“தீதும் நன்றும்” (14) கிராமியக் கலை

“தீதும் நன்றும் (14) கிராமியக் கலை

 இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்றார் மகாத்மா காந்தி. அது வெறும் ஒற்றைப் பரிமாணம் உள்ள வாசகம் அல்ல. கிராமங்களில் இந்தியா, விவசாயமாக, கைத்தொழில்களாக, தொன்மையான சடங்குகளாக, நாட்டுவைத்தியமாக, சிறு தெய்வங்களாக, நாட்டார் கலைகளாக, விருந்தோம்பலாக, ஆசாபாசங்கள் நிறைந்த அன்பாக, சிற்றோடைகளாக, வால் உயர்த்தித் துள்ளித் திரியும் கன்றுகளாக, நாவற் பழ மரங்களாக, குப்பைமேனிச் செடிகளாக, ஒற்றையடிப் பாதைகளாக வாழ்கிறது.

நகரங்கள் எவ்வளவுதான் கிராமங்களின் கழுத்தை நெரித்துக் கொல்ல முயன்றாலும், இன்னும் கிராமங்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அவ்வகையில் ஆனதோர் கிராமத்தை இந்த ஆண்டு ஜனவரி 24-ம் நாள் கண்ணுற வாய்த்தது. ‘மணல் வீடு’ எனும் சிற்றிதழும் ‘களரி’ எனும் தெருக்கூத்துப் பயிற்சிப் பட்டறையும் இணைந்து, மக்கள் கலை இலக்கிய விழா நடத்தினார்கள், ஏர்வாடி கிராமத்தில்.

குட்டப்பட்டி அஞ்சல், மேட்டூர் தாலூகா, சேலம் மாவட்டம் என்று சொன்னால் தபால் போய்ச் சேரும். ஆனால், நீங்கள் அந்தக் கிராமத்தைச் சென்று சேர்வது சிரமம். சேலத்தில் இருந்து ஓமலூர், மேச்சேரி வழியாக மேட்டூர் போகும் பேருந்தில் ஏறி, பொட்டனேரி எனும் சந்திப்பில் இறங்க வேண்டும். பேருந்து நிறுத்தத்தில் இறங்கியதும், தோட்டத்து மரங்களில் பழுத்த வாழைக் குலைகள் தொங்கும் ஒன்றிரண்டு கடைகள். இளம்பசி, தாகம், பயணக் களைப்பு இருந்தால், மலிவாய் இரண்டு பழங்கள் தின்று, ஏர்வாடிக்கு வழி கேட்கலாம். கால்களில் திறன்கொண்டவர் மூன்று கி.மீ. நடக்கலாம். அல்லது அவ்வழி போகும் இரு சக்கர வாகன ஓட்டிகளிடம் பின்னிருக்கை காலியாக இருந்தால், கை காட்டலாம். அன்றேல், அபூர்வமாகத் தென்படும் ஆட்டோவுக்குக் காத்திருக்கலாம். அந்தக் கிராமத்துக்கு நகரப் பேருந்தோ, சிற்றுந்தோ கிடையாது.

கோவையில் இருந்து, இரண்டாம் தடவையாக இந்தக் கலை விழாவுக்குப் போகும் எனக்கு, பவானி வழியாகப் போவது எளிது. மேலும், பவானி – மேட்டூர் பாதை, 40 கி.மீ. பயணம் எப்போதும் இனிமையானது. மேட்டூர் அணையின் பாலருந்தி வளரும் மரஞ்செடி, கொடிகள், பச்சை பூத்த சாலையோர மரங்கள், தேமாந் தண்ணிழல், புளிமாந் தண்ணிழல், கூவிளந் தண்ணிழல், கருவிளந் தண்ணிழல். தென்னை, வாழை, கரும்பு, நெற்பயிர். சற்று சீக்கிரமாக மேட்டூர் போய்ச் சேர்ந்தேன்.

