“தீதும் நன்றும்” 7. தாலி

“தீதும் நன்றும்” 7.  தாலி

 தாலி னில் தமிழில் கீழாநெல்லி என்றும் மட்பாண்டம் என்றும் பொருள் தருவது. ஆனால், தாலி எனும் இரண்டெழுத்து மங்கல அணிகலன் தமிழர் வாழ்வில் அளப்பரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பது. ஏனெனில், தாலி வெறும் ஆபரணம் மட்டும் அல்ல. அதன் மீது அளவு கடந்த புனிதம் ஏற்றப்பட்டு, சடங்குகளில் முன்னிலைப்படுத்தப்பட்டு, தமிழ்ப் பெண்ணின் வாழ்க்கையுடன் இரண்டறக் கலந்துவிட்டது. தாலி என்பது ஒரு பாக்கியமாகக் கருதப்படுகிறது. தாலி பாக்கியம் என்பதும் தாலிப் பிச்சை என்பதும் தமிழ் வழக்குகள்.

‘தமிழர் திருமணத்தில் தாலி’ என்று ஓர் ஆய்வு நூல் மிக முக்கியத்துவம் உடையது. தாலி என்பது பெண் அடிமைத்தனத்தின் அடையாளம் என்றும், தாலி அணிவது மூடநம்பிக்கை என்றும், பிற்போக்குத்தனம் என்றும் கருதுகோள்கள் வலுவாக இருந்தன முன்பு. பின்னர், அந்தக் கொள்கை சார்ந்தவர்களே அமைச்சர்களாக ஆன பின்பு, அவர் தலைமை வகித்த திருமணச் சடங்குகளில் சம்பிரதாயமாகத் தன் கையாலே தாலி எடுத்துக் கொடுத்தனர்.

காட்டுக் கேனோ தோட்டக் காரன்
கள்ளிக் கேனோ முள்ளில் வேலி
கழுதைக் கேனோ பொன்னில்
தாலி

என்பது ஒரு தனிப் பாடல். இது ஒரு சினிமாப் பாடலை நினைவூட்டினால் அதற்கு நான் பொறுப்பில்லை.

கிறிஸ்துவர்கள் பொற் சிலுவையும் தமிழ் முஸ்லிம்கள் கருகமணி மாலையும் தாலிக்குப் பதிலாக அணிவதுண்டு. தமிழர் திருமணத்தின் ஆதாரம் தாலி எனில், மலையாளத் திருமணங்களில் புடவை கொடல் எனும் ‘புடவிட’. இன்று அவர்கள் முருங்கை இலை வடிவத்திலான தாலி அணிகிறார்கள். கன்னட, துளு, மராத்தியப் பெண்கள் கருகமணி மாலையில் கோத்த குமிழ் போன்ற தாலி அணிகிறார்கள். வேறு சிலர் பவளம் அணிகிறார்கள்.வங்காளி களுக்குத் தாலியின் இடத்தை சங்கு வளை எடுத்துக்கொண்டது.

இளம் பருவத்தில் சிறுமியருக்குத் தாலி கட்டுக் கல்யாணம் என்று ஒரு சடங்கை முறைப் பையன்களுடன் செய்துவைத்தனர். அது ஒரு செல்லக் கல்யாணம். உரிமை கோர முடியாது. ‘வடக்கன் வீர கதா’ என்று எம்.டி.வாசுதேவன் நாயரின் திரைக் கதையில் ஹரிஹரன் இயக்கி, மம்மூட்டி – சுரேஷ் கோபி நடித்த திரைப்படம் ஒன்று வந்தது. இந்தச் சடங்கு அதில் விரிவாகக் காட்சிப்படுத்தப்பட்டது.

முன்பு சிறுவர்-சிறுமியர் ‘ஐம்படைத் தாலி’ என்று ஓர் ஆபரணம் அணிந்தனர். ‘தாலி ஐம்படை’ என்பது கம்பனின் சொல்லாட்சி.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் தமிழ்ப் பெண்ணின் மனக்கிடங்கில் தாலி சேமிக்கப்பட்டுள்ளது. ‘தொங்கத் தொங்கத்’ தாலி அணிவது பெரியதோர் கௌரவம். சமூக அங்கீகாரம். ‘தாலியில் பூச்சூடியவர்கள்’ என்பது பா.செயப்பிரகாசத்தின் சிறுகதைத் தலைப்பு.

