( நாஞ்சில்நாடனுடைய கதையுலகம்) பாவண்ணன்

வாழும் விருப்பமுள்ள மனிதர்கள் ( நாஞ்சில்நாடனுடைய கதையுலகம்)

பாவண்ணன்

http://www.thinnai.com/?module=displaystory&story_id=60703016&format=html

விழுந்தால் வாய்பிளந்திருக்கும் பாழுங்கிணற்றுக்குள் விழவேண்டும். மேலேறி வந்தால் கொத்துவதற்குத் தயாராக படமெடுத்திருக்கும் பாம்புக்கு இரையாகவேண்டும். இப்படி இரு விளிம்புகளிலும் விழுங்கக் காத்திருக்கிறது மரணம். இடையில் விழுதைப் பிடித்தபடி அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறான் ஒருவன். எக்கணத்திலும் மரணம் நிகழலாம் என்ற நிலையிலும் மரஉச்சியில் காணப்பட்ட ஒரு தேன்கூட்டிலிருந்து சொட்டுச்சொட்டாக விழும் தேன்துளிகளை விருப்பத்தோடு சுவைக்கிறான் அவன். பழைய தமிழ்ப் பாடலொன்றில் இடம்பெற்றிருக்கும் இக்காட்சி மனித மனத்தில் காலம்காலமாக உறைந்திருக்கும் வாழும் விருப்பத்தை முன்வைக்கும் மிகமுக்கியமான ஒரு குறியீடு. உலகெங்கும் புழங்கக்கூடிய எல்லா மொழிக்கதைகளிலும் மரணத்தைப் பொருட்படுத்தாமல் அல்லது மரணத்திலிருந்து தப்பித்து வாழ்க்கையைச் சுவைக்க விரும்பும் மனிதர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். இல்லற வாழ்வைத் துறந்து துறவறம் மேற்கொள்ளும் மனிதர்களிடம்கூட வாழ்வை வேறொரு கோணத்தில் சுவைக்கும் ஆர்வமே மேலோங்கியிருக்கிறது. மனிதர்களிடம் செயற்படும் இவ்விருப்பத்தின் வெவ்வேறு பரிமாணங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது நாஞ்சில்நாடனுடைய படைப்புலகம். நெருக்கடிகளின் சித்தரிப்புகளை உடலாகவும் அவற்றை எதிர்கொண்டு வெல்லும் விருப்பத்தை உயிராகவும் கொண்டது இந்தக் கதையுலகம்.

இல்லாமையின் காரணமாக உருவாகும் நெருக்கடிகள் அன்றாட வாழ்க்கைத் தளத்தில் பல தன்மைகளைக் கொண்டவை. எதிர்பார்த்தும் எதிர்பாராமலும் இத்தகு நெருக்கடிகளின் அழுத்தத்தால் மனிதர்கள் நசுங்க நேர்கிறது. இவை ஒருவித தத்தளிப்பையும் சங்கடங்களையும் ஊட்டியபடியே உள்ளன. ஒருசில கட்டங்களில் இவை ஒருவித சங்கடத்தையும் தடுமாற்றத்தையும் வழங்குகின்றன. மனம் அவற்றை எதிர்கொள்ளும்போதே அவற்றிலிருந்து தற்காலிகமாகவேனும் தப்பித்துவிடுகிறது அல்லது மீண்டெழுந்து பெருமூச்சுவிடுவதற்கான வழிகளைக் கண்டடைந்து விடுகிறது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு வழிமுறை புதிதுபுதிதாகத் தோன்றியபடியே இருக்கிறது. மீண்டெழுவதன் ஒவ்வொரு வழிமுறையும் கிட்டத்தட்ட ஒரு சாகசத்துக்கு இணையானதாகக் கருதத்தக்கதாகும். நமது மனம் அச்சாகசத்தை மெளனமாக உள்வாங்கி உறைகிறது. பிறகு நிதானமாக எண்ணும் கணந்தோறும் தேடியெடுத்து அசைபோட்டு அசைபோட்டு உள்ளூரக் குமுறுகிறது. அல்லது பெருமூச்சில் வாடுகிறது. வாழும் விருப்பம் என்பது மனிதகுலம் தழைப்பதற்குத் தேவையான அடியுரம் போன்றது. அதனால்தான் இத்தகு மனிதர்கள் இலக்கியத்தில் நிரந்தரமான இடத்தைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