மேட்டூர் சந்தையில் இளம் கத்தரிக்காய், நாரத்தங்காய், மாங்காய், மொச்சை எனக் குவியல்களாகக் கிடந்தன. விட்டுவிட்டுப் போகவும் மனமில்லை. வாங்கிக்கொண்டு போகவும் முடியாது. இசை மேதை எம்.டி.ராமநாதன் எனில், குவியலோரம் உட்கார்ந்து தோள் துண்டில் இரண்டு கிலோ பிஞ்சுக் கத்தரிக்காய் பொறுக்கி இருப்பார், ‘கச்சேரி கிடக்கட்டும்… பார்த்துக்கொள்ளலாம்’ என்று. மேலும், கோவை மாவட்டத்துக்காரர்கள் வெள்வரி ஓடிய நீலமாக இருந்தால்தான் அதைக் கத்தரிக்காய் என ஏற்றுக்கொள்வார்கள். நானோ நாஞ்சில் நாட்டுக்காரன். அடர் நீலத்தை ஊடறுத்துப் பரவிய வெண்திட்டுக்கள்கொண்ட கத்தரிக்காய் சகவாசம். மேட்டூரில் என்னை அவை கண்ணிமைக்காமல் பார்த்துக்கிடந்தன.

மேட்டூரில் இருந்து 14 கி.மீ பொட்டனேரி. பயணங்களின்போது பல முறை குறுக்கிட்ட மேட்டூர் அணை எனப்படும் ‘ஷிஜிகிழிலிணிசீ ஸிணிஷிணிஸிக்ஷிளிமிஸி’. ஆங்கிலேயன் கட்டியது. 120 அடி உயரத்துக்கு வெள்ளம் பெருகிக்கிடந்தால், கடல் போலத் தோற்றம் தரும். ஆனால், எப்போதும் அது போலப் பார்க்க வாய்க்காது. தமிழனின் வயிற்று எரிவுக்கு எடுத்துக்காட்டாகவே பெரும்பாலும் கிடக்கும்.

மதியம் ஒன்றரை மணிக்குப் பொட்டனேரி போய் இறங்கினேன். ‘மயில் ராவணன்’ சிறுகதைத் தொகுப்பாசிரியர், ‘மணல் வீடு’ ஆசிரியர் ஹரிகிருஷ்ணன் கலை விழாவின் அமைப்பாளர். அவர், பொட்டனேரிக்கு ஆட்டோ அனுப்பும் அவகாசத்தில் ஏர்வாடி நோக்கி நடக்க ஆரம்பித்தேன். இருபுறமும் வயல்களில் குத்துச் செடிகளில் அவரை போல் காய்த்துக்கிடந்தன. அது காட்டு அவரையோ, மொச்சையோ என ஐயம் எழுந்தது. என் பின்னால் வழி நடந்து வந்த பெண்கள் ஐயம் தெளிவித்தனர், அது மொச்சைதான் என்று.

எங்கள் ஊரில் ஆரல்வாய்மொழிக்கு வடக்கே இருந்து தலைச்சுமட்டில் மூதாட்டிகள் வியாபாரத்துக்கு மொச்சை கொண்டுவருவார்கள். அது கறுப்பு மொச்சை. கொண்டைக் கடலையுடன் சேர்த்துத் தீயல் வைப்பார்கள். இந்தப் பக்கங்களில் மொச்சை வெள்ளையாக இருக்கும். அது போலவே எள், கொள் எனப்படும் காணம், தட்டப்பயிறு எனப்படும் பெரும்பயிறு யாவும் கறுப்பு நிறம். அதுவே சிறப்பானது என்று ஓர் எண்ணம் உண்டு எனக்கு.

பனைமரக் கூட்டங்கள், மொச்சை வயல்கள் தாண்டிப் போனால், ஊர் மத்தியில் மாரியம்மன் கோயில். கோயில் முன்னால் எவரோ நேர்த்திக்கடனுக்குச் செய்து நிறுத்திய குதிரையும் வீரனும். கோயிலைப் பார்த்து, சிமென்ட் தளம் போட்ட அறுத்தடிப்புக் களம். அதில்தான் கூத்துக்கான களரி கூட்டுவதற்கு ஏற்பாடுகள் ஆகிக்கொண்டு இருந்தன. சற்று தூரத்தில் அரச மரமும் அதன் தூரைச் சுற்றிக் கட்டிய உயர்ந்த மேடையும். நாக தேவதைகள் புடைசூழப் பிள்ளையார். காற்று அலைந்து திரியும் வெளியும் நிழலும். துண்டு விரித்துப்படுத்தால், உறக்கம் தூக்கிக்கொண்டு போகும்.

