கதாவிலாசம்

நாஞ்சில் நாடன்

எஸ்.ராமகிருஷ்ணன்

கதாவிலாசம்

 

மதுரை பல்கலைக் கழகத்தில் படித்துக்கொண்டு இருந்த நாட்களில், ரயில்வே நிலையத்தின் வெளியே உள்ள பிளாட்பாரத்தில் உள்ள இட்லிக் கடைகள் தான் எங்களது பசியாற்றுமிடங்கள். நான்கு நட்சத்திர ஓட்டல், ஐந்து நட்சத்திர ஓட்டல் என்பதெல்லாம் இவற்றின் முன் தூசி. (அங்கே இரவில் மர பெஞ்சில் உட்கார்ந்தபடி, கையில் இட்லித் தட்டை வாங்கிக்கொண்டு அண்ணாந்து பார்த்தால், வானில் நூறு நட்சத்திரங்கள் தெரியும்.)

மதுரை, ருசி மிக்க உணவுக்குப் பெயர் பெற்ற ஊர். இரவில் இரண்டு மணிக்குக்கூட ஆவி பறக்கும் இட்லியும் கெட்டி சட்னியும் பொடியுமாக உணவு பரிமளித்துக்கொண்டு இருக்கும். சாப்பிட்டது போதும் என எழும்போது கூட, ‘என்னப்பூ சாப்பிடுறீக… நல்லாச் சாப்பிடுங்கÕ என்று மனதாரக் கேட்டுப் பரிமாறும் அக்காக் கடைகள் தெருவுக்கு இரண்டிருக்கின்றன.

ஓர் இரவு, ரயில் நிலையத் தின் முன்பாக ஏதாவொரு அரசியல் கூட்டம் நடக்க இருக்கிறதென்று, அங்கிருந்த கடைகளை அப்புறப்படுத்தச் சொல்லிக்கொண்டு இருந்தார் கள். அக்காக் கடைகளில் ஒன்றில் சாப்பிடுவதற்காக உட்கார்ந்திருந்த நான், என்ன நடக்கப் போகிறது என்று பார்த்துக்கொண்டே இருந்தேன். இட்லிக்கார அக்கா அதெல் லாம் காலி செய்ய முடியாது என்று மறுத்து விவாதம் செய்துகொண்டு இருந்தாள். உள்ளூர் அரசியல் தலைவர்களில் ஒருவர், ‘எதுக்குடா பேசிக்கிட்டு இருக்கிறே! இட்லி, தோசைக்கு என்ன உண்டோ, அதைக் கொடுத்துட்டு இடத்தைக் காலி பண்ணச் சொல்லுவியா?’ என்று திட்டினார். உடனே கரை வேட்டி ஒருவர், ஐந்து நூறு ரூபாய்த் தாள்களை அவளிடம் நீட்டிய படி, ‘கடையை எடுத்துக் கட்டுக்கா!’ என்றார்.

அவளுக்கு வந்த ரௌத்திரத்தில் கத்தினாள்.

‘பன்னிரண்டு மணி வரைக்கும் அக்கா கடை இருக் கும்னு நினைச்சு சாப்பிட வர்றாங்க பாரு… அவிங்களுக்கு தான் இங்ஙன கடை போட்டிருக்கேன். உன்னை மாதிரி மொள்ளமாறி பயக பேச்சைக் கேட்டுக் கடையை மூடுனா, பசியோட வந்த பிள்ளைக திரும்பிப் போற பாவமில்லே வந்து சேந்துரும். நமக்கு வேண்டாம்டா அந்தப் பணம். கிடைக்கிறது எட்டணா காசா இருந்தாலும், பத்து பேரு பசியாத்தின திருப்தியிருக்கு பாரு, அதுக்குதான் யாவாரம் பண்றேன். உன் காசைப் பொறுக்கி எடுத்துட்டு போய்ச் சேரு. இல்லே… இட்லி அடுப்பிலே வெச்சு உன்னையும் வேக வெச்சிருவேன், பாத்துக்க..!’
எத்தனை சத்தியமான வார்த்தைகள். இட்லி விற்று வாழ்கிறோம் என்பதை விடவும், பத்து பேரின் பசியாற்ற முடிகிறதே என்ற அவளது சந்தோஷம் தான் அவளது உணவுக்கு ருசியைத் தருகிறது என்று அப்போதுதான் புரிந்தது.

உணவுக்கு ருசி சேர்ப்பது உப்பிலோ புளியிலோ இல்லை. சமைப்பவரின் மனதில்தான் இருக்கிறது. சந்தோஷமோ, கவலையோ எதுவாக இருந்தாலும் அது சமையலில் தெரிந்து விடுகிறது. சாப்பாட்டில் உப்பு குறைந்தால் பிரச்னை சாப்பாட்டில் இல்லை. சமையல் செய்யும் மனைவியை, தாயை சரியாகக் கவனிக்கவில்லை என்பதுதான் அப்படி வெளிப்படுகிறது. பேச்சலர் சமையல்களுக்கென்று ஒரு தனி ருசி இருக்கிறது. அது ஒரு முழுமையடையாத உணவு. குழம்பு சிறப்பாக வந்திருந்தால் சாதம் குழைந்திருக்கும். இரண்டும் சரியாக வந்திருந்தால் போதுமான அளவு இல்லாமல் போயிருக்கும். பசியைக் கடந்து செல்வது தான் அதன் முக்கிய நோக்கம்.