நாஞ்சில்நாடனுடைய கதையுலகில் வாழும் விருப்பத்தை எச்சந்தர்ப்பத்திலும் கைவிடாத மனிதர்கள் நிறைந்திருக்கிறார்கள். பசி, வெறுப்பு, கோபம், இயலாமை, எரிச்சல் எதுவுமே இவ்விருப்பத்தைக் குறைக்கும் சக்திகொண்டவை அல்ல. மாறாக, இத்தகு கணங்கள் முன்னிலும் பலமடங்கு ஆற்றலோடும் வற்றாத வேகத்தோடும் அவ்விருப்பத்தைப் பெருக்கெடுக்கவைக்கின்றன.

நாஞ்சில்நாடனின் தொடக்கக்காலக் கதைகளில் ஒன்று “உப்பு”. இரண்டு வயதில் அம்மாவையும் அப்பாவையும் இழந்து ஆத்தாவின் ஆதரவில் வாழும் சொக்கன் என்னும் சிறுவனைப்பற்றிய சித்திரம் இக்கதையில் இடம்பெற்றிருக்கிறது. அது ஒரு மழைநாள். புதுவெள்ளத்தில் அடித்துவரப்படும் பெரிதும் சிறிதுமான சுள்ளிகளையும் தென்னைமடல்களையும் காற்றில் முறிந்துவிழுந்து மிதந்துவரும் பச்சைக் கிளைகளையும் ஆற்றிலிருந்து ஒதுக்கிப் பிடித்துவரச் செல்கிறாள் ஆத்தா. சுமந்துவரும் பணியில் கரையில் நின்றிருக்கிறான் சொக்கன். மழையைப்பற்றிய பேரனுடைய எச்சரிக்கைக் குரலையும் மீறி, ஒரு கிளையை இழுப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் ஆத்தாவை வெள்ளம் தடுமாறிவிழச் செய்துவிடுகிறது. மறிந்து புரண்ட அடிமரம் அழுத்தியதில் நிற்க இயலாமல் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகிறாள். கண்முன்னாலேயே நிகழ்ந்த மரணத்திலிருந்து ஆத்தாவைக் காப்பாற்ற இயலாத வெறியில் கரையோரமாக வெகுதொலைவு ஓடிச் சென்று சோர்ந்து நிற்கிறான் சொக்கன். பாட்டியின் சடலம்கூட ஒதுங்கவில்லை. பதினாறு வயதில் தன்னந்தனியாக பொங்கித் தின்று வாழும் நிர்ப்பந்தத்துக்கு ஆளாகிறான் அவன். ஈர விறகின் புகைசூழ கஞ்சி வைத்துக் குடிக்கிற நிலை. சூடும் காரமும் கண்களைக் குளமாக்கும்போது காதருகே பாட்டியின் குரல் ஒலிப்பதுபோன்று எழுந்த உணர்வு அவனை நெகிழச் செய்கிறது. சொக்கனுடைய வாழும் விருப்பத்தை இக்குரலே வழிநடத்திச் செல்லக்கூடும்.

