‘தீதும் நன்றும்” (6) பயங்கரவாதம்

‘தீதும் நன்றும் (6)  பயங்கரவாதம்

திர்காலத்தில் நம் வீட்டை விட்டு வெளியே இறங்கும் முன், உடனடியாகச் செய்துவைக்க வேண்டிய வேலைகள் சில உண்டு. தொலைதூரப் பயணம் என்பதல்ல. சாலைக்குப் போய் பால், செய்தித்தாள், பற்பொடி வாங்கி வரப் போனாலும்கூட. அசம்பாவிதமாக, அகாலமாக மரணமுறும் வாய்ப்பு மிக அதிகம். எனவே, செய்துவைக்க வேண்டியவற்றை முன்கூட்டியே திட்டமிட்டுச் செய்துவிடுவது நல்லது. முதலில் கொடுத்துத் தீர்க்கவேண்டிய கடன்கள், கிரெடிட் கார்டு பில்கள், வசூலிக்க வேண்டிய கடன்கள், வங்கிக் கணக்குகளுக்கான, பங்குகளுக்கான வாரிசு அறிக்கை, பரம்பரையாக வந்த அல்லது தாமே தேடிய தாவர சங்கம சொத்துக்களுக்கான வாரிசு செட்டில்மென்ட் அல்லது உயில் எழுதி பத்திரப் பதிவும். இரவல் வாங்கிவைத்திருக்கும் புத்தகங்கள், டி.வி.டி-க்கள் திரும்பக் கொடுத்தல், புத்தகம், இசைக் குறுந்தகடுகள், சினிமா டி.வி.டி-க்கள் சேகரிப்பவர்களாக இருந்தால், தமக்கு அவசியம் இல்லாதவற்றைப் பிரித்து, வேண்டாதவற்றைத் தகுதியானவருக்கு வழங்கிவிடுதல். அதுபோலவே ஆடைகளும்.

பெருஞ்செல்வம் சேர்த்துவைத்திருப்போர் தனக்குப் போக மிச்சத்தைத் தானம் செய்துவிடுவது உகந்தது. மனம் வராதுதான். எவ்வளவு பாடுபட்டு, சிரமப்பட்டு, நினைத்ததை வாங்கித் தின்னவோ, உடுத்தவோ, அணியவோ செய்யாமல் சேகரித்த பணம்? ஆனால், வேறு வழி என்ன? பழந்தமிழ் சங்கப் பாடல் கூறுகிறது, ‘செல்வத்துப் பயனே ஈதல், துய்ப்பேம் எனினே தப்புன பலவே!’ ஆம்! துய்க்கலாம் என்று எண்ணிக் கணக்குப் பார்த்தால் பலவும் தப்பிப்போகும். நின்று நினைத்து நெறிப்படுத்துவதற்கு நேரமற்றுப்போகும்.

உங்களை அச்சுறுத்தவோ, கலவரப்படுத்தவோ, பூச்சாண்டி காட்டவோ இதை நான் எழுதவில்லை, சக இந்தியக் குடிமக்களே!

அதிகாலை 5 மணிக்குப் பால் வாங்க, ரசம் கூட்டி வைத்துவிட்டுத் தக்காளி வாங்க, மழலையரைப் பள்ளி வாகனத்தில் ஏற்றிவிட, மேலுக்குக் கொதுகொதுவென்றிருக்கையில் மருத்துவரைக் காண, அடுத்த தெருவில் உடல்நலம் கெட்டிருக்கும் உறவினரைப் பார்க்கப்போகும்போது, பேருந்துக்குக் காத்திருக்கையில், மளிகைச் சாமான்கள் வாங்குகையில், சாலையோரம் ஒதுங்கி நின்று டி.வி. கடையில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் கடைசி ஓவர் காணும்போது, போண்டா தின்று சாயா குடிக்கையில், எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் குண்டு வெடித்து நாம் கை வேறு, கால் வேறு, தலை வேறு, குடல் வேறாகத் தெறித்துப் போகலாம்.

நமக்கு இது நடக்காது, நம்மூரில் நிகழாது, எத்தனை நல்லவர் நாம் என்னும் குருட்டுத் தைரியத்தில் எவராலும் இருக்க இயலாது.

