“தீதும் நன்றும்” (9) தாய் மனம்
கோயம்புத்தூரில் வாழ்கின்ற இந்த இருபது ஆண்டுகளில், அலுவல் நிமித்தமாக முப்பது முறைக்கும் குறையாமல் காரைக்குடி போனதுண்டு. அலைச்சலில் ஒரு சுகம் இருந்ததுபோல, அலுவலக வேலைகளைச் சுளுவாக முடிக்கும் திறனும் இருந்தது. கிராமங்களில் விறகு கீறுபவர்களைக் கவனித்தால் தெரியும், சிலர் மொத்த பலத்தையும் செலுத்தி மாங்குமாங்கென்று கோடரி போடுவார்கள். சிலர் ஆசாக வீசுவதில் விறகுச் சிறாக்கள் பாளம் பாளமாகத் தெறித்து விழும். இன்றும் என்னால் உறுதியாகச் சொல்ல முடிகிற விஷயம்… மற்றொரு சேல்ஸ்மேன் காலை எட்டு மணி தொடங்கி இரவு எட்டு மணி வரைக்கும் சந்திக்கும் வாடிக்கையாளர்களை, என்னால் மாலை நாலு மணிக்குள் பார்த்து முடித்துவிட முடியும்.
‘சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம், வைத்ததொரு கல்வி மனப்பழக்கம். நித்தம் நடையும் நடைப்பழக்கம்’ என்கிறார் தமிழ் மூதாட்டி.
மாலை நான்கு மணிக்குள் வேலையை முடித்த பின் தங்கும் விடுதிக்கு வந்து, குளித்து உடை மாற்றினால் அன்று மிச்சமிருக்கும் நேரம் எனது தனியுடைமை. எவராலும் கேள்வி கேட்க இயலாது!
காரைக்குடியும் செட்டிநாடும் நான் விரும்பிப் பயணமாகக் காரணங்கள் உண்டு. மனகாவலம், அதிரசம், சீப்புச் சீடை எனும் செட்டிநாட்டு எண்ணெய்ப் பலகாரங்கள். தேடிக் கண்டடைந்து வைத்திருந்த மலிவான, சுவையான, சூடான, பல்வகை இராச் சிற்றுண்டி மெஸ்கள். தனிமையும், இனிமையும், அழகும், ஆசுவாசமும் தருகின்ற வரலாற்றுச் சிறப்புகள் கொண்ட பிள்ளையார்பட்டி, வைரவன்பட்டி, பட்டமங்கலம், திருக்கோட்டியூர், திருமயம், கர்னாடக இசை மேதை ராமானுஜ ஐயங்கார் பிறந்த அரியக்குடி எனும் ஊர்களின் கோயில்கள். சற்றுச் சிரமம் பாராமல் தேவகோட்டை வழியாகப் பயணமானால் தென்படும் திருவாடானை. செந்தாமரை பரந்து பூத்துக் கிடக்கிற ஊருணிகள். ஊருணி என்றதும் நினைவுக்கு வருவது, ‘ஊருணி நீர் நிறைந்து அற்றே உலகு அவாம் பேரறிவாளன் திரு’ எனும் திருக்குறள்.
பள்ளத்தூர் அல்லது கானாடு காத்தானில் இருந்து செட்டிநாடு நூற்பாலைக்கு காட்டு வழி தனில் தனித்து நடந்து போகும்போது கலகலத்துச் சிலம்பும் மைனாக்கள், கிளிகள். மூன்று கிலோ மீட்டர் நடையின் அலுப்பறுக்கும் செறிந்த மரங்கள், புதர்கள், பாம்பு, ஓணான், அரணை, காட்டுப் பல்லி. வெறுப்பற்றுப் போனால் எல்லாம் சுகானுபவம்.
