ஐ.டி. செக்டர் ‘தீதும் நன்றும்” (2)

‘தீதும் நன்றும் (2)  

ஐ.டி. செக்டர்

ஏரிக்கரைப் படித்துறைகளில், நகரப் பேருந்து நிறுத்தங்களில், கல்யாண வீடுகளில், கருமாதிக் காடுகளில் இன்று சர்வ சாதாரணமாகக் கேட்கும் உரையாடல்களில் விப்ரோ, இன்ஃபோசிஸ், டிசிஎஸ், அக்சஞ்சர், காக்னசன்ட், ஸ்டேட்ஸ், லண்டன், ஆஸ்திரேலியா எனும் சொற்கள் விரவிக்கிடக்கின்றன. மத்தியதர வீடுகளில் பலர், மேற்கண்ட நிறுவனங்களில் பணி நிமித்தம் சென்னை, பெங்களூரு, ஐதராபாத், புனே, மும்பை எனப் பரவிக்கிடக்கிறார்கள். ஈழத் தமிழ்க் குடும்பங்களில் போரில் சாவைச் சந்திக்காத குடும்பம் இல்லை என்பது போல, கேரளத்தில் அரேபியாவுக்கு ஆள் அனுப்பாத வீடுகள் இல்லை என்பது போல, ஐ.டி. செக்டரில் வேலை செய்யும் இளைஞர் இல்லாத வீடுகள் எதிர்காலத்தில் அபூர்வமாகிப்போகும். அந்த வீடுகள் கலங்கிய தண்ணீர் தெளிந்தாற் போன்று தெளிந்து வரும். வீடுகள் கட்டப்படும், மனைகள் வாங்கப்படும், பெண் பிள்ளைகளுக்குச் சிரமமில்லாமல் திருமணங்கள் நடக்கும், நகைகள் வாங்கப்படும். புத்தம் புதிய 450 லிட்டர் ஃபிரிஜ்கள், எல்.சி.டி-கள், கம்ப்யூட்டர்கள், லேப்டாப்கள், ஆட்டோமேட்டிக் வாஷிங்மெஷின்கள் வாங்கப்படும். குடும்ப உறுப்பினர்களிடம் புது மெருகு, மினுக்கம், தளதளப்பு தெரியும்.

30, 40, 50, 60 ஆயிரங்கள் எனச் சம்பளம் வாங்கும் ஆடவரும் பெண்டிருமான இளைஞர் கேமரா வைத்த, ரெக்கார்டர் வைத்த, எஃப்எம் ரேடியோ வைத்த 30 ஆயிரம் விலையுள்ள செல்போன்கள் வாங்கிக்கொள்கிறார்கள். காதுகளில் ஐ-பாட் மாட்டிக்கொள்கிறார்கள், கழுத்தில் தொங்கவிட்டுக்கொள்கிறார்கள். பொறியியல் கல்லூரிகளில் ஐ.டி., இ.சி.இ, சி.எஸ், இ.இ.இ எனும் படிப்புகளுக்குள் நுழையப் பந்தயம் நடக்கிறது. கேம்பஸ் இன்டர்வியூ எனும் சொல்லாடல் கேட்கிறது. பெற்றோருக்கு மாதம் 5 ஆயிரம் அல்லது 10 ஆயிரம் அனுப்பிவிட்டு, சிவகாசி பட்டாசு வாங்கித் தினந்தோறும் கொளுத்துகிறார்கள்.

6 ஆயிரம் விலையுள்ள காலணிகள், 2 ஆயிரத்துச் சொச்சம் விலையில் சட்டைகள், ஜெர்கின் அல்லது ஓவர்கோட், டிஜிட்டல் கேமராக்கள், ஐ-பாட், பர்ஃப்யூம் தூறல் இல்லாதவர் இல்லை. பெண் பிள்ளைகள் சொந்த ஊரில் ஒருக்காலமும் அணியத் துணியாத உடைகளுடன் தாய்மார்கள் காணும் தூரத்தில் இல்லை. முன்புறம் வந்து விழுந்து முகத்தை மறைக்கும் தலைமயிரை ஒதுக்குவதற்கு ஒரு கை போதவில்லை. எல்லோரும் மாதம் ஒரு முறை ஊருக்கு வருவதற்கு என பெற்றோருக்கு எரிச்சல் ஊட்டாத உடைகள் வைத்துள்ளனர்.