தாலி கட்டுதல் என்பது இயல்பு வழக்கு எனில், மங்கல நாண் பூட்டுதல் என்பது இலக்கிய வழக்கு. ‘காப்பு நாண் கட்டக் கனா கண்டேன் தோழீ நான்’ என்பது ஆண்டாள் பாசுரம். ‘மங்கல நாண்’ என்கிறது சிலப்பதிகாரம்.

அஞ்செஞ் சீறடி அணிசிலம்பு ஒழிய
மென்துகில் அல்குல் மேகலை நீங்கக்
கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள்
மங்கல அணியில் பிறிதணி மகிழாள்

என்பது பாடல். இங்கு நான் பொருளுரைக்கத் தடை உண்டு. எனினும் கேள்வி, காப்பு நாண் என்பதும் மங்கல அணியும் தாலிதானா என்பது. ‘தாலி மங்கல நாண் எனத் தகுமே’ என்பது அபிதான மணிமாலை.

திருமணத்துக்கு முன் தாலிப் பொருத்தம் பார்த்தனர். பெண்ணைப் பெற்றவர், மகள் கழுத்தில் தாலி ஏறியதும் விடும் நிம்மதிப் பெருமூச்சைத் திரட்டினால், அதிலிருந்து மின்சாரம் எடுக்கலாம். தாலிக்காரி என்றால் சுமங்கலி எனப்படும். தாலிக் கயிறு, தாலிச் சரடு, மாங்கல்யச் சரடு, தாலிக் கொடி எனில் தாலி கோர்ப்பதற்கான நூல் அல்லது பொன்னாலான கயிறு. தாலி உரு, தாலிக் கோவை எனில் தாலியுடன் சேர்க்கப்படும் பல உருக்கள். தாலிப் பொட்டு எனில் வட்டமாகச் செய்த தாலி உரு. தாலிக் கொழுந்து எனில் ஆமை வடிவிலான தாலி. ஆமைத் தாலி என்கிறார் பெரியாழ்வார். பனை ஓலையின் வெண்குருத்தில் செய்த ஆபரணத்தையும் தாலிக் கொழுந்து என்றனர். முன்பு தமிழக அரசில் ‘தாலிக்குத் தங்கம்’ என்று ஒரு திட்டம் இருந்தது. இன்றைய இலவசங்கள் போல. இன்று அது நடப்பில் உண்டா என்று தெரியாது.

‘கெட்டுன தாலியை அவுத்து வித்துப்போட்டான்’ என்பது ஆண் மகனுக்கு மிக இழிவு. தாலிக்குப் பதிலாக, மஞ்சள் கயிற்றில் விரல்மஞ்சள் கோத்துப் போட்டிருக்கும் பெண்களை இன்றும் கிராமங்களில் காணலாம்.

திருமண நிச்சயதார்த்தத்துக்குப் பிறகு ‘தாலிக்குப் பொன்னுருக்கு’ என்று ஒரு சடங்கு உண்டு. கல்யாண மாப்பிள்ளையின் சகோதரி அல்லது தாயார் தாலி கட்டும் சடங்கில் முன்னுரிமை பெறுபவர்கள். ஒரு துண்டுப் பூச்சரத்தைத் தனது தாலிக்குச் சூடி, பின்பு அதைப் பிடரிப்பக்கம் தள்ளிய பிறகு, தாலிக் கட்டு நடத்துவார்கள், கட்டும்போது தாலி தலை திரும்பிவிடாமல் பார்த்துக்கொள்வார்கள்.

திருமணத்தன்று மஞ்சள் நூலில் திரித்துக் கட்டிய தாலியை ஏழாம் நாள் பொற்றாலிச் சரடில் மாற்றுவதற்கு ‘தாலி பெருக்கிப் போடுதல்’ என்று பெயர். கணவன் உயிருடன் இருக்கும் வரை பெண்களின் தாலி கழுத்தில் கிடக்க வேண்டும் என்பது நியதி. அன்று கொள்ளைக்காரன்கள்கூட தாலியைக் கழற்றிக்கொள்வதில்லை. எனினும் கணவன் – மனைவி சண்டையில், கணவன் தாலியை அறுத்து வீசுவது உண்டு. மனைவியும் தாலியைக் கழற்றி முகத்தில் எறிந்துவிட்டுப் போவதுண்டு. கன்னியாகுமரி மாவட்டத்தில் ‘தாலி அறுத்தான் சந்தை’ என்று ஒரு சந்தை உண்டு.