அரண்மனை சிறுவயல், ஆத்தங்குடி, சாக்கோட்டை, ராய்புரம் எனப் பின் மாலையில்சாவ காசமாக அலைகையில் மௌனம் காத்து நிற்கும் அரண்மனை போன்ற வீடுகளின் பிரிவு ஆற்றாத சோகம். அந்த மௌனத்தை எவ்வகையிலும் குலைக்காத வயதான ஆச்சிகள். நிர் வாகம், பொருள் பொதிந்த கேலியுடன் ஒருமுறை கேட்டது, திரும்பத் திரும்ப சில ஊர்களுக்கு மட்டுமே ஏன் பயணப்படுகிறேன் என்று! இருபது வயதில் இட்லி தின்பவனும் எழுபது வயதில் பரோட்டா தின்பவனும் நாட்டில் விசித்திரப் பிராணிகள்தானே!
காரைக்குடியில் இருந்து அலுவல் முடிந்து திருச்சிராப்பள்ளிக்குப் பயணமாகிக் கொண்டு இருந்தேன். மறு நாள் உருமு தனலட்சுமி கல்லூரியில் தமிழ் மன்றத்தில் மாணவருடன் உரையாடல் இருந்தது. ஜெயகாந்தனின் நெருங்கிய நண்பரும் ‘ஜெய ஜெய சங்கர’ புத்தகப் பதிப்பாளரும் ஆன, மோதி ராஜகோபால் செயலாளராக இருக்கும் கல்லூரி அது. அழகும் பொலிவும் உள்ள திருக்கச்சியில் எழுந்தருளிய மணிவண்ணனின் பைந்நாகப் பாய்ப்படுக்கை போல, நானும் எனது பயணப் பாயைச் சுருட்டிக்கொண்டு காரைக்குடி- திருச்சிராப்பள்ளி விரைவுப் பேருந்து ஏறப் போனேன். புதுக்கோட்டை வழியாக உத்தேசமாக இரண்டரை மணி நேரப் பயணம்.
பேருந்தின் கடைசி வரிசையில் மூலை இருக்கைதான் வாய்த்தது எனக்கு. இரண்டரை மணி நேரக் குத்துப்பாட்டுத் துன்பத்தைத் தவிர்க்க, எனது போர்ட்டபிள் சி.டி. பிளேயரின் காதுப் பொத்தான்களைச் செருகிக்கொண்டேன். அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச்சிந்து ஒழுகிக்கொண்டு இருந்தது. என்றாலும், இண்டு இடுக்கு வழியாகக் குத்துப்பாட்டுக் கொடுமையும் பெருகிவழிந்தது.
பள்ளத்தூரில் பேருந்து இருக்கைகள் நிரம்பிவிட்டன. திருமயத்தில் ஏறிய பயணிகளுக்கு நிலைப் பயணமே வாய்த்தது. பின் பக்கம் ஆண்கள் நெருக்கிக்கொண்டு நின்றனர். எனது இடது பக்கம் திருமயம் கோட்டைச் சுவர் கடந்துகொண்டு இருந்தது. எனது வரிசைக்கு முந்திய வரிசையில், மூன்று பேர் அமரும் இடத்தில் இரண்டு பெண்கள் மட்டுமே அமர்ந்திருந்தனர். ஆண்கள் அதில் உட்கார மாட்டாதவர்கள். திருமயத்தில், பேருந்தின் முன் வாசலில் ஏறிய பெண்களில் ஒருத்தி, இடுப்பில் குழந்தையோடு நின்றிருந்தாள். புதுக்கோட்டை வரைக்கும் கைக்குழந்தையுடன் நின்றுகொண்டு போவது மிகவும் சிரமமானது. அந்தப் பெண் கவனிக்கும் விதத்தில் கைச் சைகை செய்து இருக்கை ஒன்று காலியாக உள்ளதைச் சுட்டிக்காட்டினேன். கூட்டத்தில் நகர்ந்து வரத் தலைப்பட்டாள். நெற்றியில் நீண்ட கோவிச் சாந்து, நூல் புடவை, தாலிக் கயிறும், ரப்பர் வளைகளும். காதில் மாத்திரம் பொன்னால் தோடுகள். திருமயம் பெருமாள் கோயிலுக்கு வந்து போகிறாளோ, அல்லது கோயில் சிப்பந்தியின் மனைவியானவள் அவசர வேலையாக புதுக்கோட்டை போகிறாளோ?
