“தீதும் நன்றும்” (18) வெற்றிலை

“தீதும் நன்றும்” (18) வெற்றிலை

அடகு என்று சொன்னால் தமிழில் இலை என்றும், கீரை என்றும் பொருள். ‘அடகென்று சொல்லி அமுதினை இட்டாள் கடகம் செறிந்த கையாள்’ என்று பாரி மகளிர் சமைத்தளித்த கீரையை அமுது எனப் புகழ்ந்தாள் ஒளவை. அசோகவனத்தில் சிறை இருந்த சீதை, ராமனின் தவிப்பை எண்ணி வருந்தும்போது, ‘அருந்தும் மெல் அடகு இனி யார் இட அருந்தும்’ என்று ஏக்கப் பெருமூச்சுவிடுகிறார்.

அடை எனும் சொல்லுக்குத் தமிழில் இலை என்று பொருள். வெற்றிலை என்பது சிறப்புப் பொருள். ஆகவே, தாம்பூலப் பையை அடைப்பம் என்றும், அடைப்பை என்றும் சொன்னார்கள். குறுநில மன்னர்களுக்கு வெற்றிலைப் பை எடுத்து ஊழியம் செய்பவர்களை அடைப்பைக்காரன் என்றார்கள். கவிச் சக்ரவர்த்தி கம்பனுக்கு சோழ மன்னன் அடைப்பம் தாங்கினான் என்ற கதை ஒன்று உண்டு. கிருஷ்ண தேவராயரின் வளர்ப்பு மகன் போலிருந்த, பின்னர் மதுரையை ஆண்ட விஸ்வநாதனை ‘அடைப்பம் தாங்கி’ என்று இழிவு செய்ததாக வரலாறு பேசுகிறது. வெற்றிலையில் சுண்ணாம்பு தடவி, பாக்குச் சேர்த்து மெல்லுவதைத் தாம்பூலம் தரித்தல் என்றும் ‘தாம்பூலத் தாரணம்’ என்றும் சொன்னார்கள். தம்பலம் என்றாலும் தாம்பூலம்தான். தம்பலம் தின்னுதல், தம்பலம் போடுதல், தம்பலச் சடங்கு, தாம்பூல சரவணம் என்றும் தமிழில் சொற்றொடர்கள் உண்டு. திருமணம், நிச்சயத் தாம்பூலம், பெயரணிதல், காதுகுத்து எனும் சகல சடங்குகளிலும் வெற்றிலைப் பாக்கு முக்கிய இடம்பெற்றது. நிச்சயத் தாம்பூலம் என்பதே தாம்பூலத் தட்டு மாற்றித் திருமணத்தை உறுதி செய்துகொள்வதுதான்.

முன்பு எல்லா வீடுகளிலும் வெற்றிலைச் செல்லம், வெற்றிலைத் தாம்பாளம், பாக்குவெட்டி, சுண்ணாம்புக் கறண்டவம் எனும் உபகரணங்கள் இருந்தன. மிகுந்த வேலைப்பாடுகள்கொண்ட பித்தளைப் பாக்குவெட்டிகள், வெற்றிலைச் செல்லங்கள் இன்று அருங்காட்சியகங்களில் உள்ளன. விசேஷ வீடுகளுக்குச் சென்று விடை பெறும்போது, மூன்று வெற்றிலைகளின் நடுவே பாக்கு வைத்து மடக்கி, தாம்பாளத்தில் வைத்து நீட்டுவார்கள்; நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பெண் பிள்ளைகள் பருவம் வந்த அன்று, தலைக்குத் தண்ணீர்விட்ட பிறகு, வந்தவர்க்கு எல்லாம் அகன்ற வெற்றிலையில் ஒரு கரண்டி சீனியும் இரண்டு பழங்களும் வைத்துக் கொடுத்தனர். மை போட்டுப் பார்ப்பதும் வெற்றிலையில்தான்; மருந்துச் சூரணத்தைத் தேனில் குழைப்பதும் வெற்றிலையில்தான்; சூடம் கொளுத் துவதும் வெற்றிலையில்தான். வெற்றிலை போடுபவர்கள் அடிக்கடி எழுந்து போய் உமிழ வேண்டியது வரும். எனவே, பக்கத்திலேயே பொன் போல் துலங்கும் பித்தளைக் கோளாம்பி ஒன்று வைத்திருந்தனர். எம்.எஸ்ஸி., தேர்வு எழுதி முடித்த பின்பு, வைவா தேர்வுக்கு அமர்ந்திருக்கையில், கணிதப் பேராசிரியர் ஒருவர் என்னிடம் கேட்டார், பேராபோலா கட்டமைப்புக்கு எடுத்துக்காட்டு சொல்லும்படி! நான் தெரியாமல் விழித்தபோது அவரே சொன்னார், ‘வெற்றிலைக் கோளாம்பி கண்டதில்லையா?’ என்று.

