“தீதும் நன்றும்” (10) மொழி

“தீதும் நன்றும்”  
மொழி
மொழி என்பது மெத்தப் படித்த, உயர் பதவி வகிக்கும், தலைமுறைகளுக்குச் செல்வம் சேர்க்க உதவும் வெறும் ஊடகம் மட்டுமல்ல. குறியீடுகள் மூலமும், சைகைகள் வழியாகவும், நயன அல்லது முக அசைவுகள் காட்டியும், வாய் மூலமும், வாயே திறக்காமலும் ஏற்படுத்திய ஒலிக் குறிப்புகள்கொண்டும் பரிமாறிக்கொண்டது ஆதிக் காலம். ஒலிக் குறிப்புகள் மொழியாக உருவெடுக்கின்றன. எழுத்துக்கள், சொற்கள் பிறந்தன. வரி வடிவம் இல்லாமலேயே நின்றுபோன, முழு வளர்ச்சி அடைந்த செம்மைப்பட்ட மொழிகள் உலகில் ஆயிரக்கணக்கில் உண்டு. தமது மொழியைப் பிற மொழியின் வரி வடிவத்தில் எழுதுவதும் உண்டு. வரி வடிவங்கள் இருக்கும் மொழிகளின் எழுத்துக்களும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மாறிமாறித்தான் தற்போதைய வடிவத்துக்கு வந்திருக்கின்றன.
மொழி என்பது ஊடகம். ஆனால், அதைத் தாண்டியும் அது பண்பாடு, கலை, ஞானம், வரலாறு என சகலத்தையும் தாங்கி நிற்பது; அடையாளப்படுத்துவது. முதலில் சிந்தனையில் இருந்து மொழி பிறந்தது என்பார்கள். இன்று சிந்தனையே மொழி மூலமாகப் பிறக்கிறது.
தாய்மொழி என்பது தற்செயலான நிகழ்வு அல்ல. கருவில் இருக்கும்போதே குழந்தை கற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறது என்பது விஞ்ஞானம். எனில், வீர அபிமன்யு நமக்கு ஓர் இதிகாச எடுத்துக்காட்டு. சிலர் கேட்பார்கள், ‘பிறந்த அன்று தமிழ்க் குழந்தையைக் கொண்டுபோய் சீனாவில் வளர்த்தால், அதன் தாய்மொழி எது?’ என. கருவில் இருந்து கற்றுக்கொள்வதும் மரபணுக்கள் மூலம் அதற்குக் கிடைக்கும் தாய்மொழி அறிவுக்கும் நாம் என்ன கணக்கு வைத்துக்கொள்வது?
‘ஏதேது செய்திடுமோ, பாவி விதி ஏதேது செய்திடுமோ,
தேவடியாள் வீட்டு நாயாகச் செய்யுமோ,
தேவடியாளை என் தாயாகச் செய்யுமோ,
ஏதேது செய்திடுமோ, பாவி விதி ஏதேது செய்திடுமோ’ என்கிறார் குணங்குடி மஸ்தான் சாகிபு.
எனவே, நானே என் தேர்வு அல்ல. எனது தாயும் எனது தேர்வு அல்ல. எனது தாய்மொழியும் எனது தேர்வு அல்ல. ஆக, தாய் மொழி யாவர்க்கும் வெறும் ஊடகம் மட்டுமல்ல. நூறாயிரம் பேர்கொண்ட சிற்றினக் குழுவானாலும், எட்டுக் கோடிப் பேர்கொண்ட பேரினம் ஆனாலும், தாய்மொழி தாய்க்கும் உயிருக்கும் நிகரானது; மேலானது. தாய் என்பவள் எப்படி பால் தரும் இயந்திரம் மட்டுமே இல்லையோ, அவ்விதமே தாய்மொழியும் வெறும் ஊடகம் மட்டுமே அல்ல!