முன்பெல்லாம் பேன்ட் அணிபவர் பக்கவாட்டுப் பைகள் இரண்டும் பின்பக்கப் பை இரண்டும் வைத்திருப்பார்கள். அவற்றுள் எனக்கு எப்போதும் இரண்டு பைகள் காலியாகவே இருக்கும். மலை, காடு ஏறுபவர்கள், மருந்துகள், ஆயுதங்கள், கயிறு, டார்ச், உணவு, தண்ணீர் எனப் பல சுமந்து செல்பவராதலால், 8 பைகள் வைத்து கால்சட்டை தைப்பார்கள். ஆனால், தகவல் தொழில்நுட்பத் துறை இளைஞர்களும் 10 பைகள் வைத்து அணிகிறார்கள். அவற்றுள் என்ன வைத்திருப்பார்கள் என்று எனக்குப் பெருவியப்பு.

ஆண்கள் முழுக்க முழுக்க மூடிக்கொள்ள, பெண்கள் முழுக்க முழுக்கத் திறந்து வருகிறார்கள். டார்ஜிலிங், குலுமனாலி, மவுன்ட் அபு, சிம்லா, முசோரி எனப் போய் காதல் செய்யும் நடிகன் பனியன், சட்டை, செஸ்ட் கோட், ஓவர் கோட் என்று அணிந்திருக்க, நடிகையோ உள்ளாடையோடு ஓடியாடுவதைப் போல.

மேலும் செய்திகளை நம்புவதானால், ஐ.டி. தொழில் இளைஞரிடையே திருமணத்துக்கு முன்பான கருக்கலைப்பு, திருமணமான சொற்ப நாட்களில் மண முறிவு, தற்கொலைகளின் அளவு எல்லாமே கவலை தருவதாக இருக்கிறது.

கல்லூரி மாணவருக்கு உரையாற்றும் சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம், ‘பாடப் புத்தக நெருக்கடிகளில் இருந்து சற்று தம்மை மீட்டெடுத்துக்கொள்ள நல்ல இசை கேளுங்கள், நல்ல புத்தகங்களை வாசியுங்கள்’ என்று சொல்வேன். விளைநிலத்துக்கு ஓய்வு கொடுக்க, மாற்றுப் பயிர் செய்வதைப் போன்றது அது. அல்லால் எதிர்காலத்தில் திடீர் ஆன்மிகவாதிகளிடமும், மனநல மருத்துவர்களிடமும் சரணடைய வேண்டியதிருக்கும்.

ஆதிகாலத்தில் சைகை மொழிகளிலும், நயன மொழியிலும், குறியீட்டு மொழியிலும் பகிர்ந்துகொண்ட மனிதன், பின்பு பண்பட்ட முழுமையான மொழிக்கு வளர்ந்தான். இன்று இளைஞர் எல்லாம் எஸ்.எம்.எஸ். மொழிக்கு மாறி வருகிறார்கள். க்ஷி 2 ணிகிஜி என்று போய்க்கொண்டு இருக்கிறது. இதில் செம் மொழி சாதிக்கப்போவது என்ன? மூடி திறந்துவைத்த பெட்ரோல் கேன் போல நேரம் ஆவியாகிக்கொண்டு இருக்கிறது.

பெங்களூரில் சாதாரணமாகத் தென்படும் ஹோட்டல்கள்கூட லஞ்ச் ரூ. 225/- என்று எழுதி அறிவிக்கின்றன. எனது பயண நாட் களில் அந்தத் தொகைக்கு 3 நாட்கள் சாப் பிடுவேன். எல்லாம் வலது கையில் கொடுக் கும் ஊதியத்தை இடது கையில் பறித்துக் கொள்ளும் சாதுர்யம். வாழ்க்கைத் தரம்உயர் கிறது என்றால், வாங்கும் திறன் அதிகரிக்கிறது என்பது மறுதலை அல்லவா?