“உபாதை” சிறுகதையில் களையெடுத்துப் பிழைக்கும் பூமணியுடைய வாழ்வின் நெருக்கடியான ஒரு சந்தர்ப்பம் வரைந்துகாட்டப்படுகிறது. குடும்ப நெருக்கடிகளைச் சமாளிப்பதற்கு நேரக்களையையும் மதிப்புக்களையையும் அடுத்தடுத்துச் செய்து பொருளீட்ட முனைகாறாள் அவள். மதிப்புக்களையால் கிடைக்கக்கூடிய கூடுதல் வருமானம் சாப்பாட்டுச் சிக்கலுக்கு ஓரளவாவது நிவாரணமாகும் என்பது அவள் நம்பிக்கை. இதுவே சூரியன் மறைந்து இருள் பரவத்தொடங்கும் வரை தன்னந்தனியாக நிலத்தில் இறங்கி வேலையை முடிக்கத் தூண்டுகிறது. பிறகுதான் அன்று வெள்ளிக்கிழமை என்பதும் விளக்குவைத்த வேளையில் பண்ணையாரிடமிருந்து கூலிப்பணம் கிட்டாது என்பதும் தாமதமாக உறைக்கிறது. நெருக்கடிகளை நேர்வழிகளில் மட்டுமே எதிர்கொள்கிறவளுக்கு அக்கணத்தில் எந்த வழியும் புலப்படாமல் போகிறது. ஆனால் அவளுக்குள்ளும் ஒரு தந்திர வழி உறைந்துள்ளது என்பதை அப்போது நடைபெறும் ஒரு நிகழ்ச்சியின்வழியாக உணர்ந்துகொள்கிறோம். இருளில் தன் காமத்தைத் தணித்துக்கொள்ளவேண்டி நெருங்கிவரும் கங்காதரம் பிள்ளையிடம் பத்


ருபாய் வாங்கிமுடித்துக்கொண்டு அவனைத் தந்திரமாக இடறிவிழவைத்து தள்ளிவிட்டு தப்பித்துச் செல்கிறாள். காமத்தைத் தணித்துக்கொள்ள நெருங்கிவருகிறவனுக்குத் தேவையில்லாமல் போன நியாயங்களும் அற உணர்வுகளும் பசிக்குத் தவிக்கிறவளுக்கும் வேறொரு கோணத்தில் தேவையற்றவையாக உதிர்ந்து விடுவதில் விசித்திரமில்லை. உயிர்தரித்திருக்கும் வாய்ப்புக்காக அவை தற்செயலாக உதிர்வதை உணரவேண்டும். சரியான தருணத்தில் வாழும் விருப்பம் மேலோங்குவதையும் கவனிக்கவேண்டும்.

“விலக்கும் விதியும்” கதையில் இடம்பெறும் பரமக்கண்ணு எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டுத் திரும்புவதற்குள் ஆக்கிவைத்திருந்த கருவாட்டுக் குழம்புப் பாத்திரத்தில் நாய்க்குட்டி வாய்வைத்துச் சுவைத்துவிடுகிறது. நடந்துபோன சம்பவத்தால் வெறியும் எரிச்சலும் அவனை வெகுண்டெழச் செய்தாலும் ஒன்றும் செய்யத் தோன்றாமல் ஒருகணம் கறிச்சட்டியை உற்றுப் பார்த்தபிறகு நிதானமடைந்து சுருட்டி எடுத்துவந்த வாழையிலையை தண்ணீர் விட்டுக் கழுவத் தொடங்குவதாக கதை முடிவடைகிறது. அந்த நிதானம் பல்வேறு பொருள்களை உணர்த்தும் வகையில் உள்ளது. முக்கியமாக பட்டினித் தீயை அணைத்து வாழ்வதற்கான தெம்பை அடையும் வேகம். இல்லாமை மிதக்கும் வாழ்வில் இதை மிகப்பெரிய பிசகாக எடுத்துக்கொள்ள முடியாது. முழுஆள் வேலையை வாங்கிக்கொண்டு அரைஆள் கூலியைக் கொடுத்தனுப்பும் வக்கிரத்தையும், வீட்டு இருப்புக்கு நெல்லை அளக்க ஒரு படியென்றும் கூலியளக்க இன்னொரு படியென்றும் மாற்றிமாற்றிப் பயன்படுத்தும் தந்திரத்தையும் (வாய் கசந்தது) தடுக்க இயலாத சூழலில் இப்பிசகுகளை சகஜநிலையிலேயே எடுத்துக்கொள்ளவேண்டும்.

