தாய்மொழியாம் எங்கள்?? ‘தீதும் நன்றும்” .1.

‘தீதும் நன்றும்” (1)

கோவை ஹோப்ஸ் நிறுத்தத்தில், எனது பேருந்து வரவுக்காகக் காத்திருந்தேன். அந்தப் புள்ளியில் இருந்து நேராக அவிநாசி சாலையில் செல்லும் பேருந்துகளும் வலப் பக்கம் திரும்பி காமராஜ் சாலையில் போய் திருச்சி சாலையில் இணையும் பேருந்துகளும் உண்டு. எனக்கு அந்தப் பாதையில் போக வேண்டும்.

முன்மாலை நேரம். பள்ளி, கல்லூரி முடிந்து இருபால் மாணாக்கரும் வீடு திரும்பும் நேரம், மேய்ச்சல் முடிந்து திரும்பும் ஆவினங்கள் போல. பேருந்துகளில் பிதுங்கி வழிந்து வந்தனர். கூட்டம் குறையட்டும் என எட்டு மணி வரை காத்து நிற்கவும் இயலாது, பசியுடன். இரண்டு பேர் ஏற, எட்டுப் பேர் தொற்றினார்கள். எட்டுப் பேர் எனில் புத்தக மூட்டையுடன் பதினாறு பேர்கள் என்று பொருள். சற்றுநேரம் நெரிசல், மூச்சுமுட்டல், கசகசப்பு, இரைச்சல் எனும் நகரக் குணங்களைத் தாங்கிக்கொண்டால், வீடு என்பதோர் ஆசுவாசம் அல்லவா?

அறுவழிச்சாலை விரிவாக்கப் பணிகளுக்காக ஆயிரக்கணக்கில் வெட்டப்பட்ட நூறு வயதுள்ள மரங்கள் காற்றையும் நிழலையும் இல்லாமல் ஆக்கிவிட்டன. காத்து நிற்பது மேலுமோர் இறுக்கம்.

என் பக்கத்தில் மாணவன் ஒருவன் நின்றிருந்தான். முதுகில் சிந்துபாத்தின் கிழவன் போல் ஏறியிருந்த புத்தக மூட்டை, சீருடை, அரும்ப ஆரம்பித்திருந்த பூனை மயிர் மீசை எல்லாம் பன்னிரண்டாம் வகுப்பு வாசிப்பவனாக இருக்க வேண்டும் எனச் சாற்றியது.

நெருக்கடி நேரத்துக்காக, நகரப் பேருந்தாகத் திருப்பிவிடப்பட்ட பேருந்து ஒன்று வந்தது. வழக்கமாக அச்சடித்திருக்கும் பெயர்ப்பலகை, தடம் எண் எதுவும் இல்லை. தற்காலிகமாக அட்டையில் சாக்பீஸால் தமிழில் ‘ஒண்டிப்புதூர்’ என எழுதப்பட்டு இருந்தது. கூட்டம் சற்றுக் குறைவாகவும் இருந்தது. எனக்கந்தப் பேருந்து செல்லும். பக்கத்தில் நின்றிருந்த மாணவன் கேட்டான், ”இந்த பஸ் ஒண்டிப்புதூர் போகுங்களா?”

 

 

 

அனிச்சையாக, ”போகும்பா, ஏறு” என்று சொன்னவன் எண்ணிக்கொண்டேன், மாணவன் நம்மைக் கலாட்டா செய்கிறானோ என. முகத்தை மறுபடியும் பார்த்தேன். அப்படியும் தெரியவில்லை. சிலசமயம் வட நாட்டு, கேரளத்து மாணவர் பெயர்ப்பலகை வாசிக்கத் தெரியாமல் கேட்பதுண்டு. ஆனால் இது அதல்ல. உள்ளூர்த் தமிழ் முகம்தான். பேருந்தினுள்ளும் என் பக்கத்தில் நின்றான் பையன். இணக்கமாகவே கேட்டேன், ”தமிழ் வாசிக்கத் தெரியாதா தம்பி?” எனக்கவன் மறுபடி சொன்னான், ”செகண்ட் லாங்குவேஜ் பிரெஞ்சு சார்” என்று. தமிழ்நாட்டில், தமிழில் பெயர்ப்பலகை வாசிக்கத் தெரியாத தமிழ் மாணவன்!

