்’ என்பன அவை. ஈண்டு நான் குறிக்க விரும்புவது, தென் அமெரிக்காவில் இருந்து 19-ஆம் நூற்றாண்டில் கேரள மண்னுக்கு வந்தபோது, இந்தக் கிழங்கு இத்தனை பெயர்களோடு வரவில்லை என்பது.

இருப்பத்தேழு நட்சத்திரங்களுக்கும் தொடர்பு படுத்தப்பட்டுள்ள தாவரங்களின் பட்டியல் மற்றுமோர் சுவாரசியம். தமிழகக் கோயில்களின் தலவிருட்சங்களாக சிவன் கோயிலில் 74, திருமாயில் கோயிலில் 18, இரண்டுக்கும் பொதுவாக 12, வில்வமரம் 48 கோயில்களிலும், வன்னி 26 கோயில்களிலும், கொன்றை 22 கோயில்களிலும், புன்னை 18 கோயில்களிலும், பலா 17 கோயில்களிலும், மா 12 கோயில்களிலும், பனை 9 கோயில்களிலும் பேணி வளர்க்கப்பெற்றன எனும் தகவல் எனக்கு மற்றுமோர் வியப்பு. இறை நம்பிக்கை இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். ஆனால் நம்முன் வாழும் தாவரங்களை நம்ப வேண்டும் அல்லவா?

தாவரங்கள் அன்றியும் பல சுவையான தகவல்கள் சிவகோத்யாசார்யா எழுதிய ‘வட்டாரா தனே’ எனும் கன்னட நூலில், கி.பி 920-இல், இட்லி என்ற தமிழனின் தற்கால தலையாய உணவு பற்றிய குறிப்பு இருப்பதாகக் கூறுகிறார். மாவைப் புளிக்க வைத்து வேக வைக்கும் உணவு இந்தோனேசியாவில் ‘கெட்லி’ என்று அழைக்கப்பட்டதாகவும் அது மருவி ‘இட்லி’ ஆயிற்று என்றும் இராசேந்திர சோழன் காலத்துக்குப் பின்பு இந்தோனேசிய அரசர்கள் இந்தியாவுக்குப் பெண் எடுக்க வந்தபோது, அவர்களுடன் வந்த சமையற்காரர்கள் ‘கெட்லி’யை அறிமுகம் செய்திருக்கலாம் என்கிறார்.

தாவரங்கள் தொடர்பான பல உவமைகள் பண்டைய இலக்கியங்களில் கையாளப் பட்டிருப்பதை எடுத்தாள்கிறார் நூலாசிரியர். மாதிரிக்குச் சில:

நண்டின் கண்ணுக்கு நொச்சி அரும்பு
மயில் குடுமிக்கு வாகைப்பூ
பல்லி முட்டைக்கு புன்னை அரும்பு
அணில் பல்லுக்கு முள்ளி மலர்
கிளியின் மூக்குக்கு அவரைப் பூ
பன்றிப் பல்லுக்கு அகத்திப் பூ
மயிலின் காலடிக்கு நொச்சி இலை
வெள்ளெலியின் கண்களுக்கு குன்றி மணி

நான் எதைச் சொல்ல, எதை விடுக்க?

தாவரங்களுக்கு இலக்கியங்கள் அடையாளம் சொல்லும் விதம் அருமையாக அமைகின்றது.

‘கருங்கோட்டுப் புன்னை’,
‘கருங்கால் வேங்கை’,
‘சிறியிலைச் சந்தின’,
‘மயிலடி இலைய மாக்குரல் நொச்சி’,
‘அகல் இலைக் காந்தள்’,
‘முள்ளிலைத் தாழை’,
‘நெட்டிலை இருப்பை’,
‘மயிர்க்கால் உழுந்தின் அகல் இலை’

என மாதிரிக்குச் சில எடுத்தாண்டேன்.

மற்றும் தாவரங்களின் பண்புகளை விளக்கும் ஏராளமான சங்கப்பாடல் வரி மேற்கோள்கள்.

‘ஆடுநனி மறந்த கோடுயர் அடுப்பின்
ஆம்பி பூப்ப’

எனும் புறநானூற்று 164-ஆவது பாடல் மேற்கோள் காளான் பற்றிய தகவல் தருகிறது.

‘ஊருண் கேணிப் பகட்டிலைப் பாசி’ எனும் புறநானூற்று 392-ஆவது பாடல் நீர்ப்பாசிகள் பற்றிய தகவல் தருகிறது.

முக்கியமாக நாம் அறிந்து கொள்ள வேண்டிய செய்தி ஒன்றுண்டு. ‘தற்போதுள்ள விவரங்களின்படி தமிழகத்தில் ஏறத்தாழ 4850 தாவரச் சிற்றினங்கள் இயல் தாவரங்களாகவும், ஏறத்தாழ 1150 தாவரச் சிற்றினங்கள் அயல் மற்றும் அயலியல் தாவரங்களாகவும் அறியப்பட்டுள்ளன’ என்பது.

சில அற்புதமான புகைப்படங்களும் இந்த நூலில் தரப்பட்டுள்ளன. சோழர்களின் சின்னமான ‘ஆர்’ எனப்படும் ‘ஆத்தி’ மரம் நான் குடியிருக்கும் பகுதியில் எட்டுப்பத்து நிற்கின்றன என்பதை அந்தத் தாவரத்தின் இலை, பூ, காய் பார்த்துத் தெரிந்து கொண்டபோது எனக்கு ஏற்பட்ட பரவசத்தை எப்படி உணர்த்துவது?

தமிழ் கற்கும் மாணவர்கள், தமிழாசிரியர்கள், பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், தீவிர வாசகர்கள், படைப்பிலக்கியாவதிகள் அனைவருக்கும் இந்த நூலை வலுவாகப் பரிந்துரைக்கிறேன்.

http://solvanam.com/?p=9583

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in "பனுவல் போற்றுதும்", அனைத்தும், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to தமிழரும், தாவரமும்

  1. கோவிந்தராஜ் சொல்கிறார்:

    அருமை சார் !!
    இந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என்ற ஆவல் தோன்றுகிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s