கைம்மண் அளவு ..2

11
(உலகமெங்கும் பத்து கோடி மக்களின் தாய்மொழி,
தமிழ்நாட்டில் மட்டும் ஏழரை கோடி மக்களின் மொழி,
அதன் எழுத்தாளர் அகில இந்திய அரங்கில்,
பத்தாயிரம் மைல்கள் தாண்டிய அயல்மொழியில் உரையாற்றும் அவலம்.
மிக அவமானமாக இருந்தது எனக்கு.
தமிழ் மொழிக்கு என ஓர் நாடு உருவாக இருந்த கனவும்
நமது துரோகத்தால் நிர்மூலமாயிற்று.
தமிழ் அர்த்தமாகாத, ஆங்கிலமும் அர்த்தமாகாத அவையில்
என் கதை உரைக்கப் பெற்றால் என்ன?
வாசிக்கப்படாமற் போயினும் என்ன?)  ……நாஞ்சில் நாடன்
 IMG_0549
கடுங்குளிர் காலம். கிறிஸ்துமஸ் விடுமுறைகளை ஒட்டியே பொன்விழா கொண்டாட வேண்டும் என்று அரசுத்துறை நிர்ப்பந்தம் இருந்திருக்கும் போல.
கருத்தரங்கு நாட்கள் டிசம்பர் 25, 26, 27. மெர்க்குரி 7குசி காட்டியதால் அனைவருமே சட்டைக்குள் ஸ்வெட்டர், சட்டைக்கு மேலேயும் ஸ்வெட்டர், கோட்டு, கழுத்தைச் சுற்றி மப்ளர், சால்வை, தலைக்கு குல்லாய் என்று காட்சி அளித்தனர். பெரும்பாலானோருக்கு குல்லாய்க்கு வெளியே ஷெண்டி எனப்பட்ட சிறு குடுமி முனையில் முடிச்சுடன் நீட்டிக் கொண்டிருந்தது. அப் பனி மனிதர்களுக்கு இடையே, வெறும் கையில்லாத ஸ்வெட்டர் மட்டும் அணிந்த நான் நடுங்கிக் கொண்டிருந்தேன்.
பல ஆண்டுகள் முன்பு இது போன்றதொரு கடுங்குளிர் காலத்தில் டெல்லிக்குப் போன ராஜபாளையத்து எழுத்தாளர்கள் பன்மொழிப்புலவர் மு.கு.ஜகன்னாத ராஜா, குறிஞ்சிச் செல்வர் கொ.மா.கோதண்டம், பஞ்சாலைத் தொழிலாளியும் திடகாத்திரமானவரும் ஆன கொ.ச.பலராமன் ஆகிய மூவரில், அசட்டுத் துணிச்சலில் குளிராடைகள் இல்லாமல் ஊர் சுற்றிய பலசாலி கொ.ச.பலராமன் ஊர் திரும்பிய சில நாட்களில் குளிரின் தாக்குதலால் இறந்து போன செய்தி நினைவுக்கு வந்து அச்சுறுத்தியது. ஊர் திரும்பிய நானும் இருபத்தெட்டு நாட்கள் இருமினேன் என்பது கிளைக்கதை.
நான் வாழும் கோவையின் கோவைப்புதூர் பகுதியில் தட்பம் 23குசி இருக்கும்போதே, அதை ‘கோவையின் சுவிட்சர்லாந்து’ என்று கொண்டாடுகிறார்கள். நமக்கு அப்படித்தானே சொல்லிப் பழக்கம் – காலா காந்தி, தென்னாட்டு பெர்னார்ட் ஷா, வாழும் தொல்காப்பியர் என்று…
காசி விசுவநாதரின் தட்டகத்தில் – தட்டகம் எனில் ஆட்சி செல்லும் பிரதேசம் என்று பொருள் – இருப்பதால் உடம்புக்கு வெப்பமூட்டும் பானம் எதுவும் பருகலாகாது எனும் விரதத்தில் இருந்தேன் நான். மதுவில், மாமிசத்தில் இது போன்ற சூழலுக்குப் பொருந்தாத விரதங்கள்மேற்கொண்டு அல்லற்பட்டதுண்டு என் முன் அனுபவங்களில்.
படைப்பரங்கில் தமிழ், மலையாளம், கன்னடம், களி தெலுங்கு, கொங்கணி, சிங்க மராத்தி, ஒடியா, சோனார் வங்காளி, மணிப்பூரி, அஸ்ஸாமி, காக்பரோக், சந்தாலி, டோக்ரி, மைதிலி, நேபாளி, கஷ்மீரி, பிகாரி, ராஜஸ்தானி, பஞ்சாபி, சிந்தி, குஜராத்தி, உருது, சமஸ்கிருதம், ஆங்கிலம் முதலாய மொழிகளின் எழுத்தாளர்கள்.
