“தீதும் நன்றும்” (22) பெண்களின் சுகாதாரவசதி

“தீதும் நன்றும் (22) பெண்களின் சுகாதாரவசதி

கீழ்த்தட்டுப் பெண்களின் பெரும்பாடுகள் பற்றி இரண்டு குறிப்பிடத்தகுந்த நாவல்கள் தமிழில் உண்டு. ஒன்று கவிஞரும் ஓவியருமான யூமா வாசுகியின் ‘ரத்த உறவு’. மற் றொன்று கண்மணி குணசேகரனின் ‘அஞ்சலை’. தி.ஜானகிராமனின்’அம்மா வந்தாள்’ தொடங்கி மேலும் பல தமிழ் நாவல்கள், பெண்களின் பல்வேறுபிரச் னைகளை நுணுக்கமாகப் பேசியுள்ளன. சிறுகதைகளில் அம்பையும் கவிதைகளில் மாலதி மைத்ரியும் குறிப்பிடத் தகுந்தவர்கள்.

பெண்களின் வாழ்முறையில் கண்ணுக்குத் தெரியாமல் பல மாறுதல்கள் வந்த வண்ணம் உள்ளன. இன்று பணி முடிந்து இரவு 10 மணிக்குத் தனித்து பெண்கள் வீடு திரும்புவது இயல்பான காட்சி. 30 ஆண்டுகளுக்கு முன்பு பெரும்பான்மைப் பெண்கள் உள்ளூர்ப் பள்ளி வரைக்கும்தான் கற்றனர். இன்று அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் சரி பாதி பெண்கள்.

ஆனால், பொது இடங்களில் பெண்களுக்கான வசதிகள் என்று பார்த்தால், மூன்றாவது உலக நாடுகளில் நாம் மூன்றாவது இடத்தில்தான் இன்னமும் இருக்கிறோம். காரணம், ஆண் மனோபாவம் இன்னும் தாராளமானதாக மாறிவிடவில்லை.

மாநகர் ரயில் நிலையங்களில் வந்து இறங்கும் அரசியல் தலைவர்களை வரவேற்க வரும் கட்சிப் பிரமுகர்களிடம் இருந்து, ரயிலேறப் போகும் குடும்பத் தலைவன் தனது மனைவியையும் பெண் மக்களையும் பாதுகாத்து நிறுத்திக்கொள்ள வேண்டியதிருக்கிறது, இன்னும். கட்சி எது என்பது இங்கு முக்கியம் இல்லை.

சில நாட்கள் முன்பு, இரவு 10 மணிக்குப் பேருந்தில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தேன். சில இருக்கைகளில் உதிரியாகச் சில பெண்கள். எனக்கு முந்திய இருக்கை ஒன்றில் பணி முடிந்து திரும் பும் சிறு வயதுப் பெண் ஒருத்தி. சிக்னலில் பேருந்து நின்றது. எங்கள் இடது பக்கம் அதிகக் குதிரை சக்திகொண்ட நவீன இரு சக்கர வாகனங்கள் மூன்றோ நான்கோ வந்து நின்றன. எல்லோரும் சம வயது வாலிபர்கள். பார்ட்டி முடிந்து திரும்புபவர் போலத் தெரிந்தனர். குடித்திருக்கவும்கூடும். அது அவர்கள் பிரச்னை. ஆனால், முன்பின் தெரியாத, தனியாகப் பயணம் செய்யும் தமது வயது உள்ள ஒரு பெண்ணைப் பார்த்து ஊளை, விசில், பாட்டு, ‘போடி’ எனும் அதட்டல்கள். இவ்விதம் அவமானப்படுத்தும் மனோபாவத்தை வழங்கியது எது? நான் சற்றுத் தீவிரமாக அவர்களைப் பார்த்தேன். எனக்குக் கிடைத்த சன்மானம், ”டேய் மாமா, பொத்திக்கிட்டுப் போடா!” தாய் மாமனையும் அவ்விதமே அருள்வார்கள் போலும்!