பெரும்பாலும் ஆண்களும் பெண்களும் அன்று வெற்றிலை போட்டார்கள். பெண்களில் பலர் மூக்குப் பொடி போட்டனர்; பீடி புகைத்தனர்; சுருட்டும் பிடித்தனர். அது பெண் விடுதலை பேசப்படாத காலம். வெற்றிலை பாக்குப் போடுவது என்பது, சீனர்கள் தேநீர் அருந்தும் சடங்கு போன்றது. முதலில் கோறைப் பாக்கைப் பாக்குவெட்டியால் தோலுரித்து, உள் தோல் சுரண்டி, பாக்கை வெட்டி, சிறு துண்டு களாக்கி வாயில் ஒதுக்கிக்கொண்டு, நல்ல வெற்றிலை தேர்ந்து காம்பு உரித்து, தும்பு கிள்ளி, அதன் முதுகில் பதமாகச் சுண்ணாம்பு தடவி, வாயிலிட்டு மென்று, சிவந்து விட்டதா என்று நாக்கை நீட்டிப் பார்த்து, போதாவிட்டால் கடுகு போல்சுண்ணாம்பு எடுத்து வாயினுள் எறிந்து, சற்றே கண் செருகி லயித்து… மேலும் தெரிந்துகொள்ள வேண்டுமானால், கரிசல் இலக்கிய மேதை கி.ராஜநாராயணன் புத்தகங்களை வாசியுங்கள்.

வெற்றிலை பூமிக்கு வந்தது பற்றி அவரிடம் சுவாரசியமான கதை உண்டு. பண்டு பூமியில் வெற்றிலைக் கொடி இல்லாமல் இருந்ததாம். இந்திரலோகத்து அரம்பையரில் ஒருத்தி சாபம் பெற்று பூமிக்கு வந்தாளாம். அவளோ, தாம்பூல ரசிகை. பூமியில் வெற்றிலை கிடையாது என்று அவளுக்குத் தெரியும். அவள் வெற்றிலைக் கொடியைத் தனது மறைவிடத்தில் ஒளித்துக்கொண்டு வந்தாளாம் பூமிக்கு. எனவேதான் வெற்றிலைக்கு அதன் தற்போதைய வடிவமும் மணமும் கிடைத்ததாம். அந்தக் கதை வாசித்த பலர் வெற்றிலையை முகர்ந்து பார்த்துக் கிளர்ச்சியுற்று, ஆமோதித்ததுண்டு.

வெற்றிலைக்குச் சுண்ணாம்பு கேட்டால், கையால் எடுத்துத் தரக் கூடாது. நள்ளிரவில் பேய்கள், அழகிய சினிமா நடிகைகள் வேடம் புனைந்து வந்து வழிமறித்து, வெற்றிலைக்குச் சுண்ணாம்பு கேட்குமாம். விரலால் வழித்துக் கொடுத்தால், தீர்ந்தது சோலி. கத்தியில் எடுத்துத் தர வேண்டும். ‘சுண்ணாம்பு கேட்ட இசக்கி’ எனும் தலைப்பில் பேராசிரியர் அ.கா.பெருமாள் தனது கள ஆய்வு அனுபவங்களை நாவல் போலச் சொல்கிறார்.