நான் கை காட்டியதைப் பார்த்து, மேலும் உட்கார இடம் கிடைக்கலாம் என்ற உறுதியில்… கறுப்பான, வயதான் மூதாட்டி ஒருத்தியும் தொடர்ந்து வந்தாள். எனது சோலியைப் பார்த்துக்கொண்டு இருக்காமல், ஒரு இடத்துக்கு இரண்டு பெண்களை மியூஸிக்கல் சேர் நிலைமைக்கு ஆளாக்கிவிட்டோமே என்று எனக்கு வருத்தமாக இருந்தது. பாதி வண்டி வரை நின்ற ஆண்களைத் தள்ளிக்கொண்டுதான் அந்த இடத்தை அடைய வேண்டும். இருவருமே நெருங்கி வந்த பிறகு, கைப்பிள்ளைக்காரி, பின் தொடரும் கிழவியைக் கவனித்தாள். இருக்கை ஒன்றுதான் காலி என்பதையும் கண்டாள். எப்படியும் முன்னுரிமை அவளுக்குத்தானே என்று நான் எண்ணிக்கொண்டேன். கைப்பிள்ளை மேலுமொரு சலுகை உரிமை. ஆனால், நான் எதிர்பாராமல், இடம் வந்து சேர்ந்ததும், கைப்பிள்ளைக்காரி வழிவிட்டு, அந்த இடத்தில் கிழவியை அமரச் சொன்னாள். கிழவி, அவள் பெருந்தன்மையை அங்கீகரித்துப் புன்னகைத்து, நடு இருக்கையில் அமர்ந்து, ஆசுவாசப்படுத்திய பிறகு, கைப்பிள்ளையை வாங்கக் கை நீட்டினாள். கைப்பிள்ளை அழாமல், சிணுங்காமல், நீட்டப்பட்ட கரங்களில் புகுந்து,
கிழவி மடிமீது சாவகாசமாக அமர்ந்து, தாயைக் கை நீட்டிச் சிரித்தது.
எனக்கு புதுமைப்பித்தனின் ‘காலனும் கிழவியும்’ஞாப கம் வந்தது. தொல் பாரதப் பண்பாட்டின் சிறியதொரு கீற்று வெளிச்சம் இதுவென வரியன்று மனதில் ஓடி யது.
‘கொக்குப் பறக்கும் புறா பறக்கும் குருவி பறக்கும் குயில் பறக்கும் நக்குப் பொறுக்கிகளும் பறப்பர் நானேன் பறப்பேன்’ என்றொரு பெருமிதப் பழம் பாடல் வரியும் உடன் ஓடியது.
பிள்ளையைக் கைமாற்றிக் கொடுத்த ஆசுவாசத்தில் நாமதாரிப் பெண் மேலாடை திருத்தினாள். மேலேஉயர்ந் திருந்த கைப்பிடிக் கம்பியைக் கைதூக்கிப் பிடிக்க நாணி, இருக்கையின் ஓரத்துக் கைப்பிடிக் கம்பி பற்றி ஆடி ஆடி நின்றாள்.
சுற்றிலும் ஆடவர் கூட்ட நெருக்கல். வேகமாகப் போகும் பேருந்து. சாலை, காசு வாங்கிக்கொண்டு போட்டதாகத் தெரியவில்லை. ஒப்பந்தக்காரர் எவரோ தர்ம சிந்தனையுடன் இலவசமாகப் போட்டிருப்பார் போலும். குண்டும் குழியுமாக இருந்தது என்பது பெருந்தன்மையான வாசகம். கிடங்குபோற் கிடந்த சாலைக்குழிகளைத் தூர்ப்பதைத் காட்டிலும் குழிகளுக்கு மேலே பாலம் கட்டுவது செலவு குறைவான காரியமாக இருக்கும். கோயில் முகப்புகளில் குழல் விளக்கொன்று பொருத்தி அதில் தன் பெயர், தகப்பனார் பெயர் எழுதும் தர்மவான்கள் நிறைந்த நாட்டில், இலவசமாகச் சாலைபோட்ட கொடை வள்ளல் தன் பெயர் எழுதிப் போட்டிருந்தால், அவர் குலம் தழைக்க, மனைவி மக்கள், மைத்துனிகள் செழிக்க, வாயாரச் சில வாழ்த்துக்கள் சொல்ல வசதியாக இருந்திருக்கும்.
