“தீதும் நன்றும்” (8) கொடை மடம்

“தீதும் நன்றும் (8)  கொடை மடம்

கொடை மடம் என்று ஒரு சொல் உண்டு தமிழில். சமகாலத் தமிழில் சொன்னால், மடத்தனமாகக் கொடுப்பவன் என்று பொருள். முல்லைக் கொடிக்கு ஏறி வந்த தேரை ஆதாரமாக நிறுத்தியவன் பறம்பு மலைப் பாரி. தோகை மயில் கார்மேகம் கண்டு தோகை விரித்து, பாதம் நகர்த்தி ஆடியபோது, மயில் குளிரில் நடுங்குகிறது என்று எண்ணி போர்வை போர்த்தியவன் பேகன். இவர்களைக் கொடை மடத்துக்கு எடுத்துக்காட்டாகச் சொல்வார்கள். அவர்கள் கடை ஏழு வள்ளல்களின் கூட்டத்தைச் சார்ந்தவர்கள். அந்த இனம் அழிந்துவிட்டது இன்று!

அடை மழையில் நனைந்து, குளிரில் நடுங்கி, பாரியின் மகளிரான அங்கவை, சங்கவை இருந்த குடிலுக்கு வந்தாள் ஒளவை. அவர்களிடமும் வேறு மாற்று உடை இல்லாத காரணத்தால், ஏற்கெனவே தந்தை பாரியையும் அவனது பறம்பு மலையையும் இழந்து நின்றதனால், தம்மிடம் இருந்த நீல நிறச் சிற்றாடையை ஒளவைக்கு ஈரத் துணிக்கு மாற்றாகப் பரிவுடன் கொடுத்தனர்.

ஒளவை பாடினாள்,

‘பாரி பறித்த பறியும் பழையனூர்க்
காரி கொடுத்த களைக்கொட்டும் – சேரமான்
வாராய் என அழைத்த வாய்மையும் இம்மூன்றும்
நீலச் சிற்றாடைக்கு நேர்!’

பாரி என்னும் ஆட்டு இடையன் ஒளவையின் ஆடையைப்பற்றி இழுத்து, தன்னைவிட்டுப் போகாமல் இரு என்று சொன்னான். பழையனூரில் வசித்த காரி எனும் குடியானவன் களை வெட்டும்போது ஒளவையிடம் களைக்கொட்டு கொடுத்து களைவெட்டச் சொன்னான். சேரமான் பெருமாள் நாயனார் கைலாயத்துக்குப் போனபோது ‘நீயும் உடன் வாராய்’ என அழைத்ததுவும் அன்பின் மிகுதியினால் ஆகும். ஆனால், அந்த அன்பு இந்த நீலச் சிற்றாடைக்கு இணையானது என்பது ஒளவையின் பாடல்.

இந்த பாரி மகளிர் அங்கவை, சங்கவை பெயரைக் கதாபாத்திரங்களுக்குச் சூட்டி, அவர்களுக்கு கறுப்புச் சாயம் பூசி, மேதமை மிகுந்த எழுத்தாளரும் தமிழாய்ந்த பேச்சாளரும் தமிழ் சினிமாவில் கேவலப்படுத்தினார்கள் என்பதை நினைவில் இருந்து அகற்ற இயலவில்லை.

பேகனின் போர்வையும், பாரி மகளிர் நீலச் சிற்றாடையும், குளிர் போக்கவும் நனைந்த துணி மாற்றவும் கொடுக்கப்பட்டவை. ஆனால், பிற்காலத்தில் போர்த்திக்கொள்ள சால்வை அணிவிப்பது சிறப்புச் செய்தலின் அடையாளமாக ஆயிற்று. அரசுகள், சிற்றரசுகள், ஜமீன்தார்கள், நிலப்பிரபுக்கள், தமிழ்ப் புலவருக்கும் கலைஞர்களுக்கும் சால்வை போர்த்தி அங்கீகரித்தனர்.