கிராமங்களில் வயல், தோட்டம், காடு, விளை என வேலை பார்க்கும் எளிய மக்களுக்கு ஓய்வு நேரத்தில் வெற்றிலை போடுவதும், பகிர்ந்தளிப்பதும், இனாம் கேட்பதும் தினந்தோறும் நடப்பவை. ‘ஒரு தரத்துக்கு வெத்தல தா’ என்பார்கள். ‘ஆமா, ஒனக்கு நெதமும் இதே சோலி’ என்று பதில் சொல்வார்கள். ஆனால், தராமல் இருப்பதில்லை. மதியம் கஞ்சி குடிக்காமல் வேண்டுமானால் இருந்துவிடுவார்கள்; வெற்றிலை போடாமல் இருக்க இயலாது.

‘வாட வெத்தல வதங்க வெத்தல வாய்க்கு நல்லால்லே, நேத்து வெச்ச சந்தனப் பொட்டு நெத்திக்கு நல்லால்லே’ என்று கொல்லையில் மறைந்து நிற்கும் மச்சானுக்கு இரங்கும் பாடல் நம்மிடம் உண்டு.

சந்தைக்கு வெற்றிலை கட்டுகளாக, கவுளிகளாக விற்பனைக்கு வரும். வாழை மரப் பட்டைகளால் பொதி யப்பட்ட கட்டுகள் காண்பது அழகு. வெற்றிலை பயிரா கும் தோட்டங்களை வெற்றிலைக் கொடிக்கால் என்ற னர். முதலில் அகத்தி நட்டு, அதில் கொடியைப் படர விடுவார்கள். வெற்றிலை வேளாண்மை செய்தவரைக் கொடிக்கால் வேளாளர் என்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் தொழிலாள – விவசாயப் போராளி ஒருவரின் பெயர் கொடிக்கால் அப்துல்லா.

வெற்றிலையில் வகைகள் உண்டு. எங்கள் ஊர்ப் பக்கம் ஈத்தாமொழி வெற்றிலை, காரமாக இருக்கும். சோழவந்தான் வெற்றிலை, கும்பகோணம் தளிர்வெற்றிலை; வங்காளத்து வெற்றிலை மிக அகலமாக, கரும்பச்சை நிறத்தில், மொடமொடவென இருப்பது. ஒளி ஓவியர், இயக்குநர் தங்கர்பச்சான் வீட்டுத் தோட் டத்தில் இரண்டு மூன்று வெற்றிலைக்கொடிகள் படர்ந் துள்ளன. உண்ட பின்பு, உடனே பறித்துப் போட்டுக் கொள்ளலாம்.

ஒரு வெற்றிலைக்குப் பழகியவர், மற்றதைச் சீந்த மாட்டார். ராணி மங்கம்மாள் வெற்றிலை போடுவதில் மிகப் பிரியமுடையவர் என்றும், வெற்றிலை மூலமாக விடம் சேர்த்து அவரைக் கொல்ல முயன்றனர் என்றும் சு.வெங்கடேசனின் சமீபத்திய நாவல், தமிழுக்குப் புதிய சிறந்த வரவான ‘காவல் கோட்டம்’ தகவல் தருகிறது.

வெற்றிலைக்குச் சுண்ணாம்பு சேர்ப்பதில் கவனம் வேண்டும். கல் சுண்ணாம்பு ஆனாலும், சிப்பிச் சுண் ணாம்பு ஆனாலும் வாய் சிவக்க வேண்டுமே தவிர, வெந்து போகக் கூடாது. வெற்றிலை போட்ட இளம் பெண்கள் சிவந்துள்ளதா என நாக்கு நீட்டிப் பார்க்கையில் நாக்கை எட்டிக் கவ்விவிடத் தோன்றும் வாலிபருக்கு.