இரு சக்கர, நாற் சக்கர வண்டியோட்டிப் போகும் பெண்களைக் கேட்டுப் பாருங்கள்… வேகம் கூட்டி, குறைத்து, ஒலிப்பான் ஒலித்து, பிரேக் போட்டு, வழி கொடுக்காமல், இடதும் வலதும் போகும் வழி மறித்து, காது கேட்கச் செல்லமாய் வசை மொழிந்து, அற்ப மொழி பேசி என நமது கலாசாரம், கண்களையும் செவிகளையும் கூசச் செய்யும்.

ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் இளைஞர்கள் தமது சக பணியாளர்களைக் குறிக்கும் சொற்கள், குள்ளி, குண்டு, ஒல்லி, கறுப்பி, பல்லி, என அவர வர் உடற்கூற்றுத் தன்மை காரணமாக இளக் காரமாகப் பலர் முன்னிலையில்… இது கேவலம் என்று ஏன் அவர்களுக்கு உறைப்பதில்லை? மாதச் சம்பளம் 2 ஆயிரம் என்றாலும் 80 ஆயிரம் ஆனாலும் மனோபாவம் மாறுவதில்லை!

மனோபாவம் என்பது கல்வி சார்ந்தோ, வருமானம் சார்ந்தோ மாறிவிடுவதில்லை. மேன் மக்கள் என்பவர் ஒரு குலத்தில், ஓர் இனத்தில், ஒரு மதத்தில் இருந்து மட்டுமே உதித்து வருபவர்களும் இல்லை.

ஒரு மாநகரில் இருந்து இன்னொரு மாநகருக்கு இரவு நேரங்களில் உல்லாச, சொகுசு, குளிர்சாதன, அதிவிரைவு, நவீனப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இரவு 8 மணிக்கு மேல் 10 மணிக்குள் கட்டணம், ரயில் கட்டணத்தைப் போல இரு மடங்கு மட்டுமே!

பேருந்துகள் அல்ல, றெக்கை இல்லாத விமானங்கள். தொட்டுக் கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம் போல பள பளப்பு, வர்ணம், வடிவம். சந்தனப் பொட்டு, குங்கும அப்பல், ஊதுபத்திக்கட்டு என இறைவனின் புதிய வடிவம் போல. புத்தம் புது இருக்கை உறைகள். இருக்கைகளில் அமரலாம், சாயலாம், கால் நீட்டிக்கொள்ளலாம், சில பேருந்துகளில் படுக்கவும் செய்யலாம், குடிக்க அரை லிட்டர் தண்ணீர் போத்தல், போர்த்திக்கொள்ள மெல்லிய சால்வை இரவல். சேனல் இசை, சர்ரவுண்ட் இசை, தொலைக்காட்சிப் பெட்டி உண்டு. திருட்டு டி.வி.டி-யில் புத்தம் புதிய திரைக் காவியம். வெளி இரைச்சல் உள்ளே கேட்காது.

எல்லாம் காற்றில் மிதக்கும் ஏர் பஸ்கள். விசைகூடிய டர்போ, ஏர் ஜெட் இன்ஜின். பிக்-அப், வேகம், பவர் ஸ்டீயரிங், தானியங்கிக் கதவுகள், இருக்கைக்கு மேல் தலைமாட்டில் விமானங்களில் இருப்பது போல் ஒளி ஒலி, குளிர்க்காற்று கூட்ட, குறைக்க ஏற்பாடுகள். சொல்லப்போனால் பணிப்பெண்களும் வால் பகுதியில் கழிப்பிடமும் மட்டும் கிடையாது. அங்குதான் பிரச்னையே!

இரவு 8 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டு, இரவு 9 மணிக்குப் பேருந்தில் அமர்ந்தால், மறுநாள் காலை 7 மணிக்கு இறங்கி, 8 மணிக்குத் தங்குமிடம் சேரும் வரை 12 மணி நேரம் சிறுநீர் கழிக்கப் பெண்களுக்கு வசதி கிடையாது.