‘தாலிக் கட்டு’ எப்படி ஒரு மகிழ்ச்சியான மங்கலச் சடங்கோ, அந்த அளவுக்குத் துயரூட்டும் ஒரு சடங்கு, தாலி அறுத்தல். மங்கல வழக்காக இதனைத் தாலி பெருகுதல் என்பார்கள். தாலி வாங்குதல் என்றும் தாலி வற்றுதல் என்றும் சொல்வதுண்டு. சில பத்தாண்டுகள் முன்பு வரை வைதவ்யம் என்பது மிகக் கொடுமையானது. எனவே, சுமங்கலியாக வாழ்வது மிகப் பாதுகாப்பானதாகக் கருதப்பட்டது. ‘தாலி கட்டையிலே தொடுத்து நடுக்கட்டையிலே கிடத்து மட்டும்!’ என்றது தனிப் பாடல்.

இரண்டாம், மூன்றாம் தாரமாக, கிழவர்கள் ரகசியமாக இரவில் தாலி கட்டிப் பெண்ணைக் கூட்டி வருவார்கள். அதற்கு ‘அடுக்களைத் தாலி’ என்று பெயர். ”எங்கேயாம் போயேம்லே, ஏன் என் தாலியை அறுக்கே?” என்று படிக்காத மாணவனை ஆசிரியரும், ”தாலியறுப்பான் எங்கே போய்த் தொலைஞ்சானோ?” என்று ஊர் சுற்றும் மகனைத் தாய்மாரும் ஏசுவதுண்டு.

பெண் என்றாலேயே போதிய உரிமையற்ற, பாதுகாப்பற்ற சமூகத்தில் தாலியறுத்தவள் நிலைமை மிக மோசம். ஒரு காலத்தில் தலை முண்டிதம் செய்யப்பட்டு, வெறுந்தரையில் படுத்துறங்கி, பத்திய உணவுகொண்டு பட்டபாடு கொஞ்ச மல்ல. உடன்கட்டை ஏறுதலும் சதியும் சாதிக்கப்பட்ட நாடுதான் இது. பூப்பு அடைவதற்கு முன்பே விதவையாகி, கன்னி கழியாமல் செத்தவர் உண்டு. தப்பித்தவறி ஆடவத் தோழமைகொண்டு கர்ப்பமானவர் பாம்பு கடித்தும், பேயடித்தும், தாமரைக் கொடி சுற்றிக் குளத்தில் மூழ்கியும் இறந்து போன கதைகள் உண்டு.

இன்று அவை யாவும் பழங்கதைகள். கணவன் இறந்த பெண்களை வழியில் பார்த்துத் தெரிந்துகொள்ள முடியாது இன்று. வண்ண ஆடை, ஆபரணங்கள், பொட்டு எதுவும் துறக்க வேண்டிய அவசியம் இல்லை. தாலி அணிவதில்லை என்பதைத் தவிர, வேறு வேறுபாடு இல்லை. நவீன வாழ்க்கையும், கல்வியும், பொருளாதார விடுதலையும் தாலியைக் கட்டுத் தளர்த்தியுள்ளன. என் மூத்த நண்பர் ஒருவரின் மகன் அகாலமாக இறந்தபோது, மருமகள் தாலியை அணிந்து வாழப் பிரியப்பட்டாள். இன்னும் தொடர்ந்து அணிந்து வாழ்ந்து வருகிறாள். வானம் இடிந்து நொறுங்கிவிடவில்லை.