கலைஞர்கள் பலருக்கும் வெற்றிலைப் பழக்கம் இருந் துள்ளது. அதுபோல் கொல்லர், தச்சர், கொத்தனார் என முனைந்து வேலை செய்யும் தொழிலாளிகளுக்கும். அரும்பு, வேள்வித் தீ, காதுகள் எனும் அருமையான நாவல்கள் எழுதிய எம்.வி.வெங்கட்ராம் மணக்க மணக்க வெற்றிலை போடுகிறவர். ‘அசடு’ நாவலாசிரியர் காசியபன், நவீனத் தமிழ் இலக்கிய மேதை நகுலன், பொதியவெற்பன் போன்றோரும் வெற்றிலைப் பிரியர்கள். வெற்றிலை பாக்குப் போடுபவர் பக்கம் ஒரு வாசனை இருக்கும். ஆடவரும் பெண்டிரும் தமக்குள் வாய் வழியாகத் தாம்பூலம் பரிமாறிக்கொண்ட தகவல்களை நமது ‘விறலி விடு தூது’க்கள் பேசுகின்றன.

வெற்றிலையை வாயில் ஒதுக்கிக்கொண்டு பேசுகிற மொழி ஒன்று உண்டு. பிறர் கேலி பேசும்படியாக புது மணமக்கள், முன்பு தாம்பூலம் மடித்துக் கொடுத்து அன்பைப் பரிமாறிக்கொண்டனர். பிற ஆடவர் கையில் இருந்து பீடா கூட அவர்கள் பெற்றுக்கொள்ள மாட் டார்கள். சமபந்தி போஜனம் இன்றோர் அரசியல் ஆதாயம். அன்று பல இனத்தவரும் சேர்ந்திருந்து தாம்பூலம் தரித்திருக்கிறார்கள். பெரிய பண்ணையார் தமது தோட்டக்காரனை நோக்கி வெற்றிலைத் தாலத்தை நகர்த்திக் கொடுப்பார்.

வெறும் வெற்றிலை ஒரு மூலிகை. காய்ச்சலுக்கு வைக்கும் கஷாயத்துக்கும் ஆகும்; பூச்சிப் பொட்டுக்கள் கடித்த கடிவாயில் சாறு பிழிந்துவிடவும் ஆகும். வெற்றிலைக்குள் நல்ல மிளகு சில வைத்து மென்று தின்னச் சொல்வார்கள் வயிற்றுவலிக்கு.

நன்கு கொழுக்க மணக்க வெற்றிலை சுவைத்தவர் முகத்தில், நெற்றியில் சன்னமான வியர்வை அரும்பி, மது அருந்தியவரின் போதைக் கிறக்கம் தெரியும். புதிதாக வெற்றிலை போட்டுப் பழகுபவர் பாக்கின் தன்மையால் தலைசுற்றல், மயக்கம் போன்ற சிறிய உபாதைகளுக்கு ஆட்படுவதுண்டு.

முன்பெல்லாம் வீட்டு விசேஷங்களுக்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பார்கள். தாமதமாக வருபவர்களையும் சுணக்கம் காட்டுபவர்களையும், ‘என்னா, வெத்தல பாக்கு வெச்சு அழைச்சாத்தான் வருவியா?’ என்று உரிமையுடன் கடிந்துகொள்வதும் உண்டு. எந்தச் சாமிக்கு வழிபாடு செய்தாலும், இந்துக்கள் வெற்றிலை பாக்கு வைக்க மறப்பதில்லை. சில சாமிகளுக்கு சுருட்டு, சாராயம்கூடப் படைக்கிறார்கள். இன்று வாக்காளச் சாமிகளுக்கு ஊதா வண்ண நோட்டுக்கள் படைக்கிறார்கள்.