எப்போதாவது அபூர்வமான ஞாயிற்றுக்கிழமை களில், நண்பர்கள் பலரும் ஒன்று கூடி வெங்காயம் நறுக்கியபடியோ, வெள்ளை பூண்டு உரித்தபடியோ இலக்கியம், சினிமா, உலக விவகாரம் பேசிக்கொண்டு சமைக்கத் துவங்கி, வியர்த்து வழிய, சூடு பறக்க, தினசரி பேப்பர்களைத் தரையில் விரித்து, சமைத்த உணவை நடுவில் வைக்கும்போது வீடெங்கும் பரவும் மணம் இருக்கிறதே, அது பிரம்மசாரிகளின் அறைகளுக்கு மட்டுமே உரித்தான நறுமணம்.

எத்தனையோ முறை எவரெவர் வீடுகளிலோ திடீர் விருந்தாளியாகச் சென்ற இரவுகளில், உடனடி உப்புமாவைச் சாப்பிட்டிருக்கிறேன். சிலரது வீட்டில் தட்டில் உப்புமா பரிமாறப்பட்ட மறு நிமிடமே, அது எத்தனை தூரம் அவர்களின் தூக்கத்தைக் கெடுத்திருக்கிறது என்று அதன் ருசியிலேயே தெரிந்துவிடும். சிலரது வீடுகளில், இப்படி உப்புமா சாப்பிடுவதற்காகவே நள்ளிரவில் வந்து நிற்கக் கூடாதா என்று தோன்ற வைக்கும். இரண்டுக்கும் காரணம் உணவில்லை. செய்பவரின் மனதும் விருப்பமும்தான்.

குற்றால சீசன் நாளில், ஒரு முறை தென்காசியில் உள்ள சிறிய ஓட்டல் ஒன்றில் சாப்பிடப் போயிருந்தபோது, அந்த ஓட்டலின் உரிமையாளர் குழந்தைகள் சாப்பிடுவதற்கு காசு வாங்க மறுப்பதைக் கண்டேன். Ôசின்ன பிள்ளை என்ன சாப்பிட்டுறப் போகுது. அரை தோசை சாப்பிடுமா… நல்லா சாப்பிடட்டும்! அதுக்குப் போயி பில் போடுறதுக்கு மனசில்லை’ என அதற்கு அவர் சொன்ன காரணம்தான், அந்தக் கடையைத் தேடி யாவரும் போவதற்கான காரணமாக இருந்தது.
பசியை நேர்கொண்டு பழகுவதும், அதன் முணுமுணுப்பை சட்டை செய்யாமல் புகையும் வயிற்றோடு விட்டத்தைப் பார்த்தபடி படுத்திருப்பதும் இருபது வயதில் மட்டுமே சாத்திய மானது போலும்! அவமானங்களும் வடுக்களும் அறிமுகமாகத் துவங்கும் வயது அது.

கல்லூரி நாட்களில் எனக்குத் தெரிந்த நண்பன் ஒருவன், தன் அத்தையின் வீட்டில் தங்கிப் படித்துக் கொண்டு இருந்தான். அவர்கள் வீட்டில்தான் சாப்பாடு. அந்த வீட்டில் சாப்பிடுவதற்கே கூச்சமாகத்தான் இருக் கிறது என்பான். காரணம் கேட்டால், ‘பாதிச் சாப்பாட்டில் மறுசோறு வேண்டும் என்று கேட்டால், காது கேட்கா தது போலவே நின்று கொண்டு இருப்பார்கள். ஒவ்வொன்றையும் நாலைந்து முறை கேட்க வேண்டும். நாக்கை வெட்டி எறிந்து விடலாமா என்று அவமானமாக இருக்கும்.
அதை விடவும் கொடுமை, பசித்த நேரங்களில் நாமாகத் தட்டில் எடுத்துப் போட்டுச் சாப்பிட முடியாது. அவர்களாகச் சாப்பிடச் சொல்லும் வரை காத்துக்கொண்டே இருக்க வேண்டும். பல நாட்கள் இரவு நேரங்களில் தட்டில் சோற்றைப் போட்டு ஓரமாக வைத்துவிட்டு உறங்கிவிடுவார்கள். தனியே அந்தச் சோற்றைச் சாப்பிடும்போது இழவு வீட்டில் சாப்பிடுவது போல இருக்கும். இதற்காகவே நான் பல நாட்கள் பட்டினி கிடந்திருக்கிறேன்’ என்பான்.

