“தீதும் நன்றும்” (16) எங்கோ?

“தீதும் நன்றும்” (16) எங்கோ?

மராத்திய மாநிலத்தில், மும்பையில் இருந்து தேசத்தை நேர் வகிடெடுத்து கிழக்கே நாக்பூர் போகும் பாதைக்கும், செங்குத்தாகக் கீழே இறங்கும் சென்னைப் பாதைக்கும் இடைப்பட்ட பிரதேசங்களில் அலுவல் பயணம் என்பது சிரமங்கள் நிறைந்தது. என்றாலும், அந்த மாவட்டங்களில் கூட்டுறவு நூற்பாலைகளும் பிறவும் இருந்தன. சுமார் 20 ஆண்டுகள் முன்பு, மும்பையில் எமது மைய அலுவலகத்தில் பணி யாற்றிக்கொண்டு இருந்தேன். தனியார் நிறுவன நூற்பாலை இயந்திரங்களும் உதிரிச் சாமான்களும் விற்கும் பிரதிநிதி. ஞாயிறு இரவுகளில் புறப்படுவேன். துணிமணிகள்கொண்ட தோள் பை, விற்பனை செய்யும் பொருட்களின் தகவல் பட்டியல்கள், விலைப் பட்டியல்கள் அடங்கிய கைப்பெட்டியுமாகப் புறப்பட்டால், மறு ஞாயிறு காலை வீடு வந்து சேர்வேன். முழுதாக ஒரு வார அலைச்சல். கோலாப்பூர், சோலாப்பூர், நாக்பூர், அக்கோலா போன்ற ஊர்கள் எனில், விடுதியன்றில் முறி எடுத்துத் தங்கி, சுற்று வட்டாரங்களில் அலையலாம். வேறு பல பகுதிகளில் நாளரு ஊர்-பத்னேரா, அமராவதி, யவத்மால், பாண்டர் கௌடா, பர்பணி, நான்தேட் என. ஆறு நாட்களுக்கும் ஆறு விடுதிகள், 18 உணவுச் சாலைகள், இடம் பெயர்தலுக்கு பஸ், ரயில், லாரி.

வழித்தடங்களில் ஆரஞ்சுக் குவியல்கள், வெங்காயக் குன்றுகள், சோளம், கம்பு, கேழ்வரகு, மக்காச் சோளம், பஞ்சு, நிலக்கடலை, சூரியகாந்தி என விளையும் வயல்கள். நெல், வாழை, தென்னை எனக் காண்பது அரிதாக இருக்கும்.

சிலசமயம் ஓர் இடத்தில் இருந்து பின்மாலையில் இடம் பெயர்ந்து அடுத்த ஊரில் தங்குவேன். அல்லது அதிகாலையில்இடம் விட்டுப் பயணமாகி, விடுதி பிடித்து, பையைப் போட்டுவிட்டு நூற்பாலைகள் போவேன். அன்றேல், காலையில் புறப்பட்டு, மில் வாசலில் இறங்கி, வேலை முடித்து, அடுத்த மில்லுக்குப் பயணமாகி, இரவில் கூடு அடைவதும் உண்டு. எனக்கு எப்போதும் பயணங்கள் சுதந்திரமாக அமையும்.

பத்னேராவில் இறங்கி, அமராவதியில் தங்கி, மறுநாள் காலை குளித்துத் தயாராகி, யவத்மால் போய்ச் சேர்ந்தேன். அது ஒரு மாவட்டத் தலைநகர். அங்குள்ள கூட்டுறவு நூற்பாலையைப் பார்த்துவிட்டு, பிற்பகல். அதில்லாபாத் போகும் உத்தேசம் எனக்கு. அன்றைய மத்தியப் பிரதேச-மராத்திய எல்லையில் அமைந்த ஆந்திரப்பிரதேச ஊர் அது. நக்சல்பாரிகள் தழைத்து வளர்ந்த காட்டுப்பாங்கான நிலப்பகுதி. பொதுவாகப் பலரும் பயணம் போக அஞ்சும் இடம். இரவில் மக்கள் நடமாட்டம் இருப்பதில்லை. அங்கிருந்து சில ஊர்களுக்குக் கடைசி பஸ் முன் மாலை நான்கு மணிக்கே முடிந்துபோகும். பிறகென்ன, லாரிகள் கிடைக்கும் எப்போதும்.

பயணங்களில் எனக்குப் பாம்பு, பேய், கள்ளன், எனப் பயம் கிடையாது. பாம்புக்கு மனிதன் உணவு அல்ல. பேய் எனிலோ, வெளியூரில் அஞ்சுவது அநாவசியம். கள்ளனிடம் கொடுக்க என்னிடம் கைக்கடிகாரம் மட்டுமே உண்டு. எந்தக் கொடிய கள்ளன் ஆனாலும், ஊர் போய்ச் சேரப் பணம் தராமலா போய்விடுவான்?.