நவம்பர் மாதத்தில் 2 தவணைகளாக, ஒரு வாரம் பெங்களூரில் தங்கி இருந்தேன். மூன்று பேர் சேர்ந்து ஆடவர் தனியாகவும் பெண்டிர் தனியாகவும் மாடிக் குடியிருப்பு ஒன்றை அங்கே வாடகைக்குப் பிடித்துக்கொள்கின்றனர். 2 பெட்ரூம் வாழ்வறை, அடுக்களை, கக்கூஸ்-குளிமுறி. வாழ்வறையிலேயே தலைக்கு ஒரு ஜோடி ஷூ, வார் செருப்பு, ரப்பர் செப்பல், உட்கார்ந்து ஷூ கட்ட ஒரு பிளாஸ்டிக் ஸ்டூல், ஆங்கில நாளிதழ் விரித்து அதன் மேல் அவரவர் சூட்கேஸ், 25 கிலோ சுமக்கும்படி ஏராளமான பைகளும் வார்களும் தொங்கும் முதுகுப் பை, தலைக்கு ஓர் அழுக்குக் கூடை, ஞாயிற்றுக்கிழமை துவைத்துத் தேய்த்து மடித்துவைக்க தலைக்கு ஒரு வேஸ்ட் கேரி பேக், வாரம் ஒரு முறை அப்படியே தூக்கி வெளியே வீச. டாய்லெட் உப கரணங்கள், பாடி ஸ்ப்ரே, பர்ஃப்யூம் எல்லோருக்கும் பொதுவான தண்ணீர் கேன், சுவரில் ஆணி அடித்து அதில் தொங்கும் அவரவர் தின்பண்டப் பைகள், அவரவர் செல்போன் சார்ஜர், ஆளுக்கொரு பக்கெட், மக், மலிவு விலைப் படுக்கை. சிலருக்கு தெருச் சந்தில் சாய்த்து நிறுத்தப்பட்டிருக்கும் இரு சக்கர வாகனமும் உண்டு.

தண்ணீர் தாராளம், தட்பவெப்பம் அற்புதம். காலை பல் தேய்த்துக் குளித்து உடை மாற்றி, ஏழே காலுக்கு இறங்குகிறார்கள். ஒரு கோப்பை சாய்கூடப் பருகாமல், சிலர் நடக்கும்போதே பிஸ்கட் அல்லது குக்கீஸ் கடித்துக்கொள்கிறார்கள். சில அலுவல கங்கள் மதிய உணவு அளிக்கின்றன. சில அளிப்பதில்லை. வெளி யில் மெஸ் கண்டுபிடித்துவைத்துள்ளனர். சிலவற்றில் சாம்பார், சிலவற்றில் மீன் குழம்பு, சிலவற்றில் ரசம் நன்றாக இருக்கும் என்கிறார்கள். மெஸ்களின் பெயர்கள் ஐந்து நட்சத்திரத்தில் உள்ளன. மதுரை கேட், இந்தியா கேட், பார்க் இன், தாஜ் இன் என. தென்னிந்திய, பஞ்சாபி, குஜராத்தி, ராஜஸ்தானி உணவகங்கள். சமோசா. சாண்ட்விச் பர்கர், பீட்ஸா இவற்றில் ஏதோ ஒன்று உணவு. மேலும் ஒரு பழச்சாறு.

இரவு ஏழரை மணிக்கு மேல் வீடு சேரும் வழியில் இரண்டு தோசை அல்லது சப்பாத்தி சாப்பிடுகிறார்கள். பலர் கையில் கேரி பேக்கில் வாங்கிக்கொள்கிறார்கள். ஆணோ, பெண்ணோ சிலருக்கு இரவு 10 மணி ஆகிறது. அவர்களுக்காக அறைவாசிகள் பார்சல் வாங்கி வைத்துக்கொள்கின்றனர். ஒரு மெஸ் அலுத்துப்போனால் – அலுத்துப்போகும் இரண்டு மாதங்களில் – மறு மெஸ். தமிழ்நாட்டுக்காரன் வாரக்கணக்கில் சோறு தின்பதில்லை.