பேருந்து புதியதுதான். பளபளவென்று இருந் தது. ஓட்டுநரும் இமயமலைச் சாரலில் வண்டி ஓட்டும் திறமைகொண்டவர்தான். ஆனால், முன் பின் ஆட்டமும், தள்ளலும், சாய்தலும் தவிர்க்க இயலவில்லை. குண்டுங்குழியுமான சாலையில் கடைசி இருக்கைக்காரன் குதிரைச் சவாரி தெரிந்தவனாக இருத்தல் நன்று. பேருந்தின் தகரம் எனது வலப் பக்க மண்டையைச் சேதம் செய்யாமலும் நான் பாதுகாக்க வேண்டி இருந்தது.
நின்றுகொண்டு இருந்த பெண்ணின் பாடு பெரும்பாடாக இருந்தது. வளைந்தும் சாய்ந்தும் சங்கடப்பட்டுக்கொண்டு இருந்தார். சற்றுக் கூர்ந்து கவனித்தபோது, பேருந்தின் குலுக்கல்களால் மட்டும் ஏற்பட்ட வசதிக் குறைவுகளின்பாற்பட்ட சங்கடங்கள் அல்ல அவை என்று அறிந்தேன். திரும்பிப் பார்ப்பதும், ஒதுங்க முனைவதும், பாதுகாப்பாகச் சாய எத்தனிப்பதுமாகப் பெரும் போராட்டமாகவே இருந்தது. மேலும், அவள் குண்டு துளைக்காத முழுக் கவசம் ஏதும் அணிந்திருக்கவும் இல்லை.
பாரதப் பண்பாடு பற்றி சற்று அவசரப்பட்டுப் பதிவு செய்துவிட்டேன் போலும். பண்டு, சொல்வார்கள் பெருமிதத்துடன் தமிழர் பண்பாடு எனச் சில. எதிரே வரும் பெண்களில் மிஞ்சி அணிந்திருந்தால், தாலி கண்ணில்பட்டால் மரியாதையுடன் ஒதுங்கிப்போவார்கள் ஆடவர் என. திருக்குறளோ,
‘பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோருக்கு
அறன் ஒன்றோ ஆன்ற ஒழுக்கு’ என்று பேசுகிறது.
ஆனால், இன்று பிறன்மனையைத் தன் மனைபோல் எண்ணும் தாளாளர் நிறைந்த நாடாக இருக்கிறது.
குழந்தை கிழவியிடமே இருக்கட்டும் என்று பெண் கள் கூட்டத்தின் பக்கம்போய் நிற்கவும் அவளால் ஆகாது. குழந்தை தேடலாம்… அழவும் செய்யலாம். குழந்தையை மடிமேல் இருத்திக்கொண்ட கிழவி, சற்றுக் கண்ணயரலாமா எனும் யோசனையில் இருந்தாள். இந்த சினிமாப் பாட்டு இரைச்சலிலும் உறக்கம்கொள்பவர் எத்தனை அலுப்புள்ள மனிதராக இருப்பார்கள்? உறங்கும் பெண்ணின் மடியிலிருக்கும் எந்தக் குழந்தையும் கை நழுவி விழுந்துவிடுவதில்லை.