தாய்மொழிக்கான இடம் பறிபோவதால்தான் 25 ஆண்டுகளுக்கும் மேலாக, லட்சக்கணக்கில் உயிர்த் தியாகம் புரிந்து, ஈழத்தில் விடுதலைப் போராட்டம் நடக்கிறது. எத்தனை வாதங்கள் வைத்து மூடிப் பொதியப் பார்த்தாலும் அடிப்படை உண்மை மாய்ந்துபோய்விடுவதில்லை. ‘தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன்’ என்பது வெறும் கோஷமாக மலினப்பட்டுப் போனாலும் அந்தக் கூற்றின் உயிர் அழிந்துவிடுவது இல்லை.
நமது தாய்மொழி தமிழ். அதில் நமக்குச் சந்தேகம் இல்லை. எத்தனை புறக்கணித்தாலும் அவமரியாதை செய்தாலும் அதில் மாற்றம் இல்லை. ‘நாய் குடிக்க மறுக்கும் கஞ்சியைத் தாய்க்கு ஊற்று’ எனும் மனோபாவம் உள்ளவருக்கும்கூடத் தாய்மொழி, தாய்மொழியேதான்!
300 அல்லது 500 ஆண்டுகளுக்கு முன்பு புலம்பெயர்ந்து வந்தவர் – பஞ்சத்துக்கோ, படையெடுப்புக்கோ, வன்கொடுமைக்கோ அஞ்சி வந்தவரே ஆனாலும் – வீட்டில் அவர் பேசும் மொழி மராத்தியோ, தெலுங்கோ, கன்னடமோ, சௌராஷ்டிரமோ, துளுவோ, மலையாளமோ, உருதுவோ, அவர்தம் தாய்மொழி அவர் மொழி. தாய்மொழியில் எழுதப் படிக்கத் தெரியாமல், பேச மட்டுமே தெரிந்திருந்தாலும் அது அவர் தாய்மொழி. அவர்களைப் பட்டப்பெயர் சூட்டி அழைப்பதிலும் ஏளனப்படுத்துவதிலும் நியாயம் இல்லை. அவர்தம் சந்ததியினர் யாவரும் தமிழில்தான் எழுதவும் படிக்கவும் செய்கிறார்கள். பலர் தமிழைத் தாய்மொழியாகக்கொண்டவரைவிடவும் நன்றாகவும் பிழையறவும் தமிழ் பேசுகிறார்கள். தமிழுக்கு அளப்பரிய தொண்டும் செய்துள்ளனர். நம்மூர் பிராமணர்களுக்கும் தாய்மொழி தமிழ்தான்; வடமொழி அல்ல. ஆனால், வல்லந்தமாக நாம், ‘நீங்கள் தமிழர் இல்லை!’ எனும் பழியை அவர்மீது ஏற்றித் தூற்றுகிறோம்.
எளிதில் மதிப்பெண்கள் வாங்கலாம் என்பதால், செல்வர் வீட்டுக் குழந்தைகள் யாவரும் இன்று பிரெஞ்சு, ஜெர்மன், இந்தி என மொழிப் பாடம் கற்கிறார்கள். தமிழில் எழுதப் படிக்கத் தெரியாமலேயே தமிழ்நாட்டில் வாழும் தமிழர் குழந்தைகள் ஆரம்பக் கல்வி, உயர் கல்வி பெற்றுவிட முடிகிறது. அவர்கள் ஆங்கிலத்தில் கடுகு வறுக்கிறார்கள். கைம்மாற்றாக ஐந்து ரூபாய் கேட்க, ”யார், கிவ் மி ஃபை பக்ஸ் யார்!” என்கிறார்கள். ‘யார்’ என்பது இந்தி. நண்ப எனும் பொருள். எதற்கெடுத்தாலும் ‘யா, ய்யா’ என்கிறார்கள். ‘ய’ எனும் தமிழ் எழுத்தை உச்சரித்துப் பழகுவதைப் போல எங்கு பார்த்தாலும், ‘நோ யா, யெஸ் யா, கோ யா, கம் யா!’