இந்தக் கட்டுரையை நீங்கள் வாசிக்கும்போது, இதை எழுதியவன் உடல் சிதறி இறந்துபோன செய்தியைக் கேள்விப்படவும் சாத்தியம் உண்டு. ஆகவே, யாவரும் முன்னெச்சரிக்கை உணர்வுடன் தயாராக இருங்கள். தின்பண்டங்கள் 100 கிராம் வாங்கினால் போதும். காய்கறிகள் அந்த நேரத்துச் சமையலுக்கு வாங்கினால் போதும். குளிர்பெட்டியில் பால் இருப்புவைக்க வேண்டிய அவசியம் இல்லை. தீவிரமாகச் சொன்னால் அலுவலகம், கல்லூரி, பள்ளி, மார்க்கெட் சென்றவர் வீடு திரும்பிய பின் பெண்கள் உலையில் அரிசி போட்டால் போதும். யாரும் சதமில்லை. எவரும் நிச்சயமில்லை.

நெருநல் உளன்ஒருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.

உங்கள் பக்கத்தில் நின்றிருக்கும் சைக்கிள், பக்கத்தில் நின்றிருப்பவர் வைத்திருக்கும் சாப்பாட்டுப் பாத்திரம், பழ வண்டி, ஸ்கூட்டர், கார், லாரி எதுவும் உயிருக்கான கூற்றுவனாக இருக்க இயலும்.

நான் மிகைப்படுத்தாமல் உண்மையை எழுதுகிறவன். இந்த நாட்டின் ஏழை எளிய மக்களுக்கு எதிராக, அன்றாடங்காய்ச்சிகளுக்கு எதிராகப் போர் ஒன்று நடக்கிறது. நமது எதிரி யாரென்று நமக்குத் தெரியாது. என்ன காரணத்துக்காக நாம் கொல்லப்படுகிறோம் என்றும் தெரியாது. உலக வரைபடத்தில் நம்மைக் கொல்லக் காத்திருப்பவர் ஒளிந்திருக்கும் நாட்டை நம்மால் விரல்வைத்துக் காட்ட இயலாது. நாம் எதற்காக இங்ஙனம் கொல்லப்பட வேண்டும் என்ற கேள்விக்கும் விடை கிடையாது.

நமது ஊரில், பந்து மித்திரர் புடை சூழ, தாரை தப்பட்டையுடன் மரச் சோலைகளின் நடுவே இருக்கும் இடுகாட்டில் அல்லது சுடுகாட்டில், நகரம் எனில் மின்மயானத்தில் நமது நல்லடக்கம் நடைபெறும் என்று நம்மில் பலரும் நினைத்திருப்போம். எல்லாம் பொய்யாய், பழங்கதையாய், கற்பனையாய் போய்விடும் நண்பர்களே!

ஆம், நண்பர்களே… முச்சந்தியில், பேருந்து நிறுத்தத்தில், காய்கறிச் சந்தையில், ஓடும் ரயிலில், மருத்துவமனையில், ரயில் நிலையத்தில், சினிமா கொட்டகையில், கோயிலில், மசூதியில், சர்ச்சில் நம் உடல் சிதறி மரணமுறும் வாய்ப்பு அதிகம். அதீதமானதோர் கற்பனை இதுவென்று உமக்குத் தோன்றக்கூடும். காண்க புள்ளிவிவரம். இந்த ஆண்டு முடிவதற்கு இன்னும் ஒரு மாதம் இருக்கிறது எனும் நினைப்பே திகில் கூட்டுகிறது.

காலையில் எழுந்து, குளித்து, அலுவலகம் சென்று திரும்புகையில், சொத்தை இல்லாத கத்தரிக்காய் பொறுக்கி சமைத்துச் சாப்பிட்டு, சீரியல் பார்த்து உறங்கப் போகும் சாதாரணர்களாகிய நாம் எதற்குச் சாக வேண்டும்? குண்டடிபட்டு அல்லது குண்டு வெடித்து.

ஒவ்வொரு குண்டுவெடிப்பு இரவிலும் டி.வி-யில் வழக்கமாகச் சில தேசத் தலைவர்கள் முகங்களைப் பார்க்கிறோம். குளித்து, சாயம் அடித்த தலையில் கிரீம் தடவித் தலைவாரி, முகத்துக்கு ஒப்பனைகள் தரித்து, திருத்தமான தேசத் தலைவர் உடை அணிந்து, செயற்கையான சோகம் பூண்ட உயிரற்ற முகங்கள். விளம்பர வாசகங்கள் போல திருப்பித் திருப்பிச் சொல்கிறார்கள். ‘குற்றவாளிகளைக் கண்டுபிடித்துத் தண்டிப்போம். கடுமையான நடவடிக்கை எடுப்போம். எதிர்காலத்தில் இதுபோன்ற தீவிரவாதச் செயல்கள் நடக்க விட மாட்டோம்.’