எல்லோரது உடலிலும் பசியில் பட்ட அவமானங்கள் ஆறாத வடுக்களாக கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருக்கின்றன போலும்! யாரோ சப்பிப் போட்ட மாங்கொட்டையை மண்ணிலிருந்து ஆசையாக எடுத்து மண்ணை ஊதிவிட்டு சுவைக்கும் குழந்தையின் கண்களில் ஒளிந்திருப்பது பசியைத் தவிர, வேறென்ன?
பசியின் கால்தடம் பதியாத இடமே உலகில் இல்லை. பசியின் முன்பாக தலை குனியாத மனிதனும் எவனும் இல்லை. இதை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறது ‘நாஞ்சில் நாட’னின் ஒரு கதை.

நாஞ்சில் நாடன் தமிழ்ச் சிறுகதையுலகில் மிகச் சிறப்பான எழுத்தாளர். இவரது எழுத்துலகம் குமரி மாவட்டத்து நாஞ்சில் பிரதேச மக்களும், அதன் மண்ணும் கலந்து உருவானது. தமிழ் எழுத்தாளர்களிடம் அபூர்வமாகவே காணப்படும் நகைச்சுவையும், பகடியும் இவருக்குச் சரளமாகக் கை வரக்கூடியது.

திருவிழா நாள் ஒன்றில் கச்சேரி கேட்பதற்காக மாணிக்கம் என்ற சிறுவனின் அப்பா புறப்படுகிறார். மாணிக்கம் தானும் வருவதாக அவரோடு சேர்ந்துகொள்கிறான். சுசீந்திரம் கோயில் பிரசித்தி பெற்றது என்பதால் அங்கே கே.பி.சுந்தராம்பாள், பாலமுரளி கிருஷ்ணா, ராஜரத்தினம் பிள்ளை எனப் பலரும் வந்து கச்சேரி செய்திருக்கிறார்கள். இதனால் அருகாமை கிராமத்து மக்களுக்கு கொஞ்சம் சங்கீத ரசனை உருவாகியிருந்தது.

மாணிக்கத்தின் அப்பா ஒன்றும் பெரிய இசை ரசிகர் இல்லை. ஆனாலும், கச்சேரி கேட்பதற்காக திருவிழாவுக்குக் கிளம்பி வந்திருந்தார். கச்சேரி கேட்க, ஊரிலிருந்து நடந்தே வந்திருந்தார்கள். கச்சேரி முடிய நள்ளிரவாகிவிட்டது.
அப்பாவும் பிள்ளையும் எதையாவது சாப்பிடுவதற்காக, ஒரு காபிக் கடைக்குள் நுழைந்து ஆளுக்கு நாலு தோசை, ரசவடை, டீ எனச் சாப்பிட்டுவிட்டு வெளியே வருகிறார்கள். அன்று கடையில் நல்ல கூட்டம். யாருக்கு எவ்வளவு பில் என்று கடைப் பையன் கத்திச் சொல்லிக் கொண்டு இருக்கிறான். முதலாளி பில்லை வாங்கிப் போட முடியாதபடி கூட்டம் நெருக்கித் தள்ளுகிறது.
மாணிக்கத்தின் அப்பா கல்லாவை நெருங்கி வந்து இரண்டு டீ மட்டும் குடித்ததாக காசை எண்ணி வைத்துவிட்டு, எதுவும் நடக்காததுபோலப் பையனை கூட்டிக்கொண்டு வெளியே வந்துவிடுகிறார். ‘அப்பா ஏன் இப்படி ஏமாற்றினார்’ என்று மாணிக்கத்துக்குப் புரியவேயில்லை. ஒருவேளை, அப்பா இதற்காகத்தான் வருடம் தோறும் திருவிழாவுக்குத் தவறாமல் வந்துவிடுகிறாரோ என்றுகூடத் தோன்றியது. ஆனால், இனி இவரோடு திருவிழாவுக்கு வரக்கூடாது என்று மாணிக்கம் முடிவு செய்வதோடு கதை முடிகிறது.
பசியின் பெரும் போராட்டம் தான் வாழ்வை ஏதேதோ திசைகளில் கொண்டு செலுத்திக்கொண்டு இருக்கிறது நாவின் சுவை வேண்டுமானால் ஆறாக இருக்கலாம். ஆனால், வாழ்வின் சுவை எத்தனை விதமானது என்று அறுதியிட்டுக் கூற முடியுமா என்ன?

நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளர்களில் ஒருவரான நாஞ்சில் நாடன் 1947&ல் பிறந்தவர். இயற்பெயர் சுப்ரமணியன். வேலையின் காரணமாகப் பல வருடங்கள் மும்பையில் வசித்தவர். இவரது ‘தலைகீழ் விகிதங்கள்’ நாவல் தமிழ் நாவல்களில் குறிப்பிடத்தக்கது. இதை இயக்குநர் தங்கர்பச்சான் ‘சொல்ல மறந்த கதை’ என்ற பெயரில் படமாக்கியுள்ளார். மிதவை, தெய்வங்கள் ஆடுகள் ஓநாய்கள், பேய்க் கொட்டு, சதுரங்கக் குதிரைகள் போன்றவை இவரது முக்கியப் படைப்புகள். நாஞ்சில் நாடன், தற்போது கோயம்புத்தூரில் வசித்து வருகிறார்.

***********

நன்றி http://azhiyasudargal.blogspot.com/2010/03/blog-post_23.html

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s