கோவை குண்டுவெடிப்பின்போது, காயம் பட்டவருக்கு ஆற்றிய தொண்டு காரணமாக, மாவட்ட ஆட்சித் தலைவரால் பாராட்டப்பெற்ற நண்பர், கோவை ரமேஷ். அவர் தனது நண்பருடன் டெல்லி போயிருந்தபோது, மரியாதை நிமித்தமாக அன்று நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தலைவர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களைச் சந்திக்க, அவரது இல்லம் போயிருந்தார். டெல்லியில் நல்ல குளிர்காலம் அது. இருவரிடமும் ஸ்வெட்டரோ, சால்வையோ இல்லை. ‘தமிழ் நாட்டுக்காரர்களுக்கு என்ன சொன்னாலும் தெரியாது’ எனக் கடிந்துகொண்டு, எழுந்து உள்ளே போய் இரண்டு சால்வைகளைக் கொணர்ந்து கொடுத்தாராம். பிறகும் இருவரும் மடி மீது சால்வைகளை வெறுமனே வைத்திருந்ததைப் பார்த்து, எழுந்து போய் போர்த்திவிட்டாராம் கனிவுடன். இதைக் கொடை மடம் என்றோ வாக்கு அரசியல் என்றோ கூறிவிட இயலுமா?

கிராமங்களில் ஊட்டு, கொடை, தேரோட்டம், திருக்கல்யாணம், தீமிதி, பூச்சாட்டு, நம்பிரான் விளையாட்டு முதலான திருவிழாக்கள் நடக்கும்போது, வில்லுப் பாட்டு, கரகாட்டம், நையாண்டி மேளக் கலைஞர்களுக்குக் கைத்தறித் துண்டுகள் அணிவிக்கப்படுவது உண்டு. பந்தல் அலங்காரம், மேடை அலங்காரம், மின்னொளி அலங்காரம், பூ அலங்காரம் செய்தவருக்கும் அந்தச் சிறப்பு செய்யப்படுவது உண்டு.

செய்தற்கரிய செய்தவரைக் கௌரவிக்கும் பொருட்டு பொன்னாடை போர்த்துதல் எனும் சடங்கு ஒன்று வந்தது. பொன்னாடை என்பது சரிகைப் பட்டாடை. பிறகு, அதையே ‘இந்தக் கைத்தறி ஆடையைப் பொன்னாடையாகப் போர்த்துகிறேன்’ என்றனர். வரவேற்பு, பிரிவு உபசாரம், பதவி உயர்வு எனப் பலவற்றுக்கும் பொன்னாடை போர்த்தினார்கள். தன் வீட்டுக் கல்யாணத்துக்கு வந்த மிக முக்கியமானவர்களைப் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.

நாஞ்சில் நாட்டில், புத்தேரி எனும் பெயருள்ள கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வாழ்ந்த ஊரில், யோகீசுவரர் எனும் யோகியின் குருபூஜையின்போது, அலங்காரத்துக்கு தெரு நீளத்துக்கு வாழைப் பழக்குலை கட்டுவார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் விளைந்த செந்துளுவன், வெள்ளைத் துளுவன், நெய்த்துளுவன், மட்டி, சிங்கன், ரச கதலி, நெய்க்கதலி, தேன்கதலி, பேயன், பாளையங்கோட்டன், ஏத்தன், பூவன், மோரீஸ் எனப் பல்வகை வாழைப் பழக்குலைகள். அவற்றுள் பெரிய நிரப்பான, தெறிப்பான வாழைக் குலைகளுக்கு கைத்தறித் துண்டு, துருக்கித் துவாலை, சரிகை நேரியது, இரட்டை வேட்டி எனக் கட்டுவது உண்டு. சாமிக்கு வெட்டுப்படப்போகும் வெள்ளாட்டுக் கிடாக்களுக்கும் பந்தயத்தில் வென்ற காளைகளுக்கும் இந்த மரியாதை உண்டு. பின்பு அது அரசியல், சமூக, மதத் தலைவர்களுக்கு அணிவிக்கும் சடங்காகவும் மாறியது.