ஏர்வாடிக் கிராமத்தில் சுமார் 250 வீடுகள். நம்புங்கள், ஒரு சாயாக் கடைகூட இல்லை. தை மாதம் தொடங்கிவிட்டால் கூத்து அரசாளும் காலம். சேலம் மாவட்டத்தில் மட்டும் ஏறத்தாழ 50 ஜமாக்கள் இருக்கின்றன. ஒரு ஜமாவில் 12 முதல் 15 பேர்கள். பெண்களும் பெண் வேடத்திலோ, ஆண் வேடத்திலோ ஆடுகிறார்கள். பெரும்பாலும் குறவர், அருந்ததியர், தொம்பர், பறையர், வன்னியர் இனத்தவர். திருவிழாக்கள், இறந்தவருக்கான நினைவு நாட்கள், நேர்ச்சை எனப் பல சந்தர்ப்பங்களில் கிராமங்களில் கூத்து நடத்துகின்றனர். குழந்தை இல்லாதவர் வேண்டி, குழந்தை பிறந்தால் ‘அர்ச்சுனன் தபசு’.

ராமாயணக் கூத்து எனில், சிரவணன் கதை, தாடகை வதம், சீதா கல்யாணம், பாதுகா பட்டாபிஷேகம், சூர்ப்பனகை கர்வ பங்கம், வாலி மோட்சம், லங்கா தகனம், இந்திரஜித் சண்டை, கும்பகர்ணன் சண்டை, ராவண வதம், லவ குசன் கதை என.

மகாபாரதம் எனில் யயாதி கல்யாணம், அம்பாள் கல்யாணம், வில்லேற்றம், திரௌபதி கல்யாணம், திரௌபதி துகில், பாகாசுர வதம், ஆரவல்லி சண்டை, அல்லி கல்யாணம், சுபத்திரை கல்யாணம், அரவான் களப்பலி, அபிமன்யு வதம், 18-ம் நாள் படுகளம். பெரும்பாலும் குழல் எனப்படும் முக வீணையைப் பறையர் இனத்தவர் வாசிக்கிறார். ஏழு துளையுடன் ஓரடி நீளமுள்ள, நாகஸ்வரத்தின் குறு வடிவம் போன்ற வாத்தியம் அது. குறவர், அருந்ததியர் அல்லது பறையர் இனத்தவர் மத்தளம் வாசிக்கிறார்கள். வெள்ளாளக் கவுண்டர்கள் ‘அண்ணன்மார் சுவாமி கதை’ எனும் கூத்து நடத்து கிறார்கள்.

பெரும்பாலும் கூத்துக் கலைஞர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. கூத்துப் பாடமும், தாளமும், ராகமும் கேள்வி ஞானமே. எந்தக் கூத்து நாடகத்துக்கும் சுவடிகள் இல்லை. ‘பாணாசுரன்’ கூத்துக்கு மட்டும் யார் கைவசமோ எழுதப்பட்ட பிரதி உண்டு என்று சொல்கிறார்கள். மற்றபடி வாய் மூலம், வாத்தியார் தரும் பயிற்சிதான்.

சமீபத்தில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்து முனைவர் பட்ட ஆய்வு மாணவர் அரிபாபு, 60 ஆண்டுகளுக்கு முன்பு வழக்கொழிந்து போன நிகழ் கலையான, ராமநாதபுரத்து, ‘ராமாயண ஒயில்’ எனும் நாட்டார் கலையின் வாய்மொழி வடிவத்தைத் தேடிக் கேட்டு, அச்சு வடிவம் ஏற்றிஉள்ளார். துணைவேந்தர் ம.ராசேந்திரன் தலைமையில் எனக்கு அது வெளியிட வாய்த்தது.

எல்லாக் கூத்துக் கலைஞர்களுக்கும் ராக, தாள அடிப்படை தெரியும். ஆனால், அவை எழுதி நிறுவப்பட்ட இலக்கணங்கள் அல்ல. சில சமயம் ஆடத் தொடங்கும் முன், கூத்து ஆடுபவர், மத்தளம் அடிப்பவரிடம் தாளத்தை, ரூபகம், ஓரடிச் சாப்பு, மூன்றடிச் சாப்பு எனச் சொல்லிவிடுகிறார்கள்.