இவருள் நானும், மலையாளக் கவிஞர் அனிதா தம்பியும், மற்றும் வங்காளி, மராத்தி, அஸ்ஸாமி, மணிப்பூரி எழுத்தாளர்களும் நீங்கலாக மற்ற எல்லோரும் இந்தியில் உரையாற்றினார்கள். எங்களுக்கோ ஆங்கிலம் தவிர வேறு போக்கில்லை.
பெரும்பாலான மொழிகளின் பேராசிரியப் பெருந்தகைகள் விட்ட ஆய்வுக் கொடுங்காற்று மூச்சுக்களால், ஆய்வு சீரணமாகாத அபான வாயுக்களால், மூச்சு முட்டிக் கிடந்தது அரங்கு. கவிச்சாயம் வெளிறிய கவிதைகள், உரைநடை போல் ஒலித்தன. படைப்பூக்கம் அற்ற தட்டையான சிறுகதைகள், தினசரிகளின் வார இணைப்பு சிறுகதைகள் போல் தொனித்தன. திருவிழா கடைத்தெருவில் விளம்பர நோட்டீசுகள் குப்பை போல இறைந்து கிடப்பது ஞாபகம் வந்தது.
விமானப் பயணம், மூன்று நட்சத்திர விடுதி, விலையுயர்ந்த சொகுசு உணவுகள். ஆனால், இந்திய இலக்கியத்தைப் பிரதிநிதிப்படுத்துபவை, வளமும் மழையும் குன்றி பாறிப் போன பயிரென வெளிறிக் கிடந்தன. எனினும் அவ்வவ் மொழிகளின் அதிகார சங்கு நெரிப்பு தாண்டியும் இந்திய இலக்கியம் உயிர்ப்புடன் இருப்பது நற்பேறு.
பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் மொழித்துறைப் பேராசிரியர்களாலும் ஆய்வு மாணவர்களாலும் நிறைந்திருந்த அரங்கில், தெரிந்த முகம் ஏதும் தென்படுமோ எனத் துழாவித் துழாவிப் பார்த்தேன். பகை இனம் என்றாலும் கூட, பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்துத் தமிழ்ப் பேராசிரியர் ஒருவராவது தென்பட மாட்டாரா என்று தேடினேன். அருகே அமர்ந்திருந்த தெலுங்குப் பேராசிரியரிடம் கேட்டபோது, ‘‘இருந்தார்கள்… ஆனால் இல்லை’’ என்றார் தமிழ் சினிமா வசனம் போல.
தொன்மையான, சிறப்பு வாய்ந்த அந்தப் பல்கலைக்கழகத்தில், வளமான தெலுங்கு மொழிக்கென ஒரு துறையும் ஆய்வு மாணவரும் இருந்தபோது, செம்மொழித் தமிழுக்கு என ஒரு நாற்காலி கூட இல்லை. இது நமது தமிழ் வாழ்ந்த நலம். நாடு திரும்பி வந்து விசாரித்தபோது சொன்னார்கள்… ‘‘முன்பு இருவர் இருந்தனர். அவருள் ஒருவர் ஓய்வு பெற்று விட்டார்; மற்றவர் வேறு வேலை கிடைத்துப் போய் விட்டார்’’ என்று.
நமது அரசுகளுக்கோ நகராட்சி மன்றத்துச் சுவர்களில் ‘தமிழ் வாழ்க’ என்று எழுதினால் போதும். நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தமிழில் எம்.ஏ., எம்.ஃபில்., பிஎச்.டி. பயின்று, இலக்கியத்திலும் மொழியியலிலும் ஆய்வுகள் மேற்கொண்டு, காருண்யம் மிக்க கல்வித் தந்தையரின் கலைக்கல்லூரிகளில் மாதம் எட்டாயிரமும், பத்தாயிரமும் வாங்கி அலைக்கழியும்போது, வட மாநிலப் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்து இருக்கைகள் தூசி படிந்து கிடக்கின்றன. நமக்கு உறைத்து என்ன பயன்? நாடாள்பவருக்கும், பல்கலைக்கழக வேந்தர்களுக்கும், துணைவேந்தர்களுக்கும், தமிழாய்வு நிறுவனங்களின் இயக்குனர்களுக்கும் யார் போய்ச் சொல்ல வல்லார்கள் கிளியே!