தமிழ்ச் சிறுகதைகளின் பரப்பில் பல அபூர்வ மானுடச் சித்திரங்களை காலந்தோறும் நாம் கண்டுவந்திருக்கிறோம். வாழ்க்கையை அவர்கள் எதிர்கொள்ளும் விதத்தில் வெளிப்படும் இந்த மனிதர்களின் செயல்பாடுகள் இத்தகு அபூர்வத்தன்மையை இவர்கள்மீது ஏற்றிவைத்துவிடுகிறது. புதுமைப்பித்தனுடைய கல்யாணியையும் கந்தசாமிப்பிள்ளையையும் சிற்பி பைலார்க்கஸையும் தி.ஜா.வின் “பாயசம்” சாமநாதுவையும் “கண்டாமணி” மார்க்கம் ஐயரையும் பரதேசியையும் ஜெயகாந்தனுடைய பெண்பாத்திரங்களையும் கி.ரா.வின் “கன்னிமை” நாச்சியாரையும் “வேட்டி” நாயக்கரையும் போல பல மானுடச் சித்திரங்களை உயிர்ப்பாற்றலோடு நாஞ்சில்நாடன் தீட்டியிருப்பதைச் சாதனையாகக் குறிப்பிடலாம். “இவர்கள் நிழல்களல்ல” பண்டாரமும் “இடலாக்குடி ராசா”வும் “முரண்டு” டப்புச்சுந்தரமும் இவ்வகையில் அழுத்தமான வண்ணங்களுடைய சித்திரங்கள்.

“இருள்கள் நிழல்களல்ல” கதையின் பரப்பளவு மிகச்சிறியதுதான். ஒரு திருமண மண்டப வாசல்தான் கதை நிகழும் களம். மண்டப வாசலில் பந்திச் சாப்பாட்டுக்காக கூனிக்குறுகி நிற்கிற ஒரு மனிதனின் நிழலே இக்கதையில் தீட்டிக்காட்டப்படும் சித்திரம். காலம்காலமாக இந்த மண்ணில் திருமணங்கள் நடைபெற்றபடியே இருக்கின்றன. ஆனால் நுட்பமாக அவை நடைபெறும் முறையில் சில மாற்றங்கள் காலத்துக்குத் தகுந்தபடி இடம்பெற்றபடியும் உள்ளன. சடங்குகள் மாறுகின்றன. சடங்குகளில் ஒரு கட்டத்தில் முக்கியத்துவம் வகிப்பனாகவும் விருந்தில் தாராளமான கவனிப்¨ப் பெறுகிறவனாகவும் இருந்த பண்டாரம், இன்று தேவையற்றவனாக மாறிப்போய்விட்டான். விருந்தில் ஆறேழு பந்திகளுக்குப் பிறகும் அவனை அழைக்க ஆளில்லை. நல்ல சுவையான ஏக்கம்தான் அவனை அந்த விருந்து மண்டபத்துக்கு பொத்தல் வேட்டியோடு அழைத்து வந்தது. ஆனால் அங்கே நிகழும் புறக்கணிப்பு அவனுக்குள் அவநம்பிக்கையை விதைக்கிறது. எனினும் விலகி நடப்பதற்கான எண்ணமில்லாமல் தாம் தாமதமாகவாவது அடையாளம் கண்டுகொள்ளப்படுவோம் என்னும் எண்ணம் அங்கேயே நிற்கவைக்கிறது. கதைநெடுக விருந்துண்ணும் ஒரு மனநிலையில்தான் அவன் தீட்டிக்காட்டப்படுகிறான். அவன் வாழ்வும் சரிவும் அவனுடைய நினைவுகள் வழியாகப் பொங்கியெழுந்து தத்தளித்தபடி இருக்கின்றன. தொழில்சார்ந்த இழிவை காலம் அவன்மீது சுமத்திவிட்டு நகர்ந்துவிட்டதை அவன் மனம் உணரவில்லை. பிசைந்த சோற்றை பிச்சைக்காரர்களோடு சேர்ந்து உட்கார்ந்து வாங்க மணமில்லாமல் மண்டபத்துக்குள்ளிருந்து வீட்டுப்புறக்கடைக்குச் சென்று தன்மீது யாருடைய பார்வையாவது விழாதா என்று ஆவலோடு காத்திருக்கத் தொடங்குகிறான். ஒருகாலத்தில் அந்த வீட்டு மனிதர்களுக்கு முகச்சவரமும் முடியழுங்கும் செய்த அதே புறக்கடைதான். ஆனால் அன்று அவனை அடையாளம் கண்டு அழைக்க ஒருவரும் இல்லாமல் போய்விடுகிறார்கள். பண்டாரத்தின் காத்திருப்பு மிகப்பெரிய அபத்தமல்லவா? ஒரு காலத்தில் தேவை கருதி அவனுடைய காத்திருப்பை நீட்டிக்காத சூழல் அமைந்திருந்ததையும் இன்றைய தேவைக்குறைவு காத்திருப்பைப் புறக்கணிக்கிற நிலை உருவாகியிருப்பதையும் அவன் ஏன் உணராமல் போனான்? காலம் முழுதும் அவன் காத்திருந்தவனே என்ற சுடுஉண்மையை உணராத அவனது அப்பாவித்தனத்தில்தான் கதை மையம் கொண்டிருக்கிறது. இழிவு என்பது தொழிலால் மட்டுமல்ல, வறுமையாலும் வசதியின்மையாலும் கூட நேரும் ஓர் அவலம். நாஞ்சில் நாடனுடைய இன்னொரு சிறுகதையில்தாய்மாமன் என்கிற முறையில் தனக்கும் புத்தாடை கிடைக்கும் என்னும் எதிர்பார்ப்பில் திருமணத்துக்குச் சென்று புறக்கணிப்புக்கு ஆளாகும் இன்னொரு பெரியவரின் ஆதங்கத்தையும் மனம்கூம்பி ஒடுங்கும் துக்கத்தையும் இக்கணத்தில் நினைவுகொள்ளலாம்.

