“தீதும் நன்றும்” (20) மாணவிகளுக்கு சுகாதாரம்

“தீதும் நன்றும்” (20) மாணவிகளுக்கு சுகாதாரம்

பள்ளியில் வாசித்திருந்த காலை, ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதுகளில், என்னுடன் பயின்ற பெண் பிள்ளைகள் 13 அல்லது 14 வயதில் வயதுக்கு வந்தனர். பள்ளி விடுமுறை நாட்களில் தெருக்களில் அலையும்போது வாசல் தெளித்துக்கொண்டோ, கோலம் வரைந்துகொண்டோ, ஆற்றங்கரைப் படித்துறைகளில் துவைத்துக் குளித்துக் கரையேறும் கோபிகைகள் போலவோ, இடுப்புக் குடத்துடனோ கண்டதுண்டு. வெயில் காய்ச்சி இராத அவர்களது உடலின் மினுக்கம், பழைய பள்ளித் தோழனைக் கண்ட வாசனையின் துவக்கம் மலர்ந்து பளிச்சிட்டது உண்டு.

உயர்நிலைப் பள்ளி உள்ளூரில் இருந்தால், நடந்து போய் வரும் தூரத்தில் இருந்தால், துணைக்கு வேறு பெண்களும் இருந்தால், தொடர்ந்து படிப்பார்கள் சிலர். அவர்களில் பலர், படிப்பில் தோளுக்கு இணையாக ஓடிவரும் கெட்டிக்காரிகளாக இருந்தும்கூட பள்ளி தாண்டி, கல்லூரி நுழைந்தது இல்லை. அவ்விதம் படிப்பை இடையில் முறித்துக்கொண்டு, சில ஆண்டுகள் வீட்டில் அடைந்து, சமையலும் பிற வீட்டு வேலைகளும் தேர்ந்து, திருமணமாகி, குழந்தைகள் பெற்று வளர்க்கப் போனார்கள். அவ்வாறு போனதன் காரணம் குடும்ப கௌரவமோ, சாதி மரியாதையோ, கற்பு காத்தலோ, படிக்கவைத்தால் சமமான மாப்பிள்ளை தேட வேண்டும் என்ற கவலையோ மட்டும் அல்ல என்று எனக்கு இப்போது தோன்றுகிறது.

அன்றெல்லாம் எங்கோ தொலை தூரங்களில் இருந்த சில கான்வென்ட் தவிர, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் பணமாகப் பயிராகி இருக்கவில்லை. இருந்தவை அரசினர், தனியார் அறக்கட்டளைப் பள்ளிகள். அங்கு பெண்களுக்கு மூத்திரம் போக, தோள் உயரத்துக்குக் கட்டை மண் சுவர் அல்லது ஓலை நிரைசல் மறைப்பு. ஆனால், வயதுக்கு வந்த பெண்களுக்கு அது போதவே போதாது என்ற உண்மை கோடை காலத்து உச்சி வெயில் போல இன்று தீயாய்க் கொளுத்துகிறது… அன்று பெண்கள் கல்வியைத் தொடர முடியாமல் போனது எத்தனை பெரிய தேசிய நட்டம்?

14 வயதில் பெண்கள் வயதுக்கு வருவது ஆரோக்கியமாகக் கருதப்பட்டது, கொண்டாடவும்பட்டது. இன்று பெண் பிள்ளைகள் எட்டு வயது முதலே வயதுக்கு வருகிறார்கள். காரணங்களென போஷாக்கான உணவு, தேவையற்ற அலோபதி மருந்துகள், நோய் வராமல் இருக்கவும் கொழுக்கவும் கோழிகளின் உணவில் சேர்க்கும் வேதிகைகள் என அடுக்கிக்கொண்டு போவார் மருத்துவர். இத்தனை சிறு பருவத்தில் பருவம் எய்துவது ஆரோக்கியமானதல்ல என்றும் கூறுகிறார்கள்.

ஐந்தாவது படிக்கும் மாணவி, 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய்ச் சுழற்சிக்கு ஆட்பட வேண்டியுள்ளது. இந்தத் தொடரில் ஏற்கெனவே நாம் பார்த்திருக்கிறோம்.

பெரும்பாலான பள்ளிச் சிறுமிகள், காலை ஏழரை மணிக்குப் புறப்பட்டு மாலை நான்கு மணிக்கு பள்ளி முடிந்து திரும்புகிறவர்கள், வீட்டுக்குள் நுழைந்ததும் பைக்கட்டைத் தூக்கி வீசிவிட்டுக் கழிப்பறைக்கு ஓடுகிறார்கள். மூத்திரம் போவதற்கே சுகாதாரமான சூழல் இல்லாதபோது, மாதவிடாய்ச் சுழற்சியில் இருக்கும் பெண் பிள்ளைகள் என்ன செய்வார்கள்? இன்றும் பெரும்பாலான அரசு, நகர்மன்ற, மாநகர் பள்ளிகளில், கோயில்களில் பொங்கல் வைப்பதற்கு என அடுப்புக்குழிகள் வரிசையாக அமைக்கப்பட்டு இருப்பதைப் போன்றுதான் சிறுநீர் கழிக்க ஏற்பாடு உள்ளது.