நன்கு வாய்த்த தாம்பூலத்தை வெற்றிலைக் கொலு என்றனர். பருவத்து ஆடவர், பெண்டிர் தோட்டம் துரவுகளில் வெற்றிலை பகிர்தலில் ஆரம்பித்து முத்தங்கள் பரிமாறுவதில் சென்று சேர்ந்ததுண்டு.

வெற்றிலை, பாக்கு. சுண்ணாம்பு குறித்து விடுகதைகள் உண்டு நம்மிடம்.

கோறைப் பாக்கு, வறட்டுப் பாக்கு, களிப் பாக்கு, பச்சைப் பாக்கு, பழுக்காப் பாக்கு, சீவல் பாக்கு, சாயப் பாக்கு என்றும் பாக்குகள் பல உண்டு. ஆடைகளில் விழும் வெற்றிலைக் கறை, அம்மா என்றாலும் போகாது; ஆத்தா என்றாலும் போகாது!

நல்ல உணவுக்குப் பின் தாம்பூலம் தரிப்பது நல்லது. சீரணத்துக்கு உதவும். கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் தாம்பூலம் தரிக்கும் வழக்கம் உண்டு. சில சமயம் சின்னக் குழந்தைகள் தாம்பூலம் கேட்டு அடம் பிடிக்கும். தாய்மார்கள், ‘வெத்தல போட்டா கோழி முட்டும்’ என்று அச்சுறுத்துவார்கள். என்றாலும், சில திருமண வீடுகளில் ஐந்து வயதுச் சிறுமி பட்டுப் பாவாடை உடுத்தி, நகைகள் அணிந்து, வெற்றிலைச்சாறு வடிய பெருமிதத்துடன் நடப்பது, காண மகிழ்ச்சியாக இருக்கும்.

பல் போன தாத்தாக்களும் ஆத்தாக்களும் பாக்கு வெற்றிலை இடித்து, எலுமிச்சை அளவில் உருட்டி வாயில் ஒதுக்கிக்கொள்வார்கள். அதற்கென வாசற் கதவின் பின்புறம் வெற்றிலைத் தட்டும் சிற்றுரலும் குழவியும் வைத்திருப்பார்கள். வெற்றிலை தட்டுவதற்கும் ஒரு லயம் உண்டு. ‘தாத்தா, நான் இடிச்சுத் தாறன்’ என்று சொல்லி அமரும் நேரம், கதைகள் கேட்கச் சிறந்த நேரம். கிராமத்தில் தஸ்க்-புஸ்க் என்று ஆங்கிலம் பேசித் திரியும் விடலைப் பையனிடம் ஒரு தாத்தா கேட்டாராம்…. ”ஏ… பேரப்பிள்ளே! வெத்தல தட்டுக் கொழவிக்கு இங்கிலீசுல என்னதுடே?” பேரன் சொன்னானாம், ”அது தெரியாதா பாட்டா? வெத்ல தாட் கொள்வி” என்று.

மலையாளத்தில் தாம்பூலத்தை முறுக்கான் என்கிறார்கள். வட நாட்டில் ‘பான்’ என்பார்கள். பான் எனும் சொல்லும் இலை குறித்ததுதான். நம்மூரில் வெற்றிலை பாக்குக் கடைகள் போல் வட நாட்டில் பான் கடைகள் உண்டு. தாம்பூலத்தைப் பீடா என்பதும் உண்டு. பெரிய உணவு விடுதிகளிலும் திருமண விருந்துகளிலும் உண்ட பின் பீடா வழங்குவார்கள். நம்மூர் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு போன்றதல்ல பீடா தயாரிப்பு. பாக்கில் கச்சா-பக்கா என்று இரு வகை, கல்கத்தா வெற்றிலை, குல்கந்து, லவங்கம், ஏலக்காய் என ஏகப்பட்ட சேர்மா னங்கள் உண்டு. மீட்டா பான், 420, பனாரசி, ஜெய்ப்பூரி, ஆம்தாபாதி, கல்கட்டா எனும் வகைகள் பல.தெரிந்த வரிடம் கேட்டுத் தெரிந்து வாங்கித் தரிப்பது நல்லது. அன்றேல், சாலையோரம் விழுந்து கிடக்க நேரும்.