இரண்டாம் உலகப் போர் நாட்களில், ஹிட்லர் படைகள் வெகுவாக முன்னேறிக்கொண்டு இருந்த காலத்தில், பாலக்காட்டின் கல்பாத்தி, நூரணி கிராமங்களில் கம்பி அளிபோட்ட வீட்டு முகப்பில் அறிவிப்புப் பலகைகள் தொங்கியதாம், ‘இங்கு ஜெர்மன் கற்றுத் தரப்படும்’ என்று. அதைப் பிழைக்கும் வழி என்றும் முன்யோசனை என்றும் கொள்ளலாம். வன்புணர்ச்சியைத் தவிர்க்க முடியாதெனில் அதில் இருக்கும் வன்மையைக் களைந்துவிடலாம் அல்லவா?

இன்று உலகப் போரும் இல்லை, பிரஞ்சுப் படைகள் முன்னணியிலும் இல்லை. எனினும் தமிழ்நாட்டின் எல்லா நகரத்து கான்வென்ட் பள்ளிகளிலும் தமிழைத் தவிர்த்துவிட்டு பிரஞ்சு கற்கலாம். தெரிந்துகொண்ட காரணம், பிரஞ்சு எடுத்தால் எளிதில் மதிப்பெண்கள் வாங்கலாம் என்பதுதானே தவிர, பிரஞ்சு இலக்கியங்களை நேரடியாகக் கற்றுக்கொள்ளலாம் என்பதால் அல்ல.

சமீபத்தில் உறவினர் வீடொன்றுக்குப் போயிருந்தேன். அங்கு ஏழாவது வாசிக்கும் மாணவி பள்ளிவிட்டு வந்தபோது, மாலை நாலரை மணி இருக்கும். ”காலம்பற எட்டு மணிக்குப் போவியா?” என்றேன். ”மேத்ஸ்ல கேளுங்க அங்கிள்” என்றது. சற்று யோசித்த பிறகே எனக்கு உறைத்தது. எட்டு மணி என்பது அவளுக்கு விளங்கவில்லை என்பது.

யாரை நொந்துகொள்வது?

ஆங்கிலத்தில் உரையாடுவது என்பது, மாணவருக்கு இயல்பாக இருக்கிறது. பேசுபொருளோ, சில்லறை வம்பு. ‘ஏன் இந்த தேசத்தை நேசிக்கிறேன்’ என்று அரைப் பக்கத்தில் ஆங்கிலத்தில் கட்டுரை எழுதச் சொன்னால், அவர்களின் ஆங்கிலப் புலமையும் தெரியவரும். Put எனும் வினைச்சொல்லின் இறந்த காலத்தை Putted என்று சொல்பவரே இன்று அதிகம். அவர் தமக்குள் நடத்தும் உரையாடலைத் தமிழில் பெயர்த்தால், அஃதோர் பொறுக்கித் தரத்தில் இருக்கும். தமிழில் பீ என்றோ, மலம் என்றோ சொன்னால் உமக்குச் சகிக்க ஓணாது. ஆனால், அவர்கள் நிமிடத்துக்கு இரண்டு shit சொல்கிறார்கள். உடலுறவு அல்லது புணர்ச்சி எனும் சொல்லுக்கு நிகரான புழங்குமொழிச் சொல்லை வீட்டில் பெற்றோர் அனுமதிப்பார்களா? ஆனால், மாணவர் மொழியில் அது தாராளமாகப் புழங்கலாம். ஏனெனில் அது ஆங்கிலமல்லவா? மலம் கேவலம். ஆனால், shit கௌரவம்! இது நமது மனப்பாங்கு.