வாசற்கதவு கிடையாது, தண்ணீர்க் குழாய் கிடையாது, தண்ணீர்த் தொட்டி இருந்தால் அதனுள் தண்ணீருக்குப் பதிலாகக் கண்டான் முண்டான் சாமான்கள் கிடக்கும். பெண்களால் மரத்து மூட்டில் ஒளிந்து நின்றும் போய்விட இயலாது. உறுப்பைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மலவாசலுக்கும் சிறுநீர் வாசலுக்கும் இடைவெளி சில அங்குலங்களே! எளிதாக நோய்த் தொற்றல் ஏற்படும். சிறுநீர்க் குழாய் நோய்ப் பீடிப்பால் வாந்தி, வலி, காய்ச்சல், எரிச்சல், ரத்த நிறத்தில் விட்டுவிட்டு சிறுநீர்ப் போக்கு எனத் தாங்க இயலாத துன்பம்.

பள்ளி வளாகங்களினுள் கோயில்கள் கட்டிவைக்கத் தெரிந்த நமக்குச் சுகாதாரமான கழிப்பிடங்கள் அமைக்கத் தெரியவில்லை. கோயில் வளாகங்களில் பாத்திரக் கடை, பாசிக் கடை, பலகாரக் கடை, புரோட்டாக் கடை என அனுமதிக்கும் நமக்கு, பெண்கள் வசதி கருதி சுத்தமான கழிப்பிடங்கள் அமைக்கத் தெரியவில்லை.

தமிழ்நாட்டில் வட மாவட்டம் ஒன்றில் 3,600 பெண்கள் கற்கும்

பள்ளி ஒன்று உண்டு. ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை. ஐந்தாவது வகுப்பில் வயதுக்கு வருகிறார்கள் எனில், உத்தேசமாக இரண்டாயிரத்துக்குப் பக்கம் வயதுக்கு வந்த பெண்கள் படிப்பார்கள். 28 நாட்களில் அவர்களுக்கு மாதச் சுழற்சி எனில், மூன்று நாட்கள் உதிரப்போக்கு உண்டென்றுகொண்டால், எந்தக் குறிப்பிட்ட பள்ளி நாளிலும் எத்தனை மாணவிகள் அங்கு அந்தச் சிரமத்தில் இருப் பார்கள்? கணக்குப் போட்டுப் பார்த்துக்கொள் ளுங்கள். மாதவிடாய் நாட்கள் அவர்களுக்கு உத்தேசமாகத் தெரியுமே தவிர, படைத்தவனால் கூடத் துல்லியமாகச் சொல்ல இயலாது. என்று வரும் என்று வரும் என்ற அவர்கள் பதற்றத்தை ஆண்களால் உணரவே இயலாது. ஒரு தலித்தின் மனநிலையைத் தலித் அன்றி, பேற்று வலியைத் தாயன்றி, திருநங்கையின் மன நிலையைத் திருநங்கை அன்றி மற்று எவரால் உணர இயலும்?

சில ஆசிரியைகள் தாய் மனத்துடன், சம்பளம் வாங்கியதும் இரண்டு பாக்கெட் சானிட்டரி நாப்கின் வாங்கி வைத்துக்கொண்டு உதவுகிறார் கள். ஆனால் அரசுப் பள்ளிகளில், முனிசிபல் பள்ளிகளில், கார்ப்பரேஷன் பள்ளிகளில் வாங்கக் கிடைப்பதில்லை. பெரும்பாலான மெட்ரிக் பள்ளிகளிலும் நிலைமை அதுவேதான். இனாமாக, இரவலாக விலைக்கேகூடக் கிடைத்தாலும் மாற்றிக்கொள்வதற்கும் சுத்தம் செய்துகொள்வதற்கும் பல பள்ளிகளில் தனியான அறைகள் கிடையாது. சில ஆசிரியைகள் கூறுவது… நனைந்ததை மாற்றிப் புதியது அணியக் கழிப்பறை சென்றால், அங்கு கழிவுக் கூடைகள் கிடையாது என்றும், பிற மாணவியர் பார்க்க, இடது கையில், செத்த எலியை வாலைப் பிடித்துத் தூக்கி வருவதுபோலக் கொணர்ந்து திறந்த வெளியில் இருக்கும் குப்பைத் தொட்டியில் வெட்கிக் கூசி வீச வேண்டியதிருக்கிறது. குப்பைத் தொட்டியில் ரத்தம் ஊறிக் குவியலாகக் கிடப்பவற்றைக் களைய என்ன ஏற்பாடு உண்டு பள்ளிகளில்?