மறு நாள், தனி சார்டட் விமானத்தில் பறந்து வந்து, நட்சத்திர விடுதியில் இளைப்பாறி, குண்டு வெடித்த இடத்தை, தடத்தை, குண்டு குழிகளை, கருகல்களை, உடைசல்களை உற்றுஉற்றுப் பார்த்து, கலக்கமுற்றவர் போல் சேனல்களுக்கு அபிநயித்து, நைந்து தொய்ந்து போன சினிமா வசனம் பேசுகிறார்கள். ‘எமது இதயம் உடைந்து நொறுங்கிவிட்டது, தாங்கொணாத் துயரம், ஆறுதல் கூறச் சொற்கள் இல்லை, செத்தவன் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறோம்’ என்றெல்லாம்.

வெள்ளையும் சொள்ளையுமாக ஊடே ஒருவர் புகுந்து, பால் வடியும் முகம் ஒன்று பொருத்திக்கொண்டு, ஹார்வர்ட் உச்சரிப்பில் எட்டு சதமானம், ஒன்பது சதமானம் என்கிறார். வளர்ச்சி விகிதத்தின் பலன்கள் நுகர, நாம் உயிருடன் இருக்க வேண்டாமா? முதன் மந்திரிகள், போன உயிருக்குப் பிணையாக 2 லட்சம், 3 லட்சம் என்கிறார்கள். ஏழைப் பிணத்தின் விலை அது. அவர் தம் மக்களின் உயிரின் விலை என்ன வைப்பார்கள்?

நாமோ சமாதான நல்வாழ்வு எனும் சூரியனை,

அரவம் கரந்ததோ அச்சுமரம் இற்று
புரவி கயிறுருவிப் போச்சோ – இரவிதான்
செத்தானோ வேறு வழிச் சென்றானோ பேதை எனக்கு
எத்தால் விடியும் இரா?’

என்று காத்திருக்கிறோம். நெடிய, சலிப்பூட்டும், மரணம் வரையிலான விடியாத காத்திருப்பு!

இந்தியாவில் எங்கு குண்டு வெடித்தாலும், மறு நாள் பயணம் போகும் பயணிகள் மூட்டை முடிச்சுக்களுடன் நீண்ட வரிசையில் பாதுகாப்புப் பரிசோதனைகளுக்காக நிறுத்தப்படுவார்கள். டி.வி. சேனல், செய்தித்தாள் பார்க்காவிட்டாலும்கூட, காவலர் தலைகளைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம், எங்கோ குண்டு வெடித்திருக்கிறது என.

‘ஓடுகிற நாய்க்கு ஒரு முழம் கூட்டி முன்னால் எறிய வேண்டும் கல்லை’ என்பது பழமொழி. நமது புலனாய்வு, காவல் துறை எல்லாம் தும்பைவிட்டு வாலைத் தொடர்ந்து ஓடிக் களைத்து, மூச்சு வாங்கி, வெறுங்கையுடன் இளைப்பாறுகிறார்கள். குண்டு வெடித்து சில நாட்கள் ஆனால், பின்பு மறு குண்டுவெடிப்பு வரை இயல்பு வாழ்க்கை. யாவும் நன்றே நடக்கும்.

அடையாளம் தெரியாத பிணமாக, முகம் கரிந்து, மூளை சிதறிச் சாவதைத் தவிர, நமக்கு வேறென்ன கதி?

குண்டு வெடித்த அன்றும் மறு நாளும் செய்தி வாசித்து, வீடியோ காட்சிகளைத் திரும்பத் திரும்பக் காட்டி, டெலிகான்ஃபரன்ஸில் பிரபலங்களின் கருத்துக் கேட்டு… ஆயிற்று, பொழுது போயிற்று.

தலைவர்களுக்கோ வெளிநாட்டுப் பயணங்கள், வெளிநாட்டுப் பிரமுகர் வருகைகள், பண்டிகைக் கொண்டாட்டங்கள், கட்சிப் பேரணிகள், தேர்தல் பிரசாரங்கள், மறு குண்டு வெடிப்பு வரை காத்திருக்கலாம். இரங்கல் செய்திகள் சொல்ல சபாரியும், நெக்கோட்டும், ஓவர்கோட்டும், குர்தா பைஜாமாவும் வேட்டி-சட்டையும் துவைத்து மடித்து இஸ்திரி போட்டு வைத்துக்கொள்ளலாம்.