எல்லோருக்கும் இளக்காரமான “இடலாக்குடி ராசா”வின் சித்திரம் நெஞ்சில் அழுத்தமாகப் பதிந்துவிட்ட ஒன்று. ஊர்க்காரர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகிறவனாகவும் அவ்வப்போது தோன்றி மறைகிறவனாகவும் வலம்வருகிறான் அவன். எப்போது பார்த்தாலும் காணாமல்போன ஒரு பொருளை எடுக்கப்போவதைப்போல விறீர் என்ற நடையோடு திடீர்திடீரென ஏதாவது ஒரு வீட்டில் பிரசன்னமாகி திண்ணையில் உரிமையோடு உட்கார்ந்து சாப்பாடு கேட்கிறவன். “ராசா வந்திருக்கேன்” என்றொரு அறிவிப்பு. வீட்டில் இருந்து ஒரு அக்காவோ பெரியம்மாவோ பாட்டியோ வெளியே வந்து சோறுபோட்டு அனுப்புவார்கள். எங்கும் தடை இருப்பதில்லை. பெண்களின் கருணைமனம் அவன் பசியைத் தணித்துவிடுகிறது. ஆனால் ஆண்களே சமைத்து ஆண்களே பரிமறும் பந்தியில் அவன் கேலிப்பொருளாக மாற்றப்பட்டுவிடும் அவலம்தான் கதையின் உச்சம். கேலியையும் சிரிப்பையும் புறக்கணிப்பையும் புரிந்துகொள்ளளும் அளவுக்கு முழுமனவளர்ச்சியுள்ளவனல்ல அவன். அவன் அறிந்ததெல்லாம் வயிற்றுப் பசி ஒன்றைமட்டுமே. பந்தியில் சக சாப்பாட்டாளர்களின் சிரிப்பு அவனை எழுந்து நிற்கவைத்துவிடுகிறது. விளையாட்டுபோலவே “அப்ப நா வண்டிய விட்டிரட்டா” என்றபடி ஓடிப்போகவும் தூண்டுகிறது. வாழும் விருப்பத்தால் பசியைத் தணித்துக்கொள்ள சகல முயற்சிகளிலும் ஈடுபடுகிறவர்கள் நடுவே பசியைத் தாங்கிக்கொண்டு எழுந்து ஓடிவிடும் ராசா அபூர்வமான சித்திரம். மாறிமாறி கேலி செய்தவர்களையெல்லாம் அவனுடைய எதிர்பாராத புறப்பாடு மற்றவர்களை ஆழந்த சுயவெறுப்பிலும் கசப்பிலும் அமிழச்செய்து அந்த விருந்திலேயே நாட்டமற்றவர்களாக மாற்றிவிடுகிறது. எந்த முன்தீர்மானமும் இல்லாமல் அந்த மாற்றம் உருவாகிறது.