யவத்மால் போய் இறங்கி, வாசலில் பையை வைத்துவிட்டு, கைப்பெட்டியுடன் மில்லுக்குள் போனேன். ஒவ்வொரு விற்பனைப் பிரநிதிக்கும் என்.டி.சி. மில், கோ-ஆபரேட்டிவ் மில், தனியார் மில்களில் சாமி எது, பூசாரி யார்என்பது தெரியும். சில ஆலைகளில் விசிட்டிங் கார்டு கொடுத்தால், இரண்டு மணி நேரம் காக்கவைப்பார்கள். காத்திருக்கும் நேரம் எனக்கு வாசிப்பு நேரம். தூர தேசங்களில்அமைந்த ஆலைகளில் அதிகாரிகளின் தங்குமிடங்கள் ஆலைச் சுற்றுச் சுவருக்கு உள்ளேயே இருக்கும். ஒரு வகையில் அது ஓர் இற்செறிப்பு, வீட்டுக் காவல். ஆலை மேலாளர், ஸ்பின்னிங் மாஸ்டர் எப்போது வீட்டில் இருப்பார்கள், எப்போது ஆலையினுள் இருப்பார்கள் என்பதும் தெரியாது.

காலை எட்டரை மணிக்கே மில்லினுள் போய்விட்டேன். மேலாளர் அலுவலகத்தில் இல்லை, ஆலைக்குள் இருந்தார். ஒன்பது மணிக்கு அறைக்கு வந்தார்.30ஆண்டு களுக்கும் மேலாகப் பஞ்சும் நூலுமாக அடிபட்டுத் தொய்ந்த தென்னிந்திய முகம்.

”தம்பி தமிழா?”

”ஆமா சார், நாகர்கோவில் பக்கம்.”

”சரி, வாங்க போவோம்.”

நான் பெட்டியைத் தூக்கிக்கொண்டு பின்னால் நடந்தேன். நடக்கும்போதே பேசிக்கொண்டு போனேன், காரியத்தில் கண்ணாக.

”தெரியும், நான் மடத்துக்குளத்திலே ஒரு மில்லில இருந்தேன் கடைசியா. உங்க கோயம்புத்தூர் பிராஞ்சில வாங்கிருக்கேன்.”

”இந்த ஊருக்கு எப்படி சார்?”

”ரிட்டயர்டு ஆயாச்சு! என்னத்துக்குச் சும்மா இருக் கணும்? இங்க ரெண்டு வருஷ கான்ட்ராக்ட்டு. ரெண்டு பொம்பளப் பிள்ளையோ! ஒருத்தி ஆமதாபாத்துல இருக்கா. இளையவ கான்பூர்ல!”

மில் குவாட்டர்ஸ் ஆனாலும், வீட்டு வாசல் முற்றம் தெளித்து கோலம் கிடந்தது. முற்றத்தின் இரு பங்குகளிலும் மரஞ்செடி கொடிகள் கிடந்தன. மஞ்சள் நிற கேந்திப் பூ, ஒரு துளசி, மாமரம் பூத்திருந்தது. கொய்யாவில் கரும்பிஞ்சுகள் கிடந்தன.

வாசலில் அவர் மனைவி எதிர்பார்த்து நின்றிருந்தார். முகம் மலர்ந்து சிரித்தார். மஞ்சள் பூசிக் குளித்து பெரிய குங்குமப் பொட்டு வைத்து, மிச்சம் இருந்த நரைத்த தலைக் கேசத்தைக் குறுங்கொண்டை போட்டிருந்தார்.

”இதாரு, புது விருந்தாளி?”

”ஒனக்க ஊராலிதான்!”

”நாரோயிலா?”

”ஆமா, நீங்கம்மா?”

”எனக்குப் பறக்கை.”

”கோயிலுக்குக் கிட்டயா?”

”இல்ல நெடுந்தெரு. அடு ஆச்சு ஒருவாடு நாளூ, ஊருப் பக்கம் போயி.”

வீட்டினுள் போய் உட்கார்ந்ததும், சூடாக பாம்பே ரவை உப்புமாவும் தொட்டுக்கொள்ள சீனியும் இரண்டு தட்டுக்களில் வந்தன. நான் காலையில் பஸ் விட்டு இறங்கியதும் இரண்டு உசல்-பாவ் தின்று, சாய் குடித்திருந்தேன்.