வட மாநிலத்தவன் பஞ்சாபியோ, வங்காளியோ, பீகாரியோ, தாய்மொழியைப் புறக்கணித்து ஆங்கிலம் பயில்வதில்லை. நம்மைவிட அவர்கள் எதிலும் பின்னடையவில்லை. நாடாளுமன்றத்தில் வட மாநில உறுப்பினர்கள் தம் தாய்மொழியிலும் நமது உறுப்பினர்கள் ஆங்கிலத்திலும் உரை நிகழ்த்துகிறார்கள், மொழிபெயர்ப்பு வசதிகள் இருந்தும்கூட. உரை என்ன உரை, வெங்காயம். தமது கட்சித் தலைமையைப் பூப்போட்டுக் கும்பிடுவதற்கு மேலே ஒன்றுமில்லாத பொக்குக் கடலைகள்.

தமிழ்நாட்டு சங்கீத சபாக்களில் உட்கார்ந்திருப்பவர் அத்தனை பேரும் தமிழர்களாக, தமிழ் தெரிந்த குஜராத்தியாக, மார்வாரியாக இருந்தாலும் பாடகர் செய்வது ஆங்கிலத்தில் அறிவிப்பு- The next Krithi is a composition of Periasamy Thooran, in the raga Atanaa, set to Rupaka Thalam. பாடல் என்ன தெரியுமா? ‘காலகாலன் கயிலை நாதன், ஆலகாலம் அணிசெய் கண்டன்’.

தமிழ் தெரிந்தவர் உறுப்பினராக உள்ள சர்வதேசச் சங்கங்களின் நடைமுறை மொழி ஆங்கிலமாக இருக்கிறது. கோவையிலும் புதுச்சேரியிலும் இரண்டு சந்தர்ப்பங்களில் நான் அவர்களிடையே தமிழில் உரையாற்றியதுண்டு. யாருக்கும் வயிற்றுப்போக்கோ, மூலக்கடுப்போ ஏற்படவில்லை.

1966-ல், கல்லூரி நாட்களில் ‘இந்தி ஒழிக’ என்று கோஷமிட்டு, பிற கல்லூரி மாணவரை வகுப்புக்களைப் புறக்கணித்து சாலைக்குக் கொணர அலைந்தபோது, கெண்டைச் சதையில் போலீஸ் பிரம்படி வாங்கியதை இன்று நினைத்தாலும் சிரிப்பு வருகிறது. மொழிப் போர் வீரர் சான்றிதழுக்கும் துப்புக்கிடையாது. ஆனால், அன்று மாணவரைத் தூண்டியவர்களின் பேரன், பேத்திகள் இன்று Tamil பேசுவதில்லை. பேசினாலும்கூட, பழைய சினிமாக்களின் கிளப் டான்ஸ்காரிகள் பேசுவது போலிருக்கிறது, தே மதுரத் தமிழ் ஓசை.

தொலைக்காட்சி அறிவிப்பாளப் பெண்கள் தமிழ்த் தாயை வன்புணர்ச்சி செய்கிறார்கள். சமீபத்தில், இசையரங்கு ஒன்றில், பாடகி பாடிக்கொண்டு இருந்தாள். ‘எத்தால் ஈச்சை கொன்றாய் பெண்ணே!’ என்று. ஈயை எதை வைத்துக் கொன்றாய் என்றால் என்ன விளங்கும்? காதல் பாட்டு, சிருங்கார ரசம், பதம். அதிர்ச்சியாக இருந்தது. தமிழில் மொழிமாற்றிப் புரிந்துகொள்ள சில நொடிகள் பிடித்தது. ‘எத்தால் இச்சை கொண்டாய் பெண்ணே!’ என்பது மூலம்.

பழுத்தாலும் பாகல் கசப்புதான். மொழிச் சுத்தம் இல்லாவிட்டால் தேனிசையும் செவிக்குத் துன்பம் தான். காரணம், பாடலைப் புரிந்துகொள்ளத் தமிழ் தெரியாது. ஆங்கில எழுத்துக்களில் எழுதிவைத்து மனப்பாடம் செய்து பாடுகிறார்கள்.