“முரண்டு” சிறுகதையில் இடம்பெறும் டப்புச் சுந்தரமும் மறக்க இயலாத சித்திரமாகும். போதிய மனவளர்ச்சியற்ற பாத்திரமாகவே அவன் படைக்கப்பட்டிருக்கிறான். ஆனால் முழுமனவளர்ச்சி இருப்பவர்களிடம்கூட காணப்படாத ஒரு பெருந்தன்மையும் அன்பும் அறஉணர்வும் மனவளர்ச்சியில்லாத டப்புச் சுந்தரத்திடம் படிந்திருப்பதை அவன் வாழ்வில் நடைபெறும் ஒருநாள் நிகழ்ச்சி வழியாக அறிந்துகொள்கிறோம். திருமணம் முடிந்து சில ஆண்டுகளுக்குப் பிறகும்கூட முதல் மருமகளுக்கு குழந்தை பிறக்கவில்லை என்பதால் இரண்டாம் மருமகளைத் தேடி மணம் செய்விக்க அலைகிறார்கள் சுந்தரத்தின் பெற்றோர்கள். அவர்களைத் தடுக்க அவன் முன்வைக்கும் வார்த்தைகளை அவர்கள் மதிப்பதில்லை. வாய்வார்த்தைகளால் அவர்களுக்குத் தன் அற உணர்வையும் நியாய உணர்வையும் உணர்த்த இயலாத சுந்தரம் திருமணத்துக்கு முன்பேயே குடும்பக்கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்துகொண்டு வந்து உணர்த்திவிடுகிறான்.

நாஞ்சில்நாடனுடைய எண்ணற்ற சிறுகதைகளில் திரும்பத்திரும்ப இடம்பெறும் சாப்பாட்டுக் காட்சி மனிதர்களின் உள்மன இயக்கத்தைப் படம்பிடிக்க நிறுத்திவைக்கப்பட்ட கண்ணாடியைப்போலத் தோன்றுகிறது. மனிதர்களின் உண்மையான நிறத்தையும் அகவிருப்பத்தைய,ம் வெளிக்கொண்டுவர அத்தகு தருணங்கள் பயன்படுத்தப்படுகின்றன. விரதச் சாப்பாட்டுக்காக மகள்கள் வீட்டுக்குச் சென்று சுயமரியாதையைக் காப்பாற்றிக்கொள்ளும்பொருட்டு சாப்பிடாமலேயே திரும்பிவந்து பழைய சோற்றைச் சரித்துக்கொண்டு சாப்பிட உட்காரும் சின்னத்தம்பியா பிள்ளை, திருவிழா நாளன்று ஓட்டலில் நெரிசல்மிகுந்த சூழலில் மகன் முன்னிலையிலேயே சாப்பாட்டுக் கணக்கைக் குறைத்துச் சொல்லி பணம்கொடுத் துவிட்டு படியிறங்கும் தந்தை, உணவுப் பாத்திரத்துக்குள் கைவிட்டு எடுத்துச் சாப்பிடும் செல்லையா, விலைப்பட்டியலைப் பார் த்து அளவு சாப்பாடு போதுமென்று முடிவெடுக்கும் தந்தையும் மகனுமென ஏராளமான குணவிசேஷங்களோடு நமக்குப் பலர் அறிமுகமானபடி இருக்கிறார்கள். நாஞ்சில் நாடனின் கதையுலகின் பாத்திரங்கள் மனம் பிளவுபட்டு ஒன்றுடன் ஒன்று மோதவும் அமைதி குலைவதும் வெறுப்படைவதும் விரக்தியுறுவதும் வீம்பு கொள்வதும் சாப்பாட்டுக் காட்சிகளில் மாறிமாறி நிகழ்கின்றன. ஒரே சமயத்தில் அக்காட்சி எதார்த்தத்துடன் பொருந்திப் போவதாகவும் மனிதர்களின் அகத்தை அம்பலப்படுத்தும் குறியீடாகவும் அமைந்திருக்கிறது.