ஆண்கள் அனைவரும், சாயா பருக வண்டி நிற்கும் இடங்களில் எந்த நாணமும் இன்றி ஒதுங்கி ஒன்றுக்குப் போய்விடலாம். சில நிறுத்தங்களில் கட்டணக் கழிப்பிடம் என ஒன்று இருக்கும். அங்கு பன்றிகளே ஆனாலும் மூக்கைப் பொத்திக்கொண்டே போக இயலும். பல நிறுத்தங்களில் அதுவும் இருக்காது. வயதான நோய்ப்பட்ட பெண்களே ஆனாலும் அடக்கிக்கொண்டு உட்கார வேண்டும். பல பெண்கள் பயண நாட்களில் மத்தியானத்துக்குப் பிறகு தண்ணீர் குடிப்பதில்லை என்பதை நீங்கள் அறிவீர்களா?

பெரும்பாலான பள்ளிகளிலும் இதுவே நிலைமை. காலை 7 1/2 மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பும் சிறுமியர், மாலை 4 1/2 மணிக்கு வீட்டுக்கு வந்ததும் அவசர அவசர மாக கழிவறைக்கு ஓடுவார்கள். மருத்துவர்கள் கூறுவது 31/2 மணிக்கு ஒரு முறை 350 மி.லி. சிறுநீர் பிரிவது நல்லது என. இயற்கைக்கு மாறாகச் செயல்பட சிறுநீரகத்தை, சிறுநீர்ப் பையை, மூத்திரக் குழாயைத் தூண்டும் சூழலுக்கு நாம் சிறு பருவத்திலிருந்தே பெண்களைத் தள்ளுகிறோம். பலருக்கு சிறுநீர்ப் பையில் கற்கள் ஏற்பட இதுவே காரணம்.தப்பித்தவறி பொதுக்கழிப்பிடங்களுக்குப் போக நேரிட்டால், மூத்திரக்குழாய் நோய்கள் உறுதி.

சின்னக் கடைகளில் – ஃபேன்சி ஸ்டோர்ஸ், மெடிக்கல் ஷாப், பாத்திரக் கடை, ஜவுளிக் கடை என வேலை பார்க்கும் இடங்களில் பெண்களுக்கு பாத்ரூம் வசதி கிடையாது. பல அரசு நூலகங்களில், பாட சாலைகளில் வசதி இல்லை. ஆனால், வேலையில் பெண்கள் நிறைய உண்டு.

வெளியே தேவலோகம் போன்று முகப்புத் தோற்றம் கொண்ட உணவு விடுதிகளில் பாத்ரூம் எங்கே எனக் கேளுங்கள். இல்லை என்பார்கள் அல்லது உணவுச் சாலையின் கோடியைச் சுட்டிக் காட்டுவார்கள். உண்ணும் இடம், விளம்பும் பொருட்கள் இருக்கும் இடம், சமையல்கூடம், விறகு, தேங்காய், காய்கறிக் குப்பை, பாத்திர பண்டங்கள், எச்சில் பாத்திரங்கள் கிடக்கும் இடம் தாண்டி, வழுக்கிவிடாமல், புடவை சேற்றில் படாமல் நடந்து, பாத்ரூம் என்று சொல்லப்படுகிற இடத்தை அடைந்தால், குடல் பட்டினியில் கிடந்தாலும் குமட்டிக்கொண்டு வரும்.

கோயிலுக்குப் போய்த் திரும்பும் பெண்களுக்கும் இந்த நெருக்கடி உண்டு. தொன்மையான ஆலயங்களின் சுவரைத் தொட்டு, மட்டன் – பரோட்டா கடைகள் அனுமதிக்கப்படுமாம். ஆனால், சுகாதாரமான கழிப்பிடம் அமைந்தால், தெய்வக் குற்றம் வந்துவிடுமோ? பல அடுக்கு மாடி நவீன ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்களில் லேபர் இன்ஸ்பெக்டர்களின் நிர்ப்பந்தத்தால், கழிப்பறை என ஒன்றிருக்கும். ஆனால், அது பூட்டப்பட்டு இருக்கும். அதன் சாவி எவரிடம் என்று எவருக்கும் தெரியாது.

அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் 60-க்கும் மேற்பட்ட ஆண்டுகள் நாம் நல்லாட்சி நடத்துகிறோம். காமராசர் ஆட்சி, அண்ணா ஆட்சி என்று வித்தாரமாய் பேசும் வீரத் தலைவர்கள் தங்கள் தாய்மாரை, பெண்களை, பெண் பிள்ளைகளை, மச்சினிகளை, மருமக்களை, பேத்திகளை, சின்ன வீடுகளை, சின்னச் சின்ன வீடுகளை இந்தக் கழிப்பிடங்களில் அனுமதிப்பார்களா?

அவர்கள் தேவலோகத்துக் குடிகள். நம் பெண்கள் என்ன… பன்றியின் குருளைகளா?

விரைவுப் பேருந்துகளை இயக்குபவர்களுக்கு இதுபற்றி எந்தக் கவலையும் இல்லை. அவர்களுக்கு பணப்பெட்டி நிரம்பினால் போதும். அரசினருக்கு அதைவிட முக்கியமான பண்பாட்டுக் கவலைகள் பல உண்டு.

ஆனால், ஓட்டுநர்களும் நடத்துநர்களும் நம்மைப் போல இலவச டி.வி-க்கும் 1 ரூபாய் அரிசிக்கும் உட்கட்சி சிபாரிசு பிடிக்கும் எளிய மனிதர்கள். பெண்கள் வேண்டினால், கூட்டுக்கொள்ளை நடக்க வாய்ப்பில்லாத காட்டுப் பிரதேசங்களில் சாலையோரம் வண்டியை ஒதுக்குவார்கள். ஆண்கள் இறங்க வேண்டாம் என்று வேண்டுகோளையும் வைக்கிறார்கள் மனிதநேயத்துடன். அவர்களைக் குறை சொல்வதற்கில்லை. ஆனால், காட்டு முட்கள் கண்ணாடிச் சில்லுகள், கண்மறைவான குன்றுகளில் இரை தேடி நடக்கும் பாம்பு, தேள், பூரான், நட்டுவக்காலி அத்தகு கருணைகொண்டு இருக்கும் என எதிர்பார்க்கலாமா?

மேல் வலிக்காமல் கேட்பார்கள், ஏன் ரயிலில் போவதுதானே என. 45 நாட்களுக்குள் எந்த ரயிலில் ஐயா இடம் கிடைக்கிறது? ரயிலில் பயணச் சீட்டுகள் கிடைக்காதபோது அவசரமாகப் புறப்பட நேர்கிறபோது பேருந்துகளைத்தான் நாட வேண்டியுள்ளது யாவருக்கும்.

பேருந்துப் பயணங்களில் வாந்தியைக் கட்டுப்படுத்த மாத்திரைகள் உள்ளன. மாதவிலக்கைத் தள்ளிப் போட மாத்திரைகள் உண்டு. இனி மூத்திரத்தைக் கட்டுப்படுத்துவதற்கான மாத்திரைகள் தயாரிப்பதைப்பற்றி மருந்து கம்பெனிகள் தயைகூர்ந்து ஆய்வுகள் செய்யலாம். பேருந்துக் கட்டணத்தோடு மாத்திரைச் செலவையும் ஏற்றி, பயணங்களில் இலவசமாக விநியோகம் செய்யலாம்!

அதனாலென்ன… அரசியல் தலைவர்கள் பங்கேற்கும் விழா மேடைகளின் பின்பக்கம், குளிர்ப்பதன கழிப்பறைகள் கட்ட பொதுப்பணித் துறைகள் தமது உடல், பொருள், ஆவியை தொடர்ந்து அர்ப்பணிக்கட்டும்!

வந்தே மாதரம்!

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in “தீதும் நன்றும்” and tagged , , , , , . Bookmark the permalink.

1 Response to “தீதும் நன்றும்” (22) பெண்களின் சுகாதாரவசதி

  1. Naga Rajan சொல்கிறார்:

    மிகவும் வருந்ததக்க உண்மையான செய்தி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s