கூத்தில் ஒரு வேடத்துக்கான ஆள் இல்லாவிட்டாலும், கூத்து நிற்காது. வேறொருவர் வேடங்கட்டி இட்டு நிரப்புவார். ஒரு கூத்தில் இராவணன் வேடம் கட்டுபவர், வேறொன்றில் பெண் வேடம் கட்டுவார். அரங்கு என்பதும் களரி எனப்படுவதும் மேடை அல்ல. சமதளம்தான். அரங்கிலேயே பெஞ்சு போட்டு, கால்களைத் தொங்கவிட்டு வாத்தியக்காரர்கள் அமர்ந்துகொள்கிறார்கள். எப்போதும் ஒலிவாங்கியும் ஒலிபெருக்கியும் கிடையாது.

கூத்துக் கலைஞர்களின் வாழ்க்கை நிலை, சராசரிக் கூலித் தொழிலாளியைவிட மோசமாக இருக்கிறது. தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, எனும் ஐந்து மாதங்களே கூத்து நடக்கும் காலங்கள். மற்ற நாட்களில் மனதிருந்தால், காட்டு வேலை அல்லது கவுதாரி, பெருச்சாளி வேட்டை. கலை, உள் நின்று ஓயாமல் ஆட்டுவதால் நிலைத்து நின்று எந்த வேலையையும் செய்ய முடிவதில்லை. கவிஞர் விக்ரமாதித்யன் கேட்டார், ‘ஓய்ந்த வேளையில் இலக்கியம் செய்தால், உருப்படுமா தமிழ் இலக்கியம்?’ என்று. அது போல், இவர்களுக்குக் கூத்து என்பது ஓய்ந்த பொழுதில் செய்வதோ, உப தொழிலோ அல்ல.

இரவு 10 மணி முதல் அதிகாலை வரை ஆடப்படுவது கூத்து. அதற்கான உடைகள், ஒப்பனைகள், செலவு தனியானவை. பல சமயங்களில், பேசிய தொகை கிடைக்காமல், தனது பங்கையும் பிரித்துக் கொடுத்துவிட்டு, வெறுங்கையுடன் வீட்டுக்குப் போவார் வாத்தியார்.

சென்ற ஆண்டில் ‘அபிமன்யு வதம்’ பார்த்தேன். இந்த ஆண்டில் எனக்குக் காணக் கிடைத்தவை ஜெயா- ராஜம்மா குழுவினரின் ‘வாலி மோட்சம்’ எனும் தோல் பொம்மலாட்டம். தொடர்ந்து ‘களரி தெருக்கூத்துப் பயிற்சிப் பட்டறை’ அளித்த லங்கா தகனம்.’ என்னைப் போல பல திசைகளிலிருந்தும் தேடி வந்திருந்தனர், தமிழ் இலக்கியவாதிகள்-பிரபஞ்சன், தமிழ்ச்செல்வன், பெருமாள்முருகன், பொதியவெற்பன், மும்பையில் இருந்து புதிய மாதவி, ஆதவன் தீட்சண்யா, அன்பாதவன், விழி.பா.இதயவேந்தன், க.சீ.சிவகுமார், யாழ்ப்பாணத்து தமிழ்நதி, ச.விஜயலட்சுமி, பேராசிரியர் கே.ஏ.குணசேகரன், தேவேந்திர பூபதி, குட்டிரேவதி, மயூரா ரத்தினசாமி ஆகியோர்.

கன்னடத்தின் ‘யக்ஷ கானா’, மராத்தியின் ‘தமாஷா’, மலையாளத்தின் ‘கதகளி’, ‘சாக்கியார் கூத்து’ போன்று நமது கூத்தும், தோல்பாவையும், வில்லுப்பாட்டும் மற்றும் பல தொன்மையான கலை வடிவங்களும் நமக்குப் பெருமை சேர்ப்பன. அவை கலை, பொழுதுபோக்கு, இளைப்பாறல், ஆன்மிகம், பாலியல் விடுதலை எனப் புராணமும் இலக்கியமும் சமகால அவலமும் கலந்த ஒரு பிணையல்.