1967 தேர்தலில் தோற்ற பின்பு, நாகர்கோவில் சேது லட்சுமிபாய் உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேச வந்த பெருந்தலைவர் காமராஜருக்கு மாலைகளும் துண்டுகளும் அணிவிக்க வந்த உள்ளூர் தலைவர்களிடம் கோபம்கொண்டு, எரிச்சலில் கழுத்திலும் தோளிலும் அணிவித்தவற்றை வேகமாக எடுத்துக் களைந்த காட்சி என் நினைவில் உண்டு.

வேறு சில அரசியல் தலைவர்கள் பேச ஆரம்பித்து, ‘பெரியோர்களே, தாய்மார்களே’ என்று ஆரம்பித்ததும் ஒரு கூட்டம் மேடையை நோக்கிப் படை எடுக்கும். கரகரத்த குரல்கள், ‘எட்டாவது வட்டக் கிளையின் சார்பாக, அண்ணன், இருகாலில் நின்றான், ஏப்ப மாமேரு, இரும்பொறையனுக்கு, இந்தப் பொன்னாடையை…’ என்று முப்பத்தேழு வட்டங்களும் பொறுப்புடன் போர்த்துவார்கள். தலைவரும் தீவட்டித் தடியன் போல, நின்று கொடுப்பார்.

சொல்லக் கேட்டிருக்கிறேன், கூட்டம் முடிந்ததும் அண்ணன் கேட்பாராம், ‘எண்பத்தேழு துண்டு விழுந் ததே, சரியா இருக்கா?’ என்று. மறைபொருள், துண்டு விழும்போதே தலைவர் எண்ணிவிடுவார் என்பது. அப்படிச் சேர்ந்த துண்டுகளை விற்றும் ஒரு காலத்தில் கட்சிக்கு நிதி சேர்த்தனர் என்பது குறிப்புப் பொருள்.

மற்றும் ஒரு செய்தி, சில தலைவர்கள் தங்களுக்கு அணிவிக்கப்பட்ட துண்டுகளை அநாதை இல்லங்களுக்கு அனுப்பிவிடுவார்கள் என்பது. இன்னும் ஒரு செய்தி, இன்று பெரும்பாலும் தலைவர்கள், ஆண்டுக்கு ஒருமுறை அவற்றைப் பண்டமாற்று செய்துகொள்கின்றனர் என்பது.

அவர்களுக்கு அணிவிக்கப்பட்ட துண்டு அதை என்னவும் செய்துகொள்கிறார்கள். இதில் இந்திய வாக்காளனுக்கு என்ன போச்சு?

மேளக்காரர்கள் தாளக்காரருக்கு அணிவிப்பது போன்று, சொற்பொழிவாளருக்கும் எழுத்தாளருக்கும் சால்வை அணிவிக்கப்படுவது உண்டு. சில சால்வைகளை மேஜை விரிப்பாக, சிலவற்றைத் திரைச்சீலையாகப் பயன்படுத்துவதும் உண்டு. ஆனால், துவைக்கும்போது சாயப்பட்டறைத் தண்ணீர் போல ஓடும். சிலதை ரோமம் என்று சொல்வார்கள். ஆனால், அது எந்த மிருகத்தின் ரோமமாகவும் இருக்காது. சில சால்வைகளை என்ன நூலில் செய்தது என்று கண்டுபிடிக்கவே முடியாது. கண்டுபிடிக்க வேண்டுமானால் சஸ்மீரா, அட்டிரா, பிட்ரா, சிட்ரா, எனும் இந்திய ஜவுளிக் கழகச் சோதனைச் சாலைகளுக்கு அனுப்ப வேண்டும்.