சிலசமயம் உறக்கம் வராவிட்டால் எழுந்து போய் தொலைக்காட்சி சேனல்களைத் திருப்புவேன். இரவு ஒன்றரை மணிக்கு தூர்தர்ஷனில் ஏழெட்டுப் பேர் அமர்ந்து, இந்தியில் கவிதை வாசித்துக் கொண்டு இருப்பார்கள். ‘நெருப்பு சுடுகிறது’ என்று முதல் வரி சொன்னதும் மீதிப் பேர், ‘வா வா’ என்பார்கள். ‘தண்ணீர் குளிர்கிறது’ என்பார் அடுத்த வரி. ‘வாவ்வாவா’ என்பார்கள். ‘காற்று வீசுகிறது’ என்பார் மூன்றவது வரி. ‘வாரேவ்வா, அரேவ்வா!’ என்பார்கள். தொலைக்காட்சிகளில், தமிழ் சேனல்களில் எவர் பண்டம் பலகாரம் செய்துகாட்டினாலும், ருசி பார்த்துச் சொல்பவர், இரு விரல்களால் கருவண்டு ஒன்றினைத் தூக்குவது போல் தொட்டும் தொடாமலும் ஒரு விள்ளல் எடுத்து, உதட்டுச் சாயம் கெடாமல் வாயினுள் இட்டதும் சொல்லும் முதல் வாய்ப்பாடு, ‘வாவ்’! இப்போது எல்லோருக்கும் இந்த புதுப் பேய் பிடித்திருக்கிறது. சங்கீதக் கச்சேரிகள், ‘பலே, சபாஷ், பேஷ்’ எல்லாம் படமெடுத்து ஆடுகின்றன. ‘ஆகா’ அழிந்துவிடும் போலிருக்கிறது. சினிமாக்கள் தமிழ் சமூகத்தினுள் குத்திச் செலுத்திக்கொண்டு இருப்பவை, ‘சூப்பர், மாம்ஸ், மச்சான்ஸ்.’ இப்போது வேகமாக இறக்குமதி ஆகிக்கொண்டு இருப்பது, ‘கூல்’. புதுசாகக் காப்பி அடிப்பவன் மேதாவி என்பது நமது விதி.
பேருந்து நிறுத்தங்களில் கான்வென்ட் குழந்தைகள் ஆங்கிலத்தில் பொரிவதை கார்ப்பரேஷன் பள்ளிக் குழந்தைகள் கூசி நின்று கவனிக்கின்றன. வியப்பதற்கோ, கூசிப்போவதற்கோ ஒன்றுமே இல்லை. அவர்கள் ஆங்கிலத்தில் பேசுவதைத் தமிழில் மொழிபெயர்த்தால் வரும் பொருள் கார்ப்பரேஷன் பள்ளி மாணவர் பேசுவதைவிட உயர்ந்ததாகவும் இல்லை.
‘தண்ணி இருக்கா?’ என்று ஆங்கிலத்தில் கேட்பது, தமிழில் கேட்பதைவிடப் பெருமை உடையதா என்ன?
ஆங்கிலத்தில், பிரெஞ்சில், இந்தியில் கற்பவர் இருக்கட்டும், தமிழில் கற்கும் குழந்தைகளுக்கு ழ, ளா, ல, உச்சரிப்புகளில் வேறுபாடே இல்லை. ‘பிறந்த உடன் நாக்கில் வசம்பு சுட்டுக் கருக்கித் தடவவில்லையா?’ என்பார்கள் அன்று தமிழாசிரியர்கள், உச்சரிப்புப் பிழை உள்ளவர்களைப் பார்த்து. இன்று தமிழாசிரியர்களே பலர் சரியான உச்சரிப்பு உடையவர்களாக இல்லை.