நாஞ்சில்நாடனின் தொடக்கக்காலக் கதைகள் வாழ்வின் இல்லாமையை எதிர்கொள்ளும் பல்வேறு தளங்களைச் சேர்ந்த மனிதர்களின் சித்திரங்களை முன்வைக்கின்றன. அவருடைய பிற்காலக் கதைகள் மாற்றமுறும் வாழ்க்கைச் சூழலோடு பொருந்திப்போக இயலாத மனிதர்களின் சித்திரங்களைத் தீட்டிக்காட்டுகின்றன. “பிராந்து” , “பிணத்தின்முன் அமர்ந்து திருவாசகம் படித்தவர்” ஆகிய சிறுகதைகள் பிற்காலக் கதைகளில் முக்கியமானவை. பிராந்து என்னும் பட்டப்பெயரால் அழைக்கப்படும் மந்திர்முர்த்தி உண்மையில் மிகஉயர்ந்த மனிதர். எல்லா இடங்களிலும் து¡ய்மையை எதிர்பார்க்கும் மனம் அவருடையது. ஏதோ ஒரு காரணத்தை முன்னிட்டு நிகழ்த்தப்படும் காவலர்களின் துப்பாக்கிச்சூட்டைத் தாங்கிக்கொள்ள இயலாமல் வேலையைத் துறந்துவந்தவர் அவர். ஒருமுறை சாலையில் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருந்த பாறையை சொந்தப் பணத்தைச் செலவுசெய்து ஆட்களை வரவழைத்து வெட்டியெறியச் செய்கிறார். கண்ணில் படும் முறைகேடுகளைப் புகார்க்கடிதங்களாக எழுதி அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்க விடாமுயற்சி செய்கிறார். திருவிழாவில் இசைத்தட்டு நாட்டியத்தைக் காணவந்த மனைவியைக் கடிந்துகொள்வதற்கும் உயர்வான வாழ்வுமதிப்பீடுகள்மீது அவர் கொண்டிருந்த பற்றே காரணம். எந்தக் கிராமமும் மனிதர்களும் து¡ய்மையும் உயர்வான எண்ணங்களோடும் வாழவேண்டும் என்னும் ஆவலால் காலமெல்லாம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறாரோ அதே கிராமம் அவருக்கு பைத்தியக்காரன் பட்டத்தைக் கட்டி வேடிக்கை பார்க்கிறது. பொருந்தாமையின் மிகப்பெரிய அவலம் இது.

ஆலயத்தில் சிவபெருமான் முன்னிலையில் திருவாசகம் படித்து வாழ்க்கையை ஓட்டும் ஓதுவாரை மின்சாரத்தின் வருகை ஒடுக்கிவிடுகிறது. ஒலிநாடாவும் ஒலிபெருக்கியும் ஓதுவாரைவிட வலிமையான குரலில் எட்டமுடியாத தொலைவுவரை திருவாசகத்தின் வரிகளை ஏந்திச் செல்கின்றன. அப்படிப்பட்ட நெருக்கடிகளில் பிணத்தின்முன் அமர்ந்து திருவாசகம் படிக்கும் அவலத்துக்கு ஆளாகிறார் ஓதுவார். அவரது வறுமை அவர்மீது சுமத்தப்பட்ட நிர்ப்பந்தத்துக்குக் கட்டுப்படும் சூழலைத் திணித்துவிடுகிறது. வாழும் விருப்பமே எல்லாவிதமான திணிப்புகளையும் தாங்கிக்கொள்ளும் சக்தியை வழங்குகிறது.