தற்செயலாகக் கிழவி திரும்பி தவித்து நின்ற பெண் ணைப் பார்த்தார். பேராண்மையாளர்களின் வில் வளைக்கும் வித்தை தெரியாமல் இருப்பாளா? வேண்டும் என்றே செய்வதுதான். சிற்றின்பம் என்பது சிறுநெறியா? நகரப் பேருந்துகளில் பெண்கள் ஏறி இறங்க முன் பக்கம் என்றும், ஆண்கள் ஏறி இறங்க பின் பக்கம் என்றும் எழுதப்படாத விதி ஒன்று உண்டு. இன்று சில பேருந்துகளில் வாசல் பக்கம் எழுதியும் உள்ளனர். இருந்தாலும் கருதிக் கூட்டித்தான் ஆண்களில் சிலர் பேருந்தின் முன்பக்கம் ஏறுவார்கள். பின் பக்கமே ஏறினாலும், பேருந்தின் நெரிசலில் புகுந்து, பெண்கள் பக்கம் வந்து வாசனை பிடிக்க அல்லது வாய் பார்க்க நின்றுகொள்வார்கள். இறங்கும்போது மறவாமல் நெருக்கித் தள்ளிக்கொண்டு முன் வாசல் வழியாகவே இறங்குவார்கள். ஒரு முறை இறங்கிய அனுபவம் போதாது. முதியவர் பலரும் வயது ஒரு பாதுகாப்பு என்று கருதுகிறார்கள். இதில் வயதுப் பையன்கள் கண்ணியமானவர்களாகவும் வயதானவர்கள் பொறுக்கிகளாகவும் இருப்பது, காண அவமானமாகஇருக்கும். பல சமயங்களில் நடத்துநர்களின் ஆட்சேபங்களை நாம் கேட்க இயலும்.
உயிரினங்கள் யாவற்றினுள்ளும் ஆண்-பெண் கவர்ச்சி அல்லது ஈர்ப்பு என்பது இயல்பானதுதான். ஆனால், இனக் கவர்ச்சி என்பது வெறியல்ல; வக்கிரம் அல்ல. இனக் கவர்ச்சியைப் புரிந்துகொள்ளலாம்; வக்கிரத்துக்கு வைத்தியம் செய்ய வேண்டும்.
பல சமயம் எனக்குத் தோன்றும் பாதிக்கப்படும் பெண்களே வைத்தியத்துக்கு முன்பான முதலுதவியைத் தொடங்கலாம் என்று. ‘முள்பட்டாலும் முள்ளில் இட்டாலும் முதலில் கிழிவது துணிதான்’ எனும் வேதாந்தம் காலாவதியாகி வருகிறது.
நிலைமையைப் புரிந்துகொண்ட கிழவி, சற்றும் யோசிக்கவில்லை. குழந்தையை இருக்கையில் சாய்வாக அமர்த்திவிட்டு எழுந்தார். வெளியே வந்து நின்றிருந்த பெண்ணை அங்கு போய் அமரச் சொன்னார். நன்றி உணர்ச்சிபொங்கப் பார்த்த பெண், குழந்தையைத் தூக்கி மடிமேல் அமர்த்திக்கொண்டு தானும் உட்கார்ந்தார்.
பக்கக் கம்பியைப் பற்றியபடி நின்றவாறு கிழவியின் பயணம் தொடர்ந்தது. அவள் அடைக்கோழி அல்ல, நோய்க்கோழி அல்ல; சண்டைக் கோழி அல்ல, கறிக் கோழி அல்ல, ஆனால், தாய்க்கோழி. ‘முந்தானை விரிச்சு வச்சியா, முத்தத்தைப் பறிச்சு வச்சியா’ என குத்துப்பாட்டுக் குதூகலத்துடன் பேருந்து குலுங்கிக் குலுங்கி ஓடிக்கொண்டு இருந்தது.
கோழிக் காமம் என்றுரைப்பார் கிராமத்து மக்கள். மானுடர் காமம் அதனினும் வேகமும் வெறியும் கொண்டது போலும். அல்லது கம்பன் கூற்றில்,
‘இரக்கம் என்று ஒரு பொருள் இலாத நெஞ்சினர்
அரக்கர் என்று உளர் சிலர் அறத்தின் நீங்கினார்’
எனக் கொளலும் ஆகும்.
என்றாலும், தாய் மனம் என்று ஒன்று உண்டு இந்த மண்ணில். அதுவே தர்மத்தின் காவலன் எனவும் தோன்றுகிறது!