இந்தக் கூத்துக் கலைஞர்களின் ஆட்டமும், துள்ளலும், அடவுகளும், முக வெட்டுக்களும், அபிநயங்களும் நயன மொழியும் கண்ட எவராலும் என்றும் மறக்க முடியாதவை.

திரைப்படங்களில் இன்று நீங்கள் காணும் ஆடல் காட்சிகள், பெரியதோர் எந்திரமயமாக்கப்பட்ட கண்கட்டு வித்தை. மூன்று நிமிடம் நாம் காணும் ஆட்டத்தைப் படமாக்க, மூன்று நாட்கள் ஆகின்றன. பல மடங்கு ஏற்றப்பட்ட வேகம் காட்டி நமக்கு அவை தோற்றம் தருகின்றன. இந்தக் கூத்துக் கலைஞர்களுடன் சினிமா நடிக, நடிகைகள் ஒரு கூத்தில் ஆடினால், கோடிகளில் சம்பளம் வாங்குகிறவர்களின் கெண்டை நரம்பு அறுந்து போகும்.

கணியான் கூத்தின் மகுடம் வாசிப்பதைக் கேட்டுவிட்டு, இசை நாட்டிய விமர்சகர் சுப்புடு ஒருமுறை எழுதினார், ‘நமது தாளலய விற்பன்னர்கள் யாவரும் கணியான்களின் காலில் விழுந்து வணங்க வேண்டும்’ என. கூத்துக் கலைஞர்களின் ஆட்டத்துடன், நாட்டிய இலக்கணம் தேர்ந்து, விலை உயர்ந்த பட்டாடைகளும் ஆபரணங்களும் தரித்து, மேன்மை தங்கிய பார்வையாளர்களின் முன்னால் குளிர்பதன அரங்குகளில் ஆடும் நாட்டியமணிகளை ஒப்பிட்டுப் பார்க்க, நமக்கும் அதுவே தோன்றுகிறது. அவர்களின் அபிநயங்களும், பாவங்களும், வர்ணமும், பதமும், ஜாவளியும், தில்லானாவும், அலாரிப்பும், கூத்துக் கலைஞர்களின் அடவுகளுக்குக் கைகட்டிச் சேவகம் செய்ய வேண்டியது இருக்கும்.’

நமது மண்ணின் தொன்மையான இந்தக் கலைகளை அரசாங்கங்கள் மனதுவைத்துக் காக்க வேண்டும். ‘சங்கமங்கள்’ சென்னையில் மட்டுமல்லாமல், மாவட்ட தாலூகா தலைநகர்களில் நடத்தப்பட வேண்டும். இங்கு சினிமா என்பது இரண்டு தாய் ஆடுகள் ஊட்டும் குட்டி போலக் கொழுக்கின்றது. சொந்த மண்ணின் நாட்டார் கலைகள், மாற்றான் பிள்ளைகள் போலக் கூலி வேலை செய்து பிழைக்கின்றன.

ஜெயமோகன் எங்கோ எழுதினார், கிராமியக் கலைகள் பற்றி. ‘செகண்ட் ஏ.சி-யில் பயணம் செய்து, குளிர்பதன அறைகளில் கட்டுரை வாசித்து, நட்சத்திர விடுதிகளில் உண்டு உறங்கி, கருத்தரங்குகள் நடத்துகிறார்கள். ஆனால், கிராமியக் கலைஞர்கள் மரத்து மூடுகளில் அமர்ந்து, தையல் இலையில் புளிசாதப் பொட்டலங்களைப் பிரித்துத் தின்று பசியாறுகிறார்கள்’ என.

தொலைக்காட்சிப் பெட்டிகளிலும், முட்டாள்தனமான சினிமாக்களிலும் சலித்துப்போன தமிழ் இளைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள்… சற்று நமது கிராமியக் கலை வடிவங்களையும் மரியாதையுடன் திரும்பிப் பாருங்கள்… கலை பற்றியும் வாழ்க்கை பற்றியும் புதிய வெளிச்சங்கள் உங்களுக்குக் கிடைக்கக்கூடும்!

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s