அவர்களுக்கோ, அவர் தம் மனைவி மக்களுக்கோ, வாரிசுகளுக்கோ நகரப் பேருந்துகளின், ரயில்களின், சினிமா கொட்டகைகளின், சந்தைகளின், கடைத் தெருக்களின் பயன்பாடு இல்லை. அப்படியே போனாலும் குண்டு துளைக்காத கார், கரும்பூனைப் படை, கூர்க்கா வேலை செய்ய உள்ளூர் காவல், பின் தொடரும் ஆம்புலன்ஸ், நடமாடும் மருத்துவமனை, தீயணைப்பு வண்டி, எஸ்கார்ட் ஜீப் எல்லாம் உண்டு. எவருக்கும் எதுவும் நிகழ்வதில்லை, நிகழாது.

ஆனால், நாம் சாமானியர்கள். நமது கதை அவ்வாறல்ல. ஒன்றில் எப்பாடுபட்டேனும் ஆளுபவர்கள் குண்டுவெடிப்பைத் தடுத்து நிறுத்த வேண்டும். அல்லது வீட்டுக்கு ஓர் இலவச டி.வி. திட்டம் போல, குடும்பத்துக்கு ஒரு கரும்பூனைக் காவல் படை நியமிக்க வேண்டும். தலைவர் உயிர் அரியது, பெரியது, வலியது, விலைமதிப்பற்றதுதான். ஆனால், எமது உயிர் இலவசமா?

நேற்றெவரோ டி.வி-யில் சொன்னார்கள். மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் பற்றி, தினத்துக்கு 25 ஆயிரம் வாடகை கொடுத்துத் தங்கும் தரத்திலுள்ள பெரும் பணக்காரர், அதிகாரிகள், சினிமாக்காரர்கள், அரசியல்வாதிகள், கிரிக்கெட் வீரர்கள், வெளி நாட்டார் தங்கும் ஓட்டல்களாக இருப்பதால் மட்டுமே இத்தனை பதற்றம். இதுவே தாராவிச் சேரியில் 100 பேர் செத்திருந்தால் வழக்கமான ஒரு நாள் மேளாவாகப் போயிருக்கும் என்று. அந்தத் திசையில் சிந்திக்க நான் விரும்பவில்லை, சிந்திக்க இடம் இருந்தாலும்.

ஆனால், தாஜ் ஓட்டல், ஓபராய், டிரைடன்ட் ஓட்டல்களில் நடந்த ஆக்கிரமிப்புகள் ஒன்றைத் தெளிவுபடுத்துகின்றன. எதிர்காலத்தில் பணம், பதவி, புகழ், அந்தஸ்து, செல்வாக்கு எதுவும் பாதுகாப்பு அரணாக எவருக்கும் இருக்க இயலாது.

எனவே, எமது தேசத்தைக் கட்டிக்காத்து, சேவை செய்வதற்கென்றே அவதரித்த, இறையருளால் அனுப்பப்பட்ட தேவதூதர்களே, மக்களின் ரட்சகர்களே, வாக்குகள் பொறுக்குவதை மறந்து, சற்றே கண் விழியுங்கள். நமக்கு ஏதும் நேராது என்றிருந்தால் ஏமாந்து போவீர்கள். செல்வம் சேர்த்தது போதும், பதவி தேடியது போதும், சுகம் நாடியது போதும், உங்களை நம்பி இருக்கும் ஏமாந்த முட்டாள் இந்தியக் குடிமக்கள் பற்றியும் சற்றுக் கவலைப்படுங்கள்.

அல்லது மனைவி, மக்கள், பேரர்கள் சகிதம் வேறெங்காவது நன்மக்கள், அறிவாளிகள், வீரர்கள், நீதிமான்கள் ஆளும் நாட்டுக்குத் தப்பித்துக் குடிபெயர்ந்து போய்விடுங்கள். சுவிஸ் வங்கிகளில் பூசணம் பூத்துக்கிடக்கும் பணம் உங்கள் ஏழேழு தலைமுறைக்கும் போதுமானதாக இருக்கும்.

நாங்கள் வாழ்கிறோம் அல்லது மாள்கிறோம். அது எங்கள் பாடு! ஜெய்ஹிந்த்!

About S i Sulthan

தொகுப்பு
This entry was posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s