தொலைக்காட்சி anchor கன்னிகளையும், தமிழில் நடிக்க வரும் வேற்று மாநிலப் பெண்களையும் உச்சரிப்புக்களில் எமது இளம் பெண்கள் நகலெடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். பெற்றோர் தமது பிள்ளைகளின் ஆங்கில உரையாடலில் காமத்தின் உச்சகட்டக் கிறக்கத்தில் சொக்கிக் கிடக்கிறார்கள்.

இரண்டு மலையாளிகள், கன்னடர்கள் சந்தித்தால் தமக்குள் தாய்மொழியில் உரையாடுகிறார்கள். 35 ஆண்டுகள் முன்பு, வேற்று மாநில மாநகர் ஒன்றில் தமிழ்ச் சங்கத்துக்கு வழி கேட்டேன் எதிர்ப்பட்ட தமிழரிடம். அவர் சொன்னார், ”அடுத்த கட்டடம், முதல் மாடிக்குப் போங்கள், நாலைந்து பேர் இங்கிலீஷிஸில் பேசிக்கொண்டு இருப்பார்கள். அதுதான் தமிழ்ச் சங்கம்” என்று. வேடிக்கைக்குச் சொல்லவில்லை, பின்பு எனக்கது அனுபவமாகியது உண்டு. இரண்டு தமிழர்கள் சந்தித்தால் தமக்குள் ஆங்கிலத்தில், தமிழ் சினிமா பற்றி உரையாடுகிறார்கள்.

கோவையில், 80 நாடுகளுக்குத் தமது தயாரிப்புகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனம் ஒன்றின் மேலாண் இயக்குநர், பயண இலக்கியங்கள் எழுதும் இயகோகா சுப்ரமணியம் அவர்களைச் சந்திக்கப் போயிருந்தேன். அவர் அலுவலக மேசை மீதிருந்த வாசகம்- ‘தயவு செய்து தமிழில் உரையாடுங்கள்’. நீங்கள் கேட்கலாம், ‘தமிழ் தெரியாதவர் என்ன செய்வார்?’ என்று. அந்த அறிவிப்பின் கீழே இருந்த ஆங்கில வாசகம்-‘If you can speak Tamil, please converse in Tamil!’

தாய்மொழியைக் கற்பதும் தாய்மொழியில் உரையாடுவதும், மொழிவெறி என்று சொல்வார்கள், தமிழ்நாட்டில் பிறந்து, தமிழ்நாட்டில் வளர்ந்து, தமிழ்நாட்டில் தொழில் புரிந்து, தமிழ்நாட்டில் வாழும் கனவான்கள் சிலர். அவர்கள் சொல்லும் ஒரு வாசகம், ‘After all, language is only a medium. ஆனால், கண்ணியமாக நாம் மறுக்க விரும்பும் விஷயமது. மொழி, தாய்மொழி, வெறும் ஊடகம் மட்டுமல்ல. அது நமது வரலாறு, பண்பாடு, முகவரி. தாய் என்பவள் வெறும் Carrier மாத்திரமா? தண்ணீர் என்பது வெறும் drink மாத்திரமா?

திருக்குறள் சொல்வது-

‘வாள்போல் பகைவரை அஞ்சற்க; அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு

வாள் போன்ற கொலைக் கருவியான பகைவர்களிடம்கூட அஞ்ச வேண்டாம். ஆனால், உறவு போன்ற பகைவர்களிடம் அஞ்சுங்கள். ஆம்! தாய்மொழியை வெறும் ஊடகம் என்பவரை நாம் பகைவர் என்பதா… உறவினர் என்பதா?

மேடைக்கு ஒன்றும் சுயத்துக்கு ஒன்றுமாக நமக்கு நியாயமும் பண்பாடும் மொழியும் இருக்கலாகாது.