சுத்தமான இலக்கணத் தமிழ் பேசுபவர்களைக் கிண்டல் செய்யும் கதையும் உண்டு நம்மிடம். கடை முன் நின்று சுத்தமாக ஒருவர் கேட்கிறார்.
”வாழைப்பழம் என்ன விலை?”
”காயிக்கு ரெண்டு.” காயி என்பது காசு என்பதன் வழக்கு.
”காசுக்கு மூன்று வாழைப்பழம் கிடைக்குமா?”
”காயிக்கு மூணா, செரி, காயி எடும்.”
”மூன்று வாழைப்பழம் கொடுங்கள்” என்று காசு கொடுத்தார்.
வியாபாரம் தெரிந்த கடைக்காரர், தொங்கும் வாழைக் குலையின் சிறிய காய்கள் இருக்கும் மேற் சீப்பில் இருந்து மூன்று பழங்களைப் பிய்த்து எடுக்கப்போனார். இலக்கணச் சுத்தமாகப் பேசுபவர் பதறிப்போய், ”எலே, மேல இருந்து பிய்யாத, கீல இருந்து பிய்யி” என்றதாகக் கதை ஓடும்.
நாகர்கோவிலில் வாழைப்பழம் என்று தொடங்கும் தலைச்சுமட்டு வியாபாரியின் வியாபார விளி, வழி நெடுக ‘வாளப்பளம்’ ஆகி, ‘வாலப்பலம்’ ஆகிச் சென்னையில் ‘வாயப்பயம்’ என்பார்கள். கிராமத்துப் பாட்டையா, சிறுவருக்குத் தரும் மொழிப் பயிற்சி, ‘ஆரல்வாய்மொழிக் கோட்டையிலே ஆழாக்கு உழக்கு நெல்லுக்கு ஏழு வாழைப்பழம்’ எனும் சொற்றொடர். நான் ஆரம்பப் பள்ளியில் படிக்கும்போது, கேட்டு எழுதும் பயிற்சியின்போது, ஆசிரியர் சொல்வார், ‘ஊழிக்காற்று, பாழும் கிணறு, கூழைக் குடி’ என்று. உடனே மாணவன் ஒருவன் எழுந்து நின்று கேட்பான், ‘ஐயா, பழத்து ழ வா, குளத்து ள வா’ என்று. அதாவது ஊழி எனும் சொல்லில் எழுத வேண்டியது பழத்தில் வருகின்ற மகர ழ-வா அல்லது குளத்தில் வருகின்ற ள- வா என்பது ஐயம்.
இன்று மக்கள் தொலைக்காட்சி தவிர, மற்ற தொலைக்காட்சி அறிவிப்பாளர் பலருக்கும் ழ, ள, ல பேதமில்லாத சமத்துவம். அதை ஒரு சீலமாகக்கொண்டும் ஒழுகுகிறார்கள். அறிவிப்பாளர் அங்ஙனம் ஆயின், தொடர் நாயகிகளின் உச்சரிப்புக் கேட்க இன்பத் தேன் வந்து பாயும் காதுகளில். தாய் எட்டு அடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாய்தல் வேண்டாவா?
தமிழ்மொழியால் வயிறு வளர்க்கும் பல மேடைப் பேச்சாளர்களுக்கும் இந்தப் பேதம் தெரியாது. ‘ற’வும் ‘ர’வும் ஐயம் திரிபு அற ஒன்றேதான்.
கன்னித் தமிழ்நாட்டின் தங்கத் தமிழ் சுவரொட்டி வாசகங்கள் பலசமயம் மூலக்கடுப்பு ஏற்படுத்தும். ‘அன்னைத் தமிளகத்தின் அடலேரே’ என்றொரு வாசகம் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த தென் மதுரையில் கண்டேன், கண் குளிர. ‘அரத்தின் நாயகனே, வீரத் தமிள் மரவனே’ என்பதெல்லாம் சர்வ சாதாரணம் இப்போது.