நான் கலந்து கொண்ட பன்மொழி எழுத்தாளர் சந்திப்பு துவக்கப்பெற்ற அதே நாளில், அதே வளாகத்தின் அடுத்த கட்டிடத்தில், பிரதமர் நரேந்திர மோடி வேறோர் துவக்க விழாவுக்கு வந்திருந்தார். கெடுபிடிகளுக்குக் கேட்பானேன்? செல்போன் என்ன, புத்தகங்களுக்குக் கூட அனுமதியில்லை. புத்தகம் என்பதும் பயங்கரமானதோர் ஆயுதம்தானே! எதிர்காலத்தில் இந்திய மாநிலப் பேரவை உறுப்பினர் கூட தோட்டா துளைக்காத கார், குண்டு துளைக்காத சட்டை, மோப்ப நாய்கள், வெடிமருந்து வல்லுநர்கள், சிறப்பு மருத்துவர் குழாம் இல்லாமல் வீட்டை விட்டு வெளியில் இறங்க முடியாத நிலை வரலாம். இந்திய மக்களாட்சியின் மாபெரும் வெற்றி அதுவாக இருக்கும்!
எனது நற்பேறு, மொத்த அரங்கிலும் அறிந்த முகம் ஒன்றெனக்குக் கிடைத்தது. அவர், மலையாளக் கவிஞர் அனிதா தம்பி. சில ஆண்டுகளுக்கு முன்பு, ஊட்டியில், மஞ்சனகொரே சிற்றூரில், ஸ்ரீநாராயண குருகுலத்தில் ஜெயமோகன் ஒருங்கிணைத்த தமிழ்-மலையாளப் படைப்பாளிகள் முகாமில், திருவாளர்கள் டி.பி.ராஜீவன், கல்பற்றா நாராயணன், காதர் ஆகியோருடன் கலந்துகொண்ட முன்னணி மலையாளக் கவிஞர் அவர்.
பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் காட்சிக் கலைகளுக்கான துறையின் அரங்கில் நடந்தது நான் மேற்சொன்ன சந்திப்பு. கடைசி அமர்வின் கடைசி எழுத்தாளனின் உரை எனது. ஆங்கில அகர வரிசைப்படி தமிழ், தெலுங்கு, உருது. தெலுங்கு, உருது எழுத்தாளர்கள் தங்கள் பயணச்சீட்டு நேரங்களைக் கணக்குக் காட்டி, முன்கூறாகத் தமது நேரங்களை மாற்றிக் கொண்டார்கள். நமக்கு அந்த சாமர்த்தியமும் போதாது.
பரிசளிப்பு விழாக்களிலும், கருத்தரங்க, கவியரங்க மேடைகளிலும், கடைசியாக வருபவர்களில் தமிழன் இருப்பான். சாகித்ய அகாதமி நிர்வாகிகளிடம் முன்பொரு முறை சொன்னேன் நான், ‘‘இந்த வரிசையைக் குலுக்கல் முறையில் தீர்மானிக்கலாமே’’ என்று. தமிழன் சொன்னால் இந்திய அரங்கில் எடுபடுமா என்ன? பந்தியிலேயே இடம் இல்லை என்றார்களாம், கிழிந்த இலையே போதும் என்றானாம்!
என் கதையை ஆங்கிலத்தில் மொழிய எழுந்தபோது, பெரும்பாலும் அரங்கு காலியாக இருந்தது. முன்தின இரவே பஞ்சப்படி-பயணப்படி பெற்றுக் கொண்டவர்கள் அவசரப்பணிகள் நிமித்தமும் ஆலய தரிசனங்களுக்காகவும் அகன்று கொண்டிருந்தனர். எனது அறைத் தோழராக இருந்த கொங்கணி எழுத்தாளப் பேராசிரியர் பிரகாஷ் பாரிக்கர், மும்பை வழியாக பனாஜிக்கு விமானம் பிடிக்கப் புறப்பட்டுப் போயிருந்தார்.
இந்த இடத்தில் ஒரு தகவல்… கொங்கணி என்பது கோவாவில் பேசப்படும் மொழி. இந்த மொழிக்கு வரி வடிவம் இல்லை. தேவநாகரி லிபியில் எழுதுகிறார்கள்; அல்லது கன்னட லிபியில். மற்றபடி ‘கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?’ என்ற பழமொழிக்கும் கொங்கணி மொழிக்கும் சம்பந்தமில்லை. பக்கத்து அறைக்காரர்களாக இருந்த தெலுங்குக் கவிஞர், பேராசிரியர் யாகூப்; கன்னடக் கவிஞர், பேராசிரியர் லக்குரு ஆனந்த் இருவருமே புலம் பெயர்ந்து விட்டார்கள். ஒரு ஆன்ம பலத்துக்காக, மலையாளக் கவிஞர் அனிதா தம்பி எனக்காகக் காத்திருந்தார்.இந்த எழுத்தாளர் சந்திப்பில் கலந்து கொண்டதன் மூலம் எனக்குள்ளிருந்த வினாக்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகியது. எவர் மீதும் பகையின்றிக் காழ்ப்பின்றிக் கசப்பும் இன்றி உங்களுக்கு அவற்றில் ஒன்றைப் பகிர்ந்து அளிக்கிறேன்.