சமீபத்தில் ஈழத்தின் மூத்த எழுத்தாளர் அ.முத்துலிங்கம் எழுதிய கட்டுரை ஒன்றில் சொல்கிறார். இராக், இஸ்ரேல், லெபனான், சிரியா ஆகிய நாடுகளில் 10 லட்சம் பேர் அராமிக் மொழி பேசுகிறார்கள். இஸ்ரேலில் 50 லட்சம் பேர் ஹீப்ரு மொழி பேசுகிறார்கள். மால்டாவில் மால்தீஷ் மொழியை 4 லட்சம் பேரும் மாலத்தீவில் திவேஹி மொழியை 3 1/2 லட்சம் பேரும், ஐஸ்லாண்டில் ஐஸ்லாண்டிக் மொழியை 3 லட்சம் பேரும் பேசுகிறார்கள். ‘பேசுகிறார்கள்’ என்பதல்ல விஷயம், தாய்மொழி எனும் கர்வத்துடன் பேசுகிறார்கள் என்பதுதான்.

ஆனால், நாமோ உலகெங்கும் 8 கோடிப் பேர் இருக்கிறோம். தொன்மையான, உலகத் தரத்து இலக்கியங்கள்கொண்ட, சீரிய பண்பாட்டுக் கூறுகள் கொண்ட நமது மொழி பற்றிய கர்வம் இல்லை என்பது ஒருபுறம்… உதாசீனம் என்பது மறுபுறம். நம்மில் பாதிப் பேர் கொச்சை ஆங்கிலத்தில் உரையாடி, நம்மை மேதைகள் என்று நிறுவும் முயற்சியில் இருக்கிறோம். ஒரு மொழியின் அழிவு, அந்த இனத்தின், பண்பாட்டின் அழிவு என்ற அறிவு நமக்கு இல்லை.

உலகில் ஏழாயிரம் மொழிகள் உண்டு எனவும் அதில் இரண்டாயிரம் மொழிகள் அழிவில் இருக்கின்றன என்றும் ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. அதில் இரண்டாயிரத்து ஒன்றாவது மொழியாகத் தமிழ் இருந்துவிடலாகா!

கர்நாடக சங்கீதத்தில், கோபால கிருஷ்ண பாரதியின் கீர்த்தனை ஒன்றுண்டு. முகாரி அல்லது சண்முகப்ரியா ராகத்தில் பாடுவார்கள்.

‘தந்தை தாயிருந்தால் உமக்கிந்த தாழ்வெல்லாம் வருமோ ஐயா’ என்று.

தந்தையும் தாயும் இல்லாமலே வேர் பதித்த அநாதி மொழி நமது. சுயம்பு, சுதந்திரமானது, தனித்துவம் கொண்டது.

ஆனால், ஏன் இந்தத் தாழ்வு அதற்கு என்று நமக்கு விளங்குவதில்லை.

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to தாய்மொழியாம் எங்கள்?? ‘தீதும் நன்றும்” .1.

  1. adhithakarikalan சொல்கிறார்:

    விகர்மாதிதன் மேல் ஏறிய வேதாளம், சிந்துபாத்தின் மேல் ஏறிய கிழவன் இல்லை….

    • ChandraWingchun சொல்கிறார்:

      உம் கருத்தை மறுத்துரைக்கிறேன். நாஞ்சில் சொல்வது சிந்துபாத்தின் கிழவன் தான்.

      http://en.wikipedia.org/wiki/Old_Man_of_the_Sea

      அல்லது அந்தக் கிழவனும் வேதாளமும் ஒன்றல்ல என்று சொல்ல வருகிறீரா? என்றால் விக்கிரமாதித்தன் மேல் ஏறிய வேதாளம், சிந்துபாத்தின் மேல் ஏறிய கிழவன் இல்லைதான். இருவரும் வேறு 😛

  2. S.M.Palaniswamy சொல்கிறார்:

    Here I am unable to write in Tamizh. Because I dont have a knowledge how to write in Tamizh. If I have I expose my feelings on Tamizh Knower and English speaker. OK.
    Kamal Hassan sonnathaip pola Nandri marantha Tamizharkal Nam. Aam Nandrikkum Englishil Thanks thanea.

  3. விஸ்வநாதன் சொல்கிறார்:

    நாடு,மொழி,இனம் எல்லாம் அரசியல் குறிசொல் ஆகி விட்டது ………

    எந்த தமிழனுக்கும் உணர்விலும் தமிழ் இல்லை
    உணவிலும் தமிழ் இல்லை ……………………..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s