”அதுனால என்னா? சும்மாத் தின்னு. கல்லைத் தின்னாலும் செமிக்கப்பட்ட பிராயம் தாலா!”

என்னைப் பேசிக்கொண்டு இருக்கப் பணித்துவிட்டு, அவர் மில்லுக்குள் போய்விட்டார். மில்லுக்குள் மொத் தம் மூன்று வீடுகள் இருந்தன. ஸ்பின்னிங் மாஸ்டர், உள்ளூர்வாசி. அவர் அங்கு தங்காமல் தினமும் வீட்டுக் குப் போய்விடுவார். எலெக்ட்ரிக்கல் இன்ஜீனியர், இளைஞர். திருமணம் ஆகாதவர், தன் தாயுடன் தங்கி இருந்தார், மூன்றாவது வீட்டில். அந்தக் தாய்க்கு மராத்தி தவிர, வேறு தெரியாது. பெரும்பாலும் இருவரும் சந்தித்துக்கொண்டால், சைகைதான். மேலாளர் மனைவி சொல்லிக்கொண்டே போனார்.

”வேத்துத் தமிழ்ச் சத்தம் கேட்டு ஆறு மாசம் ஆகுப்பா!”

”பின்னே, நேரம் எப்பிடிம்மா போகு?”

”சோறு பொங்குகது ஒண்ணுதான் சோலி. வேற வேலைகளுக்கு மில்லுப் பொம்பளையோ வருவா. ரெண்டு மூணு அணிப்பிள்ளை வரும். காக்கா உண்டும். மில்லு காம்பவுண்டுக்கு உள்ள ரெண்டு நாயி கெடக்கு. பொறவென்ன?”

”மக்கமாரு வர மாட்டாளா?”

”எப்பமாம் நாங்க போனா உண்டும். போன் பேசலாம்னா, மில்லு போனு எப்பம் பாத்தாலும் அவுட் ஆஃப் ஆர்டர். நாம லெட்டர் போட்டாலும் பதிலு எழுத அவுகளுக்கு நேரம் கிடையாது.”

எனக்குத் தெரியும். அந்தப் பக்கம் தேங்காய் எனில் குடுக்கை போலிருக்கும் கொப்பரைத் தேங்காய். முருங் கைக்காய், வாழைக்காய் காணக் கிடைக்காது. மனிதர் இயக்கும் தொலைபேசி நிலையம். டிரங்க்கால் புக் செய் தால், ஆறு மணி நேரம் ஆகும்.

”தேங்கா அரைக்காத கறிதானாம்மா தெனமும்?”

”நமக்கானா கீரையும் கீரைத்தண்டும் போட்டு ஒரு புளிக்கறி வெச்சுத் தின்னாக்கொள்ளாம்னு இருக்கு. என்ன செய்யச் சொல்லுகே?”

”எதாம் படிக்கலாம்லா?”

”என்னத்தைப் படிக்க? தமிழ் பேப்பர் வராது. விகடன், குமுதம் வேண்டணும்னா நாக்பூரு போணும்.”

”ஏதுக்கும்மா இப்படிக்கிடந்து கஷ்டப்படணும்? பிள்ளைகளோடு போலாம்லா?”

”ஆங்… நல்ல சீரு! கொண்டான் கொடுத்தான் வீட்ல போயி எப்படி இருக்கது? கூத்தாட்டு‑ல்லா இருக்கும்? செங்கோட்டையிலே கடல் மாரி அவுருக்கே குடும்பத்து வீடு கெடக்கும். குருணைக் கஞ்சின்னாலும் வெச்சுக் குடிச்சுக்கிட்டுக் கெடக்கலாம். பாவி மட்டச் சொன்னாக் கேக்கணுமில்லா?”

பேசிக்கொண்டு இருக்கும்போதே, கண்கள் கரகரவெனச் சுரந்து சொட்டின. மூக்கைச் சிந்தி முந்தானையில் துடைத்துக்கொண்டார். ஆள் பேரற்ற அத்துவானக் கொடுங்காடு. தீராத் தனிமை, மீளாத் துயரம். எனக்குப் பாவமாக இருந்தது. நூற்பாலையின் இரைச்சல் ஒன்றே பேச்சுச் சத்தம்.

”சாயங்காலம் ஆனா, கோயிலுக்கு எங்கயாம்போயிட்டு வரலாம் இல்லையா?”

”போலாம். மில்லு ஜீப்பு இருக்கு. ஆனா, அவுரு வர மாட்டாரு. நான் ஒத்தயிலே, பாஷை தெரியாத ஊரிலே எங்கேன்னு போக?”