பனியா, மார்வாரி, வங்காளி, பஞ்சாபிப் பெண்களும் இஸ்லாமியப் பெண்களும் வெற்றிலையை விரும்பிப் போடுகின்றனர். ‘படோஸன்’ எனும் இந்திப் படத்தில் வாயில் வெற்றிலைச் சாறு ஒழுக கிஷோர் குமார் பாடி, சுனில்தத், மெஹ்மூதுடன் சேர்ந்து நடித்த பாடல் ‘ஏக் சதுர நாரி’ மிகப் புகழ் பெற்றது.

வெளிநாட்டவருக்கு இந்தியர் எனில் பிச்சைக்காரர்கள், பாம்பாட்டிகள், திறந்த வெளியில் கழிப்பவர்கள், பீடி புகைப்பவர், வெற்றிலை போட்டு நாடு முழுதும் துப்பு கிறவர் என்ற எண்ணம் இன்றும் உண்டு. அதைப் பயன் படுத்திப் பணம் சேர்க்கும் எழுத்தாளரும் சினிமாக்காரரும் உண்டு.

ஒரு காலத்தில் சினிமாக் கொட்டகைகளில் தீயணைக்கும் மண் நிறைந்த வாளிகள், சுவர் மூலைகள், மரத்து மூடுகள் எங்கும் வெற்றிலைத் துப்பல் ஆடு அறுத்தது போல் கிடக்கும். அரசாங்கக் கட்டடங்களின் படிக்கட்டு மூலைகள் அதற்கெனவே ஏற்படுத்தப்பட்டவை.

அகமதாபாத் நகரில், உயர்தர உணவு விடுதிக்கு ஏறும் படிக்கட்டு மூலைகளில் கங்கையும், விரிசடையும், நச்சரவும் தாங்கிய பரமசிவம், குழலூதும் ஆயர்பாடிக் கிருஷ்ணன், வாதாபி கணபதி உருவங்கள் கொண்ட பளிங்கு ஓடுகள் பதிக்கப்பட்டிருந்தன. காரணம், சாமிகளின் மூஞ்சிகளில் பான் உமிழ மாட்டார்கள் என்று ஒரு நம்பிக்கைதான்.

வெற்றிலை போடும் பலர் புகையிலை சேர்த்துக்கொள்கிறார்கள். எந்த அர்த்தத்திலும் அது பெருந்தீங்கு. கன்னப் புற்று, உதட்டுப் புற்று, வாய்ப் புற்று, தொண்டைப் புற்று என்பன நஞ்சிலும் அஞ்சப்பட வேண்டியவை. போடும் வெற்றிலையில் சேரும் புகையிலை – வடக்கன் புகையிலை, யாழ்ப்பாணப் புகையிலை, தடைப் புகை யிலை, கருப்பட்டிப் புகையிலை, பன்னீர்ப் புகையிலை, புகையிலை நெட்டு – எதுவாயினும் எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி?

வெற்றிலைக்கு மாற்றாகப் பலர் மாவா, போதைப் பாக்கு, ஜர்தா என்று பற்பல கடைகளில் வாங்கி, வாய் மணக்கவும் சிற்றுப் போதைக்கும் கன்னத்தில் ஒதுக் கிக்கொள்கிறார்கள்.

‘யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்’ -என்கிறார் திருவள்ளுவர்.

About S i Sulthan

தொகுப்பு
This entry was posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s