இல்லாமையும் பொருந்தாமையும் கூடிய படைப்புகள் நம் தமிழ்ச்சூழலில் எவ்விதமான முக்கியத்துவத்தை வகிக்கின்றன என்பது முக்கியமான கேள்வி. இவ்விரண்டு பண்புகளும் இன்றைய இந்தியாவின் இரண்டு முகங்கள். ஒருபுறம் சொல்லமுடியாத அளவுக்கு கடுமையான வறுமை மனிதவாழ்வைச் சிதைத்துக்கொண்டிருக்கிறது. வேலை வாய்ப்புகள் மெல்லமெல்லத் தேய்ந்துபோன நிலை. இயற்கை தீவிரமாகப் பொழிந்தும் வருத்துகிறது. தீவிரமாகக் காய்ந்தும் வாட்டியெடுக்கிறது. ஒருவாய்ச் சோற்றுக்காக கையேந்தவைக்கிறது. ஓருராக அலையவைக்கிறது. இன்னொருபுறம் வேகவேகமாக வளர்ந்து செல்லும் தொழில்களின் பெருக்கத்தால் மனிதஆற்றல்மையச் சமூகம் இயந்திரஆற்றல்மையச் சமூகமாக மாற்றமடைகிறது இதன் விளைவாக, சமூக ஓட்டத்தோடு பொருந்திக்கொள்ள முடியாமல் கையறுநிலையில் திகைப்போடும் அதிர்ச்சியோடும் மனிதர்கள் ஒதுங்கிநிற்கிறார்கள். நேற்றுவரை சமூகத்தட்டில் அவர்கள் வகித்துவந்த பாத்திரத்துக்கு இன்று இடமில்லை. மதிப்புமில்லை. பொங்கியெழுந்து வந்த வெள்ளமொன்றில் அடித்துக் கரையதுக்கப்பட்டவர்களாக மனிதர்களை நிற்கவைத்து விட்டது. இவை இரண்டும் இந்தத் தேசத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கும் அவலங்கள். படைப்புகளுக்குள் இந்த அவலங்களை முன்வைத்து இச்ச்முகத்தோடு உரையாடும் எழுத்தாளன் இத்தகு பலவித வதைகளுக்கிடையேயும் வாழும் விதத்தை மானுடகுலம் கண்டறிந்துவிடும் அபூர்வ தருணங்களை முன்வைக்கின்றான். மகத்தான வாழும் இச்சையும் மனித ஆற்றலும் ஒருபோதும் மானுட வாழ்வைக் கைவிடுவதில்லை. அடைக்கப்படமுடியாத அந்த ஊற்றுக்கண்களின் சுரப்பு தடுக்கப்படமுடியாத ஒன்று. நாஞ்சில்நாடனுடைய ஒட்டுமொத்தமான கதையுலகில் நுழைந்துவந்த அனுபவத்தை அசைபோடும் கணத்தில் இவ்வரியே மீண்டும்மீண்டும் மனத்தில் அலைமோதுகிறது.

(நாஞ்சில்நாடன் கதைகள். நாஞ்சில் நாடன், யுனைடெட் ரைட்டர்ஸ், 130/2, அவ்வை சண்முகம் சாலை, கோபாலபுரம், சென்னை-86. விலை ரூ275)

About S i Sulthan

தொகுப்பு
This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to ( நாஞ்சில்நாடனுடைய கதையுலகம்) பாவண்ணன்

  1. radhakrishnan சொல்கிறார்:

    i only wish long life for nanjil to give such golden stories and novels.i wonder how
    varied experiences he got in life. and such a skill to share with us.
    radhakrishnan, madurai.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s