அதிகாலையில் சேனலைத் திருப்பினால், கணவனும் மனைவியுமாக இரண்டு பேர், இறைச் சேவையில் மன்றாடி வேண்டுகிறார்கள். ‘இறங்கும் ஐயா, இறங்கி வாரும் ஐயா’ என்று. ‘அதிலென்ன?’ என நீங்கள் கேட்கலாம். ஆனால் ‘இறங்கி’ என்பதைப் பத்து மடங்கு அழுத்தம் கொடுத்து, ‘இர்ர்ர்ர்ரங்கி’ என மன்றாடு கிறார்கள். ‘நன்ர்ர்ர்ரி ஐயா, நன்ர்ர்ர்ர்ரி ஐயா, நன்ர்ர்ர்ர்ரி ஐயா!’ என்கிறார்கள். நகரம் சூடேறிப் பொரிந்து கனல் தெறிக்கிறது. நமக்கே இப்படி எனில் இறைவன் என்னத்துக்கு ஆவான்?
செய்யுளில் புலவர் பலரும் இலக்கணம் வழுவாமல் இருக்க, நீட்டல் குறுக்கல் விகாரங்களைக் கையாள்வார்கள். ஒரு பாடலில் கம்பன், நாராயணன் என்பதைக் குறுக்கி, நராயணன் எனக் கையாண்டதைக் கவி காளமேகம் கேலி செய்கிறான்.
‘நாராயணனை நராயணன் என்றே கம்பன்
ஓராமல் சொன்ன உறுதியால் – நேராக
வார் என்றால் வர்என்பேன் வாள்என்றால் வள்என்பேன்
நார் என்றால் நர்என்பேன் நான்!’
கம்பனுக்கே இத்தனை கேள்வி என்றால், தற்காலத் தமிழைப் பிழையாக உச்சரிப்பவர்களை என்னவெல்லாம் கேட்க வேண்டும்?
இந்த வேளையில், மொழியை வெறும் ஊடகம் என்பார் சொல் ஒன்று விழுகிறது காதில். ழ, ள, ல என்பனவற்றையும் ற, ர என்பனவற்றையும் ன,ண என்பனவற்றையும் மாற்றிச் சொன்னால் என்ன கெட்டுவிடும் என்று. எளிதான ஒரு மறு கேள்வி.. தோசை, ஊத்தப்பம், ரோஸ்ட், இட்லி, இடியாப்பம், பணியாரம், புட்டு, கொழுக்கட்டை, ஆப்பம் எல்லாம் ஒன்றா ஐயா?
மேலும் கேட்பவர் எவரும் B,P,F,Ph யாவற்றுக்கும் ஒரே ஒலியை உச்சரிப்பதில்லை. c,ch,s,sh,z எல்லாம் ஒன்றே போல் பேசுவதில்லை. ஏனெனில் அது ஆங்கிலம், மேன் மக்கள் மொழி. ஆங்கில உச்சரிப்பில் பிழை எனில் அது எத்தனைக் கேவலம்? ஆனால், தமிழில் உச்சரிக்கலாம் எதையும் எதுவாகவும். நாணத் தேவைஇல்லை. தமிழ் எனில் அது ஒரு ஊடகம் மட்டும்தானே. மேலும், நாணமின்மையே நாகரிகமாகவும் கொள்ளப்படும் இங்கு. உச்சரிப்பதற்கே இந்த முக்கல் முனகல் எனில், தமிழில் சந்தி, சாரியை, அளபெடை, விகாரம் என்று எத்தனை உண்டு? அவற்றை என் செய?
தமிழில் சினிமாவுக்குப் பெயர் வைத்தால் வரிவிலக்கு அளிப்பது போன்று, பிழையற உச்சரிக்கும் தொலைக்காட்சி அறிவிப்பாளருக்கு வருமான வரி, சேவை வரி, விற்பனை வரி என விலக்குகள் அளித்துப் பார்க்கலாம் !!

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s