கோவையில் ஆர்ஏஏசி என்றொரு நிறுவனம், தினம் 100 சானிட்டரி நாப்கின்களை எரிக்கும் Incinerator வடிவமைத்துள்ளது. இங்குள்ள தொண்டு நிறுவனங்கள், 15 பள்ளிகளில் அவற்றை நிறுவியுள்ளன. இரண்டு ரூபாய் நாணயம் போட் டால் தானாக வந்து விழும் சானிட்டரி நாப்கின் Vending machine ஒன்றும் நிறுவியுள்ளனர். பொதுஅலுவலகங்கள், மருத்துவமனைகள், கல்லூரிகள், பள்ளிகள் அதுபற்றி யோசிக்கலாம்.

பல பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் நாட்களில் கடுமையான வயிற்றுவலி உண்டாகும். வலியில் சங்கடப்படும் சிறுமிகள் சற்று நேரம் படுத்துக்கிடக்க நமது பள்ளிகளில் ஓய்வறை கிடையாது.

உயர்நிலைப் பள்ளிகளில் பல மாணவிகள் அந்தத் தினங்களில் பள்ளி வருவதில்லை. வந்தாலும் பாதி வகுப்பில் விடுப்பு வாங்கி வீட்டுக்குப் போய்விடுகிறார்கள். சக மாணவிகள், ஆசிரியைகள், பெற்றோர் கவலைப்படுகின்றனர். நிர்வாகங்கள் கவலைப்படுகின்றனவா? சில மேல்தட்டுப் பள்ளிகளில் நிலை வேறாக இருக்கலாம். ஆனால், இந்தியாவின் பருவம் எய்திய சகல மாணவியரும் சில அடிப்படை வசதிகளுக்கு உரிமை பெற்றவர் அல்லவா?

இதை வாசிக்கின்ற லட்சக்கணக்கான ஆனந்த விகடன் வாசகரில் துணிச்சல் உடையவர், செல்வாக்கு உடையவர், சமூகக் கவலைகொண்டவர், தயவுசெய்து தங்கள் வீட்டின் அருகில் இருக்கும் பள்ளியில் நுழைந்து, அனுமதி பெற்று, பெண்கள் கழிப்பறையை எட்டிப் பாருங்கள். நான் சொல்லிவரும் அவலம் புரியும்.

எமது இலக்கியத் தோழி ஒருவருக்கு மாம்பலத்தில் வீடு. நடந்து வரும்போது, முன்னிரவில் எதிர்ப்பட்ட இரண்டு கல்லூரி மாணவியர் கேட்டனர்… ”அண்மையில் பெண்கள் கழிப்பறை எங்கு உள்ளது? நெடுந்தூரம் முழு இரவுப் பயணம், சானிட்டரி நாப்கின் மாற்றிக்கொண்டு பேருந்து ஏற வேண்டும்” எமது தோழிக்குத் தெரியும் அந்தச் சாலையில், பக்கத்துச் சாலையில், எதிர்ச் சாலையில், கால் நடக்கும் தூரத்தில் எங்கும் கழிப்பறை கிடையாது என. தனது வீட்டுக்குக் கூட்டிச் சென்று, உள்ளாடையும் நாப்கினும் மாற்றிக்கொள்ள அனுமதித்து, அவசர அவசரமாகப் பேருந்துப் பயணத்துக்கு அனுப்பிவைத்ததைச் சொன்னார்.

56 கோடிப் பெண்கள் வாழும் தேசம் இது. இதில் ஒன்பது வயதுக்குக் கீழும் 50 வயதுக்கு மேலுமுள்ள பெண்களை நீக்கிவிட்டுப் பார்த்தால், 35 கோடிப் பேர் இருக்க மாட்டார்களா? அவர்களது அடிப்படைத் தேவை குறித்த நமது அக்கறை என்ன, கவலை என்ன, திட்டம் என்ன, செயல்பாடு என்ன? என்ன, என்ன, என்ன?

கேரளத்தில், எர்ணாகுளம் ரயில் நிலையத்தில் நடைமேடையில், நான்குவசமும் மறைப்புத் தட்டி அடித்து, உள்ளே ஒரு நாற்காலி, மேலே ஒரு மின்விசிறி போட்டு, பாலூட்டும் தாய்மாருக்காக மறைவிடம் ஏற்பாடு செய்துவைத்திருக்கிறார்கள் என கோவையின் பூ.சா.கோ. கலை, அறிவியல் கல்லூரி ஆங்கிலத் துறைப் பேராசிரியை டாக்டர் ஜெயந்த பால கிருஷ்ணன் சொன்னார். இந்த அக்கறை நமது பெண்கள் படிக்கும் பள்ளி, கல்லூரி நிர்வாகிகளுக்கு ஏன் இல்லாமல் போயிற்று? கல்வி என்பது மதிப்பெண்களும் நூறு சதவிகிதம் தேர்ச்சி மட்டுமேயா?