பலர் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களிலும் வேலை உள்ளது என்று கூறி அலுவலகம் போகிறார்கள். வாங்கும் சம்பளத்துக்கான மலர்ச்சி மறைந்துபோன முகத்துடன் நடமாடுகிறார்கள். ஆணும் பெண்ணும் கைகோத்து நடப்பது அங்கு புதுமை இல்லை. நிறுவனம் தேர்ந்து, சம்பளம் அறிந்து, தோதான சாதி பார்த்தே காதலிக்கிறார்கள். காதல் ஒரு தற்காலிக பாலைவனச் சோலை. திருமணத்துக்குப் பிறகு தனித் தனியாக அதுவரை இருந்த சுழற்சி, கூட்டாக இயங்கும் சுழற்சியாக மாறுகிறது. இரவு 10 மணிக்குத் திரும்பும் காதல் கணவனும் மனைவியும் அதன் பின் என்ன சமைத்து, எப்படி உண்டு, எங்ஙனம் உறங்கி..?

ஆயாசமாக இருக்கிறது. எல்லாப் பையன்களும் நம் பையன்கள்தானே! எல்லாப் பெண்களும் நம் பெண்கள்தானே! கல்லில் இருந்து முறுகிய தோசை சுடச்சுட தட்டில் விழுந்திருக்கும்தானே! எல்லோருக்கும் ஆதரவாகப் பேசும், வேண்டியது செய்து கொடுக்கும் தாய்கள் இருப்பார்கள்தானே! சுழற்றி வீசும் உள்ளாடைகளைப் பொறுக்கித் துவைத்து, மடித்து வைப்பார்கள்தானே! காய்ச்சலுக்கும் வயிற்றுப்போக்குக்கும் வைத்தியம், பண்டுவம் பார்ப்பார்கள்தானே! வெய்தாய் நறுவிதாய் வேண்டளவு தின்பதாய் நெய்தான் அளாவி நிறையிட்டு அமுதம் அளிப்பார்கள்தானே!

அநேகமாக, எல்லா இளைஞர் வீட்டிலும் அவர்களது மிதக்கும் வாழ்வியல்தன்மை காரணமாக, டி.வி, ஃபிரிஜ், வாஷிங்மெஷின் கிடையாது. சுடு தண்ணீர்கூட வைத்துக்கொள்வது கிடையாது. செல்போன் ஒன்றுதான் புற உலகத்துடன் அவர்கள் தொடர்பு.

‘குழலும் வீணையும் யாழும் என்று இனையன இழைய

மழலைமென்மொழி கிளிக்கு இருந்து அளிக்கின்ற மகளிர்’ என கம்பன் மெச்சும் மகளிரைத்தான் இன்று நாம் குற்றம்சாட்டுகிறோம். கண்டபடி உடை அணிகிறார்கள், விருப்பம் போல் திரிகிறார்கள், தின்கிறார்கள், பார்களில் அமர்ந்து இரண்டு லார்ஜ் குடிக்கிறார்கள் என்றெல்லாம். இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்.

எப்போதும் பொதுமைப்படுத்துதல் நன்றன்று. மூத்து நரைத்துத் திரைத்த எந்த மாபெரும் அரசியல் வாதியும் செய்யாதவிதத்தில் ஆயிரக்கணக்கான கோடிகளில் அவர்கள் நாட்டுக்கு வருமானம் காண் கிறார்கள். எந்த வீர தீர சினிமாக்காரனும்எண்ணிப் பாராத விதத்தில் நேர்மையாக வருமான வரி கட்டு கிறார்கள். அவர்கள் எவருக்கும் முதலமைச்சர் கனவு இல்லை, எனினும் 16 மணி நேரம் தினமும்உழைக் கிறர்கள். மனதில்கொள்ளுங்கள் ஓவர்டைம் கிடையாது, ஓய்வூதியம் கிடையாது. காருண்ய அடிப்படையில் உறவினருக்கு வேலைவாய்ப்பு கிடையாது.