அந்த நாட்களில் தொலைக்காட்சி பரவலாகவில்லை. செல்போன் அறிமுகமாகி இருக்கவில்லை. வானொலியில் நாக்பூர் கேட்கும். அதில் இந்தியும் மராத்தியும். நூற்பாலையில் இருந்து நகரம் நான்கு கி.மீ. தூரத்தில் இருந்தது. உள்ளே போய், ஒரு கல்கியைக் கொண்டுவந்து போட்டாள்.

”இன்னா பாத்தியா! மூணு மாசம் முந்தி வாங்குனது. எட்டு மட்டம் படிச்சாச்சு. உங்கிட்ட எதாம் புஸ்தகம் இருக்கா?”

எனக்குப் பயணங்களில் வாராந்தரிகள் சுமக்கும் பழக்கம் கிடையாது என்றாலும், பெட்டியில் எப்போதும் ஏதாவது ஒரு புத்தகம் மறக்காமல் வைத்திருப்பேன். அப்போது என் வசம் சா.கந்தசாமியின் நாவல், ‘அவன் ஆனது’ இருந்தது. எனக்குப் பிடித்த நாவல். இரண்டாவது முறையாக வாசித்துக்கொண்டு இருந்தேன். நானுமே ஆண்டுக்கு ஒருமுறை விடு முறையில் ஊருக்குப் போனால்தான் புத்தகங்கள் வாங்குவது.

”இதைப் படிங்கம்மா. அடுத்த முறை வரும்போது வாங்கிக்கிடுகென்”

மேலாளர் ஒன்றரை மணிக்கு மதிய உணவுக்கு வந்தார். தலைமுடி எங்கும் பஞ்சுத் துகள்கள்.

மதியத்துக்கு வெந்தயக் கீரையும் சிறுபயிற்றம் பருப்பும் போட்டு கூட்டு, ரசம், மோர், சட்னி. சாப்பிட்டுவிட்டுப் புறப்பட்டேன். நிற்க அதற்கு மேல் எனக்கும் நேரம் இல்லை. அம்மாவுக்கு மற்றும் ஒருநாள் நான் இருந்து விட்டுப் போனால் நல்லது எனத் தோன்றி இருக்க வேண்டும். கண்கள் சிவந்து கலக்கமுற்றன.

”மூணு மாசம் சென்னு வாறம்மா” என்று சொல்லிக் கிளம்பினேன்.

சொன்னபடி போகவும் செய்தேன். எனது பையில் துணிமணிகள் தவிர்த்து, இரண்டு தேங்காய், நேந்திரங்காய் சிப்ஸ், சில புத்தகங்கள் என எடை ஏறி இருந்தன.

வாயில் காவலர் தலைவனிடம், ”குமாரசாமி சார் வீட்டுக்குப் போறேன்” என்றேன்.

”ஓ! அத்தா ஹை குட்டே? குஸர் சாலா னா! வீஸ் திவஸ் ஜாலா.”

குமாரசாமி எனும் நாமம் தாங்கிய நூற்பாலை மேலாளர் இறந்து 20 நாட்கள் ஆகி இருந்தன.

அம்மா, நாஞ்சில் நாட்டில் மதுசூதனப் பெருமாள் கோயில்கொண்ட, சுசீந்திரம் தாணுமாலய சாமி வாழும் ஊரை அடுத்த, பறக்கை நெடுந்தெருவுக்குப் போயிருக்க மார்க்கமில்லை. அகமதாபாத்துக்கோ, கான்பூருக்கோ போய் பெண் மக்களோடு சேர்ந்திருக்கலாம் என்றாலும், செங்கோட்டையில் கடல் போல் வீடு எனும் சொற்றொ டர் என்னிடம் மிச்சம் இருந்தது. அந்தப் பக்கம் போகும் போது கடைத் தெருக்களில், பேருந்து நிலையத்தில் எனது கண்கள் முட்டாள்தனமாகத் தேடிச் சலிக்கும். பின்பு செங்கோட்டையில் இருந்த தேசியப் பஞ்சாலைக் கழகத்தின் நூற்பாலையும், திறமையான, நேர்மையான நிர்வாகம் காரணமாகப் பூட்டிப் போயிற்று. ஒருவேளை இப்போது பெயர் ஞாபகம் இல்லாத அந்த அம்மா இறந் தும் போயிருக்கலாம்.

நாலடியாரின் ஈற்றடிகள் இரண்டு நினைவுக்கு வருகின்றன. ‘நிலமிசைத் துஞ்சினார் என்றெடுத்துத் தூற்றப் பட்டாரல்லால் எஞ்சினார் இவ்வுலகத்து இல்!’

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to “தீதும் நன்றும்” (16) எங்கோ?

  1. Naga Rajan சொல்கிறார்:

    இதயம் உருகும் உணர்வு…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s