யாரோ ஒரு முறை சார்த்திய, இளம் பச்சை நிறமும் ஜிகினா ஒளிபரப்பும்கொண்ட சால்வையைப் போர்த்திக் கொண்டு, நீலகிரியில் இலக்கிய முகாம் ஒன்றுக்குப் போனபோது ஜெயமோகன் சொன்னார், ‘ஒரு நாகஸ்வரமும் கொண்டுவந்திருக்கலாம்’ என்று.

நமக்குப் போர்த்தப்படுகிற சால்வைகளை நண்பர்களுக்குக் கொடுத்தால், அவர்கள் மறந்தாற் போல வைத்துவிட்டுப் போய்விடுகிறார்கள். புத்தகம் எனிலோ, கொடுத்த புத்தகத்துடன் கொடுக்க உத்தேசிக்காத இன்னொரு முக்கியமான புத்தகத்தையும் சேர்த்து மறக்காமல் கொண்டுபோய்விடுகிறார்கள். வேண்டுமானால், பாராட்டு விழாக்களுக்குப் போகும்போது பாராட்டுப் பெறுகிற வருக்குப் போர்த்திவிட்டு வரலாம். பிறகு, அது அவர் கவலை.

தமிழ்நாட்டில் சில சமூகங்களில் வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், வெற்றிலை-பாக்கு, இவற்றுடன் ஒரு 80 செ.மீ. ஜாக்கெட் துண்டும் வைத்துக் கொடுப்பார்கள். அவை யாவும் தீராப் பயணமாகப் போய்க்கொண்டு இருக்கும். முப்பது ஆண்டுகளாக அவ்வாறே சுற்றிக்கொண்டு இருக்கும். புறப்பட்ட இடத்துக்கே திரும்பவும் வரும். எனக்கு அந்த ஜாக்கெட் துண்டுகளின் சோகம் தொண்டையை அடைக்கிறது. ஜெயகாந்தனின் ஒற்றைச் செருப்பின் இலக்கிய சோகமும் நினைவுக்கு வருகிறது.

சால்வைகளும் தற்போது சுற்றுலா தொடங்கியாயிற்று. 1974-ல் நான் நாஞ்சில்நாடனாக ஆவதற்கு முன்பு, ‘மோகமுள்’, ‘பாரதி’, ‘பெரியார்’ பட இயக்குநர் அவரும் அவ்வாறு ஆவதற்கு முன்பு, ஞான.ராஜசேகரனுடன் புனே தமிழ்ச் சங்கத்துக்குப் பேசப் போனேன். எனக்கு ஒரு சரிகைப் பட்டு சால்வை அணிவித்தனர். அந்தச் சமயம் என்னிடம் இருந்த உடுத்துக் குளிக்கும் துவர்த்து கிழிய ஆரம்பித்திருந்தது. புதிய துண்டு வாங்குவானேன் என்று, ஓராண்டுக் காலம் பொன்னாடை உடுத்துக் குளித்தேன். எப்படி அது தலை துவட்டியது என்று கேளாதீர்கள்.

கோவையில் எங்கள் ஊரைச் சார்ந்த அமைப்பு ஒன்று, என்னையும் இங்கு பிரபலமாக இருந்த மருத்துவரையும் கௌரவித்தது. மருத்துவருக்குப் போர்த்திய சால்வையின் விலையில் பாதி விலையில் எனக்குப் போர்த்தினார்கள் சால்வை. எழுத்தாள ருக்கு அரை விலையே அதிக விலை என்று நினைத்திருப்பார்கள் போலும்.

ஒரே மேடையில் இருக்கும் பத்துப் பேருள்ளும், ஆள் பார்த்து, தரம் பிரித்துச் சால்வைகள் போர்த்துவது உண்டு. சில கூட்டங்களில் போர்த்திய சால்வை, நாற்காலியின் முதுகில் கிடந்ததைக் கூட்டம் முடிந்ததும் காண இயலாது. வேற்றாள் திருடிப் போனாரோ, அமைப்பாளரே எடுத்துக்கொண்டாரோ அல்லது அந்தச் சால்வை மாயக் கம்பளத்தின் மாமன் மகளோ?