அணுகுண்டுகள் வெடித்தோம்; ஏவுகணைகள் கண்டம் விட்டுக் கண்டம் பாயத் தயாராக உள்ளன. சந்திராயன் அனுப்பினோம். எண்ணற்ற வகைகளில் முன்னேறியுள்ளோம். மறுப்பதற்கு இல்லை; மகிழ்ச்சியாக இருக்கிறது. தேசம் செம்மாந்து நிற்கிறது. ஆனால், சரிக்குச் சமமான இந்தியப் பெண் வாரிசுகளின் சுகாதாரத் தேவை பற்றிய நமது பொறுப்பு என்ன? தண்ணீர் வசதியற்ற, துர்நாற்றம் வீசுகிற, புழுக்கள் குதிக்கிற, நோய்க் கிருமிகள் மலிந்த, அசுத்தமான பள்ளி, கல்லூரிக் கழிப்பறைகள்தாம் அவர்களின் விதியா?

நல்லாட்சி நடக்கிற, அமைதிப் பூங்காவான, செம்மொழி தழைக்கிற, தொழில்வளம் மிக்க, சூரியனின் தேர்க்கால் வழுகுகிற நீர்வளம் மிக்க, கற்றறிந்த சான்றோர் அரசாளுகிற, பல் தமிழ் ஆய்ந்த அறிஞர்கள் வாழ்கிற தமிழ்நாட்டின் நிலைமை இதுவெனில்… உத்தரப்பிரதேசம், பீகார், மத்தியப்பிரதேசம், ஜார்கண்ட், உத்ராஞ்சல், சட்டீஸ்கர் மாநிலங்களின் பெண்களுக்கான வசதி எப்படி இருக்கும்?

பெண்களின் மாதந்தோறுமான சுழற்சி தள்ளிப் போவதற்கு, முன்னால் வருவதற்கு என அரிய பல ஆய்வுகள் செய்து மாத்திரைகள் கண்டுபிடித்துள்ளன பன்னாட்டு நிறுவனங்கள். துணிகள் தயாரித்து அந்த நாட்களில் அணிந்துகொள்வது ஆரோக்கியமற்றது, வசதி குறைவானது, தூக்கிவீசுங்கள் என அடக்கமான நாப்கின்கள் தயாரித்து, அனைத்துச் சேனல்களிலும் விளம்பரங்கள் செய்து, விற்பனை பெருக்குகின்றனர். விளையாட்டுப் போட்டிகளில்கூடக் கலந்துகொள்ள ஊக்குவிக்கின்றன நுகர்பொருள் விற்பனை வணிக நிறுவனங்கள்.

ஆனால் மறைவான, தனியான, தண்ணீரும், சுகா தாரமும் உள்ள தனியறைகள் தர நாம் தயாராக இல்லை. எல்லாம் நாம் பெற்ற பிள்ளைகள்தானே என்ற உணர்வும் இல்லை. ஆனால், எத்தனை வீர வசனங்கள் நம்மிடம்! பெண் உரிமை என்றும், பெண் விடுதலை என்றும் எத்தனை சர்வதேசக் கருத்தரங்குகள்! சுகாதாரத்துக்கு என மத்திய, மாநில அமைச்சர்கள் எத்தனை! வாக்குறுதிகள் குப்பைகள் போலப் பறக்கின்றன புழுதி அடர்ந்த தெருக்களில், தேர்தல் தோறும்!

இவற்றை எல்லாம் எண்ணிக்கூடப் பார்க்க மாட்டார்களா நமது அரசியல், சமூக மேய்ப்பர்களும் மீட்பர்களும்?

‘நிலம் புகும் சொற்கள்’ எனும் கவிதைத் தொகுதியில், சக்தி ஜோதி கேட்பது என் காதுகளில் ஒலிக்கிறது.

‘மனம்
சொல்வதையெல்லாம்
கைகள் செய்யுமா என்பது தெரியவில்லை…
கைகளும் மனமும் வெவ்வேறா
என்பதையும் அறிய முடியவில்லை!’

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in “தீதும் நன்றும்” and tagged , , , , , , . Bookmark the permalink.

1 Response to “தீதும் நன்றும்” (20) மாணவிகளுக்கு சுகாதாரம்

  1. Naga Rajan சொல்கிறார்:

    தாயின் அன்போடு எழுதப்பட்ட வருந்ததக்க செய்தி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s