ஒரு காலை, சுமங்கலிப் பெண்கள் குளிக்கும்போது முகத்தைப் போல, தாலிக்கும் மஞ்சள் பூசிக் குளித்தனர். அடிக்கடி தாலியை எடுத்துக் கண்களில் ஒற்றிக்கொண்டனர். இன்று தாலியைக் கழற்றிவைத்துவிட்டுக் குளிக்கப் போகிறார்கள். அலுவலகம் போகும் பெண்கள் பண்டிகை நாட்களில் மட்டுமே அணிகிறார்கள். திருமணமாகாத பெண் பாலியியல் தொழிலாளர்கள், போலீஸ் ரெய்டின்போது சால்ஜாப்பு சொல்ல, கைப்பையில் ரெடிமேட் தாலி வைத்திருப்பார்களாம்.

இந்தியாவில் எத்தனை சாதி உண்டோ, அத்தனை தாலிகள் உண்டு. தாலியை வைத்துப் பெண்கள் சாதி கண்டுபிடித்துவிடுவார்கள். நமது இந்தியப் பண்பாட்டுத் தீபம் தாங்கிகளான சினிமாக்கள் தாலியைப் படுத்தும்பாடு, பெரும்பாடு. கணவன் இறக்கும்போதே ஒரு கை மறக்காமல் பூவைப் பிடுங்கி, பொட்டை அழித்து, தாலியையும் பறித்துக்கொள்ளும் காட்சிகள் அநேகம். அல்லது செய்தி கேட்டதுமே மனைவியே தனக்கு அதைச் செய்துகொள்வாள்.

தாலியைக் கையில் ராக்கி மாதிரி சுற்றிக்கொண்டு திரியும் நாயகன் உண்டு. தாலியை இடுப்பில் செருகிக்கொண்டு நாயகனைத் துரத்தும் நாயகி உண்டு. வில்லன் அறுத்து வீசும் தாலி போய் அம்மன் கழுத்தில் விழுவதுண்டு. அல்லது சிக்ஸர் அடித்த பந்தைத் தாவிப் பிடிப்பது போல், வில்லன் அறுத்து வீசிய தாலியை டைவ் அடித்து நாயகன் கைப்பற்றிக்கொள்வதும் உண்டு. ‘தாய் மகளுக்குக் கட்டிய தாலி’ என்று ஒரு சினிமாவே உண்டு.

ஒப்பற்ற தமிழ் சினிமாவில், ஒளிந்திருக்கும் நாயகனைப் பிடிக்க, 60 வயதான அவன் தாயைப் பிடித்து வந்து, ஊர் மந்தையில் கட்டிவைத்து, அவள் வெள்ளைப் புடவையில் சாயத் தண்ணீர் ஊற்றி, கிறுக்கனாக அலையும் ஒருவன் கையில் தாலி கொடுத்துக் கட்ட வல்லந்தம் செய்யும் காட்சி உண்டு. நாகப் பாம்புகள் சில சமயம் தாலியைக் கவ்வி வருவதுண்டு. சினிமாவை செங்கோல் போலத் தாங்கும் அரசுகள், சினிமாக்காரர்களுக்கு என்று தனியாகவும் சிறப்பாகவும் மனநோய் மருத்துவ மையம் நிறுவலாம். சமூகத்தில் தாலியின் கட்டுகள் தளர்ந்து வரும் சமகாலச் சூழலில் சினிமாவில் தாலியின் கட்டுகள் இறுகி வருகின்றன.

தாலி இல்லாவிட்டால் பெண் வேலி தாண்டிவிடுவாள் என்றும், ‘தாலி பெண்ணுக்கு வேலி’ என்றும் சொன்னார்கள். எனது ஐயம், வேலி தாண்டுவது என்பது என்ன?

திருக்குறள் சொல்கிறது-

சிறைகாக்கும் காப்பு எவன்செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை என்று

கோட்டை மதில், வாயில் காவல், தாலி முதலான சிறைகளால் காக்கும் காவல் என்ன பயனைச் செய்யும்? மகளிர் தமது நிறையால் காக்கும் காவலே தலையான காவல்!

About S i Sulthan

தொகுப்பு
This entry was posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to “தீதும் நன்றும்” 7. தாலி

  1. இலக்கியா சொல்கிறார்:

    தாலி என்பது தமிழர் தம் பண்டைய வழக்கோ? இல்லையோ? அதனை ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம் என்பது உண்மை. இதன் உண்மை நிலையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s