கிடைக்கும் விடுமுறைகளில் காலை உணவு, மதிய உணவு மறந்து நெடுந் தூக்கம் போடுகிறார்கள். அவர்களில் பெரும்பான்மை புகை பிடிப்பது இல்லை. டயட் பற்றி அக்கறை கிடையாது, ஏனெனில் உணவே டயட்தான்.

சிலர் படிப்பார்களாக இருக்கும், சிலர் பாட்டு கேட்பாளர்களாக இருக்கும், சிலர் சினிமா பார்ப்பார்களாக இருக்கும். அவர்களுக்குள் சாதி இல்லை, சமயம் இல்லை, அரசியல் இல்லை, ஏற்றத்தாழ்வுகள் இல்லை, நம்மைப் போன்று இறுமாப்பும் இல்லை.

என்றாலும், சமூகத்தின் ஒட்டுமொத்தமான அதிருப்தியைக் குறுகிய காலத்தில் சம்பாதித்துள்ள துர்ப்பாக்கியசாலிகள் இவர்கள். ஏனெனில், அவர்களது அதிநவீன நடை, உடை, தாராளமான செலவினம், எதையும் எதிர்கொள்ளும்போக்கு எல்லாம் சமூகத்தை எரிச்சலூட்டுவதாக அமைந்துள்ளது.

சொல்கிறார்கள்… தற்சமயம் ரயிலில் கூட்டம் அதிகமானதற்கு, விலைவாசி உயர்வுக்கு, சமூக ஒழுங்கு கெட்டுப்போனதற்கு, ஏற்றத்தாழ்வு அதிகரிப்பதற்கு அவர்களே காரணம் என்கிறார்கள். மெய்யாக இருக்கலாம்.

என்றாலும், எனக்கு அவர்கள் வாழ்முறை கவலை தருகிறது. இதே வேகத்தில் எத்தனை ஆண்டுகள் உழைக்க இயலும்? இன்றுள்ள உலகப் பொருளாதார வீழ்ச்சிச் சூழலில் என்ன ஆவார்கள்? 40 வயதில் ரத்த அழுத்தம், நீரிழிவு, மன அழுத்த நோய்களுக்கு ஆட்பட மாட்டார்களா? இன்றைய வருமானத்துக்குக் கொடுக்கும் விலை அதிகம் இல்லையா? அதற்கு என்ன மாற்று யோசிக்கப் போகிறோம்?

‘யானை மூத்திரத்தை நம்பிக் கட்டுச் சோறு அவிழ்த்தாற் போல’ என்றொரு பழமொழி உண்டு. தாராளமாகவும் நெடுநேரமும் அது ஊற்றிக்கொண்டு இருக்கும். அதற்குள் கட்டுச்சோறு அவிழ்த்துத் தின்று, கை கழுவி, வாய் கொப்பளித்து இரண்டு வாய் ஏந்திக் குடித்துக்கொள்ளலாம் என்று நம்பலாகாது எனும் பொருளில்.

ஆம், இது வெகுநாட்கள் இவ்வாறேபோய்க் கொண்டு இருக்க இயலாதுதான்!

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to ஐ.டி. செக்டர் ‘தீதும் நன்றும்” (2)

 1. Pingback: தீதும் நன்றும் – நாஞ்சில்நாடன் « ஆம்பல்

 2. சி. செந்தில் குமரன் சொல்கிறார்:

  அருமையானக் கட்டுரை ! தகவல் தொழில் நுட்பாளர்களுக்காக கவலை பட்டும், அவர்களின் தவறுகளை சுட்டி காட்டியும் எழுத பட்டது……
  நானும் தகவல் தொழில் நுட்பாளந்தான்!

 3. Naga Rajan சொல்கிறார்:

  அருமையானக் கட்டுரை

 4. கோவை பாலா சொல்கிறார்:

  வலிக்கும்
  உண்மை.
  எதிர்காலத்தை
  நினைத்தால்
  அச்சமூட்டுகிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s