இன்றைய தேதியில் இந்திய மக்கட்தொகையில் வங்காளி, மimage1 (2)ராத்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ், கொங்கணி, ஒடியா, குஜராத்தி, ராஜஸ்தானி, சிந்தி, அஸ்ஸாமி, மணிப்பூரி, நேபாளி, மைதிலி, டோக்ரி, போஜ்புரி, சந்தாலி, சமஸ்கிருதம், உருது, பஞ்சாபி, கஷ்மீரி, இன்ன பிற மொழி பேசுபவர் மக்கட்தொகை என்ன? இந்தி மட்டும் பேசுபவர் மக்கட்தொகை என்ன? ஏதோ ஒரு ஒத்து தீர்ப்புக்கு அல்லது கட்டப்பஞ்சாயத்துக்கு வந்த பல மொழியினரும் இந்தியிலும், வரமுடியாதவர் ஆங்கிலத்திலும் பரிமாறிக் கொள்ளும் முரண் எனக்குக் கவலை அளிக்கிறது. இந்தியோ, ஆங்கிலமோ அறியாத, திறன்மிக்க ஒரு மொழியின் படைப்பாளியின் கதி என்ன?
வாழ்க்கைச்சூழல், எனக்கு உத்தேசமான இந்தியும், ஓரளவு ஆங்கிலமும் கற்றுத் தந்தது. தெரியாதவர் வாய்ப்பு மறுக்கப் பெற்றவர்தானே! இதுதான் மதச்சார்பற்ற சமத்துவ மக்களாட்சிக் குடியரசின் மொழிச் சமூக நீதியா? அறுபது ஆண்டுகளுக்கும் முன்பு, அன்றைய இந்தியப் பிரதமர், அனைத்து இந்திய மொழிகளிலும் இலக்கியத்தை வளர்த்தெடுக்க அமைத்த சாகித்ய அகாதமியின் கனவு இப்படித்தான் மெய்ப்படுமா?
உலகமெங்கும் பத்து கோடி மக்களின் தாய்மொழி, தமிழ்நாட்டில் மட்டும் ஏழரை கோடி மக்களின் மொழி, அதன் எழுத்தாளர் அகில இந்திய அரங்கில், பத்தாயிரம் மைல்கள் தாண்டிய அயல்மொழி யில் உரையாற்றும் அவலம். மிக அவமானமாக இருந்தது எனக்கு. தமிழ் மொழிக்கு என ஓர் நாடு உருவாக இருந்த கனவும் நமது துரோகத்தால் நிர்மூலமாயிற்று. தமிழ் அர்த்தமாகாத, ஆங்கிலமும் அர்த்தமாகாத அவையில் என் கதை உரைக்கப் பெற்றால் என்ன? வாசிக்கப்படாமற் போயினும் என்ன?
இந்தச் சூழலில், தமிழின் சிறந்த படைப்புகள், பிற இந்திய மொழிகளிலும் அயல்மொழிகளிலும் அறிமுகமற்றுக் கிடப்பதன் சோகம் என்னுள் கவிந்தது. ‘மொழியாக்கம் செய்யப்பட்டு சென்று சேருவனவும், மொழியின் இரண்டாந்தர, மூன்றாந்தர ஆக்கங்களே பெரும்பாலும்’ எனும் உண்மை வலித்தது. ஆங்கிலம் வழி, பிற இந்திய மொழிகளின் வழி, வெளியுலகுக்கு, படைப்பாளர்களின் முகவர்களின் மூலம் சென்று சேரும் இரண்டாந்தர, மூன்றாந்தர தமிழ்ப்படைப்புகள் எம் மொழிக்குக் கொண்டு வந்து சேர்க்கும் தரச் சான்றிதழ்கள் மேலும் நம்மைச் சோர்வடையச் செய்கின்றன.
‘தமிழர் என்றொரு இனமுண்டு’ என்றும் ‘தனியே அவர்க்கொரு குணமுண்டு’ என்றும் முழங்கினார்கள், போன தலைமுறைப் புலவர்கள். அந்தத் தனிக்குணம் என்ன என்று அறியும் ஆர்வம் மீதுறுகிறது!
(கற்கலாம்…)
ஓவியம்: மருது
கைம்மண் அளவு 3 படிக்க:http://www.kungumam.co.in/#

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், குங்குமம் தொடர் கட்டுரைகள், கைம்மண் அளவு, நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , . Bookmark the permalink.