உள்ளூர் கூட்டங்களில் சால்வைகள் ரேஷன் கடைக்கு அதிசயமாக வரும் நாற்றமில்லா அரிசி போலத் தட்டுப்பாடாகி, என் தோள் சால்வையைப் பின்பக்கமாக வந்து உரிமையுடன் உருவி கடைசி ஆளுக்குப் போர்த்துவது உண்டு. சூடிய பூ சூடற்க என்பது எனது சமீபத்திய சிறுகதைத் தொகுப்பின் தலைப்பு.

கோவை விஜயா பதிப்பகத்து விழாக்களில் அண்ணாச்சி மு.வேலாயுதம் எனக்கு ஒரு சால்வை போர்த்துவார். மறக்காமல் அடுத்த நாள் அந்தச் சால்வையைக் கடையில் கொண்டு கொடுத்துவிட்டு, அதன் பெறுமதிக்கு எனக்குத் தேவையான புத்தகங்கள் எடுத்துக்கொள்ளும் சுதந்திரம் உண்டு.

மும்பையில் இருந்து மாற்றலாகி வந்து தரையிலும் கால் பாவாமல், தண்ணீரிலும் மிதக்காமல் நான் பரிசழிந்துகொண்டு இருந்தபோது, ஒரு விழாவில் மேற்சொன்ன பப்பள பளபள சால்வை போர்த்திய நண்பர் காதில் நான், ‘இதற்குப் பதில் பையில் ஐந்து கிலோ அரிசி போட்டுத் தந்திருக்கலாம்’ என்றேன்.

என் போன்ற ‘ராப்பாடிகள்’ அனைவர் சார்பிலும் சம்பந்தப்பட்ட புரவலர் அனைவருக்கும் கோரிக்கை ஒன்று உண்டு.

சால்வைகளுக்குப் பதிலாக ஒற்றை அல்லது இரட்டை வேட்டி, சாரம், கைலி எனப்படுகிற லுங்கி, தலை துவட்டும் துண்டு, இரண்டரை மீட்டர் வெள்ளையோ வண்ணமோ சட்டைத் துணி, துருக்கித் துவாலை, பயணம் போகும்போது உபயோகமாகும் போர்வை அல்லது ஓர் ஆள் படுக்கும் நீள வாட்டத்தில் பவானி ஜமுக்காளம், கரூர் பெட்ஷீட் எனப் போர்த்தலாம். கூட்டம் முடிந்து வீட்டுக்குப் போனாலும் ஒரு மரியாதை கிடைக்கும்.

பல நாள் பட்டினி கிடந்து, குப்பைக் கீரையை உப்புப் போடாமல் அவித்துத் தின்று, பல காதம் நடந்து மன்னர் அவையில் போய் சாகா வரம் பெற்ற பூவுக்குள் நின்று பொற்கொடி அருள்பெற்ற தமிழ்ச் செய்யுள் பாடி, யானை பரிசு பெற்றுத் திரும்பிய சங்கப் புலவனை எண்ணிப் பார்க்க, கைத்த சிரிப்பொன்று கிளர்ந்து பெருகுகிறது!

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to “தீதும் நன்றும்” (8) கொடை மடம்

  1. t.parameswari சொல்கிறார்:

    நாஞ்சில் நாடனின் எழுத்துக்களை எத்தனை முறையும் படிக்கலாம். அத்தனை முறையும் புதிது புதிதாய் வர்ண ஜாலம் காட்டும். யதார்த்தத்தை நாம் விரும்பி உணரும் வகையில் பதிவார். மண்ணில் புதைந்திருக்கும் வேர்களை நோக்கி நம்மை வழிநடத்துபவர்.
    அருமையான பணி. தமிழின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரான நாஞ்சில் நாடன் அவர்களின் எழுத்துகளை இன்டர்-நெட்டில் பலரும் படிக்க வகை செய்தமைக்கு நன்றியும், வாழ்த்துகளும்.

    அன்புடன்

    தி